Oct 13, 2017

சில்லு சில்லாய் - போட்டிக்கதை 04

ஆகாஷ் விழித்துக் கொண்டான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் நிலையில் அவன் இல்லை. அந்த நிமிடம் வரை அவனுக்கு என்ன நடந்தது என்பதும் நினைவில் இல்லை. 1, 2, 3 என வரிசையாக அடுக்கப்பட்டிருந்த சிலிக்கான் சில்லுகள் 25 வரை அடுக்கப்பட்டு இருந்தன. மங்கலாக இருந்ததால் கண்களை இறுக மூடிக்கொண்டான். அவன் தலையைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த கலர் கலர் வயர்கள் கணினியுடன் இணைக்கப்பட்டிருந்ததால் ‘கீங்ங்... கீங்ங்...’ என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன. கணினியின் திரையில் அவனது மூளையின் வரைபடம் மின்னியது. அவனுக்கு அருகில் விஞ்ஞானி நீரவ் தன் விரல்களை மடக்கி தாடையில் குத்திக் குத்தி யோசித்துக் கொண்டிருந்தார். அந்த அறையின் கதவுக்கு மேல் ஒரு சிவப்பு விளக்கு அணைந்து அணைந்து எரிந்துகொண்டிருந்தது. ஐந்து வருடங்களாக ஆகாஷை இயந்திர மனிதனாக மாற்ற முயற்சித்து 25 முறை தோல்வியடைந்திருந்தார் நீரவ். அவனை இயந்திரமாக மாற்றி வருங்கால மனிதனுடன் தொடர்பு கொள்ள வைப்பதே நீரவின் ஆராய்ச்சி. அதற்கேற்ப பல சோதனைகளை அவன்மீது நடத்தி இடுப்புக்குக் கீழ் அவன் உடலை இயந்திரமாக்கி வைத்திருந்தார்.

ஆகாஷ் வேறு யாருமல்ல அவரது சொந்த மகன்தான். அவரது மனைவியையும் இப்படித்தான் ஆராய்ச்சிக்குட்படுத்தி அதில் நேர்ந்த எதிர்பாராத விபத்தில் பறிகொடுத்திருந்தார். அப்போது ஆகாஷுக்கு வயது மூன்று. மனைவிக்குப் பிறகு ஆகாஷை வருங்காலத்தை அறிந்துகொள்ளும் சூப்பர் மனிதனாக மாற்றுவது அவரது குறிக்கோளாகிவிட்டது. தனது 26வது ஆராய்ச்சியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கடினமாக உழைத்தார்.

உணவு மாத்திரை ஒன்றை வாயில் மென்றபடி வீட்டின் மொட்டை மாடியில் உலவிக் கொண்டிருந்தான் ஆகாஷ். அவன் எதைப் பற்றியும் யோசிப்பதில்லை. ஏனெனில் அவனுக்கு எந்த நினைவுகளும் இல்லை. எல்லாவற்றையும் அழித்திருந்தார் நீரவ். நினைவுகள் இல்லாத மனதில் யோசனை என்பது காற்று இல்லாத பலூன் போல வெறுமையாக இருக்கும். அவனும் அப்படித்தான் உணர்ந்தான்.

அப்போது அவனை நோக்கி ஜூஜூ வந்தது. ஜூஜூ அந்த ஆராய்ச்சிக் கூடத்திலும் வீட்டிலும் உதவியாக இருக்கும் ஒரு நாய் ரோபோ. எந்த வேலையைச் சொன்னாலும் செய்வது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் அதற்குப் பிடித்த வேலை ‘ஓகே ஸ்டார்ட்’ என்று சொன்னால் போதும் ஒன்... டூ... த்ரீ... என வரிசையாக எண்ணும். அந்த வீட்டில் ஆகாஷுக்கு இப்போது இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் ஜூஜூ மட்டுமே. ஆகாஷை நெருங்கிய ஜூஜூ ஏதோ ரகசியம் சொல்ல வருவதுபோல காதுக்கு அருகில் வந்தது.

அந்தநேரம் பார்த்து நீரவ் மொட்டைமாடிக்கு வந்தார். அவரின் கையில் இருந்த சிவப்பு லேசர் லைட்டைப் பார்த்து ஜூஜூ பயந்து ஒதுங்கியது. ஆகாஷிடம் அந்த லைட்டைக் காண்பித்து ‘நமது அடுத்த ஆராய்ச்சியை இது முடித்து வைக்கும்’ என்று சந்தோஷமாகச் சொன்னார். அவனது மூளையில் பொருத்தப்பட்டுள்ள சில்லுகளின் தன்மையைப் பார்த்துவிட்டு ஆராய்ச்சிக்குத் தயாராகி விட்டானா என்பதையும் உறுதி செய்துவிட்டுப் போனார்.

‘அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றை ஒன்றை உன்மீது செலுத்தி பரிசோதிக்கப் போகிறார் “danger... danger' என்று ஜூஜூ வித்தியாசமாக அலறியது. நீரவ் போன பிறகு தன்னுடைய முதுகில் இருக்கும் டிஸ்ப்ளேயில் பழைய நினைவுகளை ஓட விட்டு ஆகாஷிடம் காட்டியது. அதில் அவனது அம்மாவின் இறப்பு பற்றியும் அப்பாவின் நீண்ட நாள் ஆராய்ச்சி பற்றியும் ஜூஜூ போட்டுக் காட்டியது. அவன் முன்பு ஒரு மாயத்திரை தோன்றியது. அதில் அவனது அம்மா பேசிய வீடியோ ஒளிபரப்பானது. ‘ஆகாஷ்! உன் தந்தை என்னைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்ததுபோல உன்னையும் பயன்படுத்தி கொன்றுவிடுவார். ஜூஜூ உதவியால் தப்பித்துவிடு’ என்று சொல்லிவிட்டு மாயத்திரை மறைந்தது.

நீரவ் தன் அடுத்த ஆய்வுக்காக அந்த சிவப்பு ஒளிக்கற்றைகளுக்கு மின்சாரம் ஏற்றிக் கொண்டிருந்தார். வழக்கம்போல ஆகாஷுக்கு மயக்க மருந்தை அவர்தான் கொடுப்பார். இந்த முறை ஜூஜூவைக் கொடுக்கச் சொல்லிவிட்டு வேறு வேலையில் ஈடுபட்டார். ஜூஜூ உதவியால் மயக்க மருந்து உண்ணாமலே மயங்குவதுபோல் நடிக்க ஆரம்பித்தான் ஆகாஷ். நீரவ் அந்த சிவப்பு நிற ஒளிக்கற்றையை மின்காந்த அலைவரிசையுடன் இணைந்திருந்தார். அப்போது ஜூஜூ செய்த குளறுபடியால் ‘பீப்... பீப்...’ என்று சத்தம் எங்கிருந்தோ கேட்டது. கணினியை உற்று பார்த்தார். அதில் 'ERROR" என்று மின்னியது. சரியாக அந்த நேரம் பார்த்து அந்தச் சிவப்பு நிற ஒளிக்கற்றையும் அதிக மின்னேற்றத்தால் வெடிக்கும் நிலையை அடைந்திருந்தது. அதற்காகவே காத்திருந்த ஆகாஷும் ஜூஜூ சொல்லிக் கொடுத்ததுபோல ஒளிக்கற்றையை எடுத்து நீரவின் மேல் பாய்ச்சினான். அறைமுழுக்க சிவப்பு நிறம் பிரதிபலித்தது.

சில நொடிகள் கழித்து அந்த லேசர் சிவப்பு வெளிச்சம் மறைய ஆரம்பித்தது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிக்கான் சில்லுகள் அனைத்தும் சில்லுச் சில்லாய் நொறுங்கியிருந்தன. ஆகாஷும், ஜூஜூவும் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். ரத்தமும், சதையும் இல்லாமல் உலோகமாகி அசையாமல் நின்ற நீரவ், வருங்காலத்தைத் தொடர்பு கொண்டு ஒரு மனிதனுடன் பேசிக்கொண்டிருந்தார். அவரது கண்களில் அந்தச் சிவப்பு லேசர் லைட் ‘பளிச்... பளிச்...’ என மின்னியது.

- மனோ ரெட்
m.manored@gmail.com

0 எதிர் சப்தங்கள்: