நிம்மதியான ஐந்து மணி நேர உறக்கத்திற்குப்பின் கண் விழித்ததும் வெங்கட் வாழ்க்கையில் ஏதோ சாதித்ததைப்போல உணர்ந்தான். வீட்டின் கதவை திறந்ததும் கருகும்மென்று இருந்தது, ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்த பக்கத்து வீட்டிலும் வெளிச்சம் இல்லை. சற்று யோசித்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான். இன்றாவது ஆக்சிஜன் கிடைக்குமா என எண்ணிக்கொண்டு கைபேசியில் உள்ள செயலியை துளாவ ஆரம்பித்தான். அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான ஆக்சிஜன், வைட்டமின் மாத்திரைகள், பாதுகாப்பு கவசங்கள் மற்றும் பல பொருட்களை பட்டியலிட்டு செவ்வாய் கிரகத்தின் தலைமை கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்பி வைத்தான்.
செவ்வாய் கிரகத்தில் சொந்த வீடு, ராபர்ட்டோ விண்வெளி நிலையத்தில் தலைமைப் பொறியாளர் வேலை, மிக முக்கியமாக இன்னும் ஐந்தாறு வருடங்களில் மனைவியையும் தான் வசிக்கும் இடத்திற்கு அழைத்து வருவதிற்க்காக கிடைத்த அனுமதி ஆகியவை வெங்கட்டின் கடந்த ஏழு வருட சாதனைகள். தான் பணிபுரியும் விண்வெளி நிலையத்திற்குப் பக்கத்தில் வீடு
வாங்குவது என்பது அவனால் நினைத்து கூட பார்க்க முடியாது. ஆகையால் செய்வாய் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் நாற்பதாயிரம் கிலோமீட்டர் தொலைவில் சதுர அடி ஐம்பது லட்ச ருபாய் கொடுத்து விண்கல வீட்டை வாங்கியிருந்தான். விண்வெளியில் காற்றின் அழுத்தம் சற்று பயமுறுத்தினாலும் செவ்வாய் கிரக அரசாங்கம் செய்து கொடுத்திருந்த பல அடுக்கு
பாதுகாப்பு மற்றும் அலுவலகம் சென்று வருவதற்காக கொடுக்கப்பட்ட பிரத்தியேக விண்கலம் இவை அனைத்தும் சேர்ந்து வெங்கட்டிற்கு அவ்வளவு தொலைவில் வீடு வாங்குவதற்கான தைரியத்தை கொடுத்திருந்தது.
சில நொடித் துளிகளில் அவனது வீட்டருகில் ஒரு விண்கலம் வந்தது.
‘துபாரே லதியோ?’ என்று சொல்லிக்கொண்டே நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி புன்னகையுடன் வந்து இறங்கினார்.
துபாரே லதியோ என்றால் செவ்வாய் கிரக மொழியில் ‘இன்றைய நாள் இனிதே அமையட்டும்’ என்று அர்த்தம்.
விண்கலத்தில் வந்த பெண்மணி சென்ற மாதம் வெங்கட் ஆர்டர் செய்திருந்த பொருட்களை கொண்டு வந்திருந்தார். வெங்கட் அவரை வரவேற்றான் “ரகித்திய சுபலேசி, மிஸாரோ குலத்தி’.
-அதன் பொருள் ‘உங்களை வரவேற்கிறேன், செவ்வாய் கிரகம் செழிப்பாகட்டும்’ என்பதாகும்.
செவ்வாய் கிரக அரசாங்கம் தன் கிரகித்திற்கென தனி மொழியை உருவாக்கி உள்ளது. எந்த நாட்டை சேர்ந்தவராயினும் அவரது மொழியை பயன்படுத்தலாகாது. செவ்வாய் கிரக அரசாங்கம் விதித்திருக்கும் மிக்க கடுமையான விதிமுறைகளில் இதுவும் ஒன்று. மீறினால் ஒரு மாதத்திற்கான ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்படும். வெங்கட் தனது பொருட்களை அடுக்கி வைத்து விட்டு தன்னம்பிக்கை மீட்டரை தலையில் பொருத்தினான்.
சில நொடிகளில் ‘ட்ரிங், ட்ரிங்’ என்ற சத்தம் வந்தது. இன்று பணிக்கு செல்வதற்கான மன நிலையில் இருக்கிறான் என்பதை அந்த சீன நாட்டு பெண்மணி உறுதி செய்தார்.
‘லசித் சிலாதோ’ என்று நன்றி சொல்லி அந்த பெண்மணி விடை பெற்றார்.
பிறகு, வெங்கட் தனது அலுவலகம் செல்வதற்கான பணிகளில் மும்முரமானான்.
வெங்கட்டின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டத்திலிருந்து பதிமூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணக்கம்பாளையம் என்ற கிராமம். படித்தது, வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில். சிறு வயதில் படிப்பை தவிர மற்ற எல்லா வேலைகளிலும் படு சுட்டி. அறுபது இன்ச் தொலைக்காட்சி பெட்டியை ஐந்து நிமிடங்களில் பிரித்து மேய்ந்து விடுவான். பத்து வயதில் ஆளுயர
ரோபோட்டை செய்து அனைவரையும் வியக்க வைத்தவன். அவனது பெற்றோர்களும் மதிப்பெண்களை பற்றியோ, பள்ளியைப்பற்றியோ அவனிடம் வலியுறுத்தவில்லை. மாறாக, அறிவியல் கண்காட்சிகளுக்கும், கடினமான பயிற்சி அரங்குகளுக்கும் அழைத்து சென்று உற்சாகப்படுத்தினார்கள். அவர்கள் குடுத்த ஊக்கமோ என்னவோ, இவ்வுலகில் தன்னுடைய பிறப்பின் அடையாளம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு நாளும் அவனுக்குள் ஓராயிரம் முறை வந்து சென்றது.அறிவியல் துறையின் மேல் இருந்த ஈடுபாடு, கடின உழைப்பு மற்றும் சரியாக அமைந்த சூழ்நிலைகள் அனைத்தும் சேர்ந்து வெங்கட்டை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. அதற்க்கான பரிசு, மனிதகுலத்திற்க்காக மகத்தான பணியை இன்று செவ்வாய் கிரகத்தில் செய்து கொண்டிருக்கிறான்.
நேரம் சென்று கொண்டிருக்க, வெங்கட் இன்றைய அலுவலக கோப்புக்களை தொடு திரையில் ஆராய்ந்து பார்த்தான். பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தில் வசிப்பதற்கு இடம் கேட்டு நூற்றி ஐம்பது விண்ணப்பங்கள் வந்திருந்தன. அந்த விண்ணப்பங்களை ஆராய்ந்து மனநிலை சோதனைக்கான தயாரிப்புகளை செய்ய வேண்டும். ராபர்டோ விண்வெளி நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிக்கு செய்தி அனுப்பி விட்டு தனது விண்கலத்தை செலுத்த ஆயத்தமானான். தன்னம்பிக்கை மிக்க காலைப்பொழுதில், வெங்கட்டின் விண்கலம் மனித குலத்தின் வாழ்வியலுக்காக செவ்வாய் கிரகத்தை நோக்கி சீறிப்பாய்ந்தது.
ஒரு உலகம், ஒரு மொழி, ஒரு இனம் என்ற அடிப்படைக் கொள்கையோடு செவ்வாய் கிரகம் அமைதியாக சூரியனை சுற்றிக் கொண்டிருந்தது.
நாமக்கல் முருகேசன்
murugesanme@gmail.com
1 எதிர் சப்தங்கள்:
//ஒரு உலகம், ஒரு மொழி, ஒரு இனம் என்ற அடிப்படைக் கொள்கையோடு//
பக்தாஸ் குரூப்பா?
Post a Comment