Aug 17, 2017

கஃபீலும் வெங்கியும்

தலைப்பைப் பார்த்தவுடன் ‘மத நல்லிணக்க வகுப்பெடுக்க கிளம்பிவிட்டான்’ என்று நினைக்கத் தோன்றுமே. பதற வேண்டாம். அதுவன்று விவகாரம். இருவருமே பெங்களூரில் கார்போரேட் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள். வெவ்வேறு நிறுவனங்கள். தமிழர்கள். 

வெகு நாட்களுக்கு முன்பாக கஃபீல் அழைத்திருந்தார். 

‘அண்ணா..எங்க கம்பெனியில் ஸ்டேஷனரி பொருட்களைச் சேகரித்திருக்கிறோம்...யாருக்குக் கொடுக்கலாம்?’ என்றார். பெரும்பாலான நிறுவனங்களில் CSR (Corporate Social Responsibility) என்று வைத்திருக்கிறார்கள். சமூகத்திற்கு என ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம். நிதியும் நிறையச் சேரும். அதைக் கொண்டு மரம் வைப்பார்கள், தெருக்களைச் சுத்தம் செய்வார்கள் இப்படி சில பணிகளுக்குப் பிறகும் பணம் மிச்சமாகும். மிச்சமாகிற பணத்தை ஏதேனும் தொண்டு நிறுவனங்களை அழைத்துக் கொடுப்பார்கள் அல்லது திருப்பி அனுப்பி வைத்துவிடுவார்கள். 

கஃபீல் பணிபுரியும் நிறுவனத்தில் பணியாளர்களிடம் பணமாக வாங்காமல் விரும்புகிறவர்கள் ஸ்டேஷனரி பொருட்களாகக் கொடுக்கலாம் என்று வாங்கி வைத்திருந்தார்கள்.  முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள். பேனா, பென்சில், அழிப்பான், காகிதம், நோட்டுகள், வரைபொருட்கள் எனக் கலவையாக இருந்தன. இதற்கு முன்பாக இந்த மாதிரி யாருக்கும் வாங்கிக் கொடுத்ததில்லை. அனுபவமில்லையென்றாலும் சரி- எதையும் விட்டுவிடக் கூடாது. எங்கேயாவது யாருக்காவது பயன்படும்.

‘வாங்கிடுங்க கஃபீல்’ என்று சொல்லியிருந்தேன். 

‘ட்ரஸ்ட் பத்தி ஒரு பவர்பாய்ண்ட் கேட்கிறாங்கண்ணா’ என்றார். அனுப்பி வைத்ததை அவர் பட்டி பார்த்து டிங்கரிங் செய்து மேல் மட்ட ஆட்களுக்குக் காட்ட அவர்கள் ‘இவன் ஏதோ செய்யறான் போலிருக்கு’ என நினைத்திருக்கக் கூடும். நிசப்தம் அறக்கட்டளை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இனி அவர்கள் சமூகம் சார்ந்த தங்களது பணிகளுக்கு நம்மைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அவர்களுடைய ஒரு மணி நேரத்தை வாங்கித் தரச் சொல்லியிருக்கிறேன். நேரடியாகச் சென்று இதுவரை என்ன செய்கிறோம், எப்படிச் செய்கிறோம் என்பது பற்றியெல்லாம் விளக்கலாம் என்ற யோசனை இருக்கிறது. அநேகமாக இந்த மாதத்திற்குள் அதைச் செய்துவிட வேண்டும்.

எம்.ஜி.ஆர் காலனி மற்றும் அண்ணா நகர் காலனி இரண்டிலும் சேர்த்து இருநூற்றைம்பது குழந்தைகள் இருக்கிறார்கள். லம்பாடிகள் எனப்படும் ஊரோடிகளின் குழந்தைள். ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை படிக்கக் கூடிய மாணவர்கள் இவர்கள். அவர்கள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப பொருட்களைப் பிரித்துக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வாரத்திற்குள் முடித்துவிடுவோம். 


கஃபீல் போலத்தான் வெங்கியும். ஆனால் அவர் வேறொரு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தங்கள் நிறுவனத்திலிருந்து மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரை பயன்படுத்தப்பட்ட கணினிகளைப் பள்ளிகளுக்குத் தருவதாகச் செய்தி அனுப்பியிருந்தார். 

‘நல்லா வேலை செய்யுமாங்க?’ என்றேன். 

‘அட்டகாசமாக இருக்கும்’ என்றார். அப்படியானால் சரிதான். உடனடியாக ஏழு பள்ளிகளிடமிருந்து கோரிக்கைக் கடிதங்களைப் பெற்று அனுப்பி வைத்திருந்தோம். 

பத்து நாட்களுக்குப் பிறகு ‘உங்களுக்கு முப்பத்தேழு கணினிகள் ஒதுக்கப்பட்டிருக்கு’ என்றார். கணினிகளைப் பள்ளிகள் வாரியாகப் பிரித்து அவர்களே அழகாக பெட்டி கட்டி வைத்திருந்தார்கள். கஃபீலும், வெங்கியும் வெங்கி அவரவர் பொருட்களை வாகனத்தில் ஏற்றிவிட்டிருந்தார்கள். சனிக்கிழமை இரவு வந்து சேர்ந்தன. பொருட்களை இறக்கி அடுக்கி வைக்க நள்ளிரவு ஆனது. ஞாயிற்றுக்கிழமை காலையில் ஏழு அரசு பள்ளிகளுக்கும் தலா ஐந்து கணினிகளாகப் பிரித்துக் கொடுத்தாகிவிட்டது.

‘பழைய கணினிதானே?’ என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் சிறு உடைசல் கூட இல்லை. வெங்கி சொன்னவுடன் எனக்கும் கூட சற்று தயக்கமாக இருந்தது. ‘பழையன கழிதல்’ என்ற பெயரில் ஆகாவழிகளைத் தள்ளிவிட்டால் என்ன செய்வது என்கிற தயக்கம்தான். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை. மிகச் சிறப்பாக இருக்கின்றன. என் கணிப்புப்படி எப்படியிருந்தாலும் ஒவ்வொரு கணினியும் இருபதாயிரம் ரூபாய்க்குக் குறைவில்லாமல் மதிப்பிருக்கும். அப்படியென்ரால் ஒரு பள்ளிக்கு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கியிருக்கிறார்கள். பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வெகு சந்தோஷம். பயன்படுத்தப்பட்ட கணினிகள் கிடைக்கப்பெறுவதே கூட அவர்களுக்கு பெரிய காரியம்தான். கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு யார் தருகிறார்கள்? கணினிகளைப் பெற்றுக் கொண்ட தலைமையாசிரியர்களின் முகத்தைப் பார்த்திருக்க வேண்டும்.இந்த முறையும் சிறப்பாகச் செயல்படுகிற அரசு ஆரம்ப/நடுநிலைப்பள்ளிகளாகத்தான் தேர்ந்தெடுத்தோம். வடிகட்டித்தான் பள்ளிகள் முடிவு செய்யப்பட்டன.  என் பங்களிப்பு என்று பெரிதாக எதுவுமில்லை. பள்ளிகளிடம் கோரிக்கைக் கடிதங்களைப் பெற்றுக் கொடுத்தது, வாகன ஏற்பாடுகளைச் செய்தது என எல்லாவற்றையும் ஆசிரியர் தாமஸ் பார்த்துக் கொண்டார். நஞ்சப்பன் நிசப்தம் வாசகராம். அவருடைய வண்டிதான் பெங்களூரு வந்திருந்தது. வாடகை, சுங்கக்கட்டணம் என எல்லாமுமாகச் சேர்த்து எட்டாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டார். இரவு ஒன்பது மணிக்கு வண்டி வந்து சேர்ந்தது. வண்டியிலிருந்து பொருட்களை இறக்கி வைப்பது, பிரிப்பது என சகலத்தையும் எம்.ஜி.ஆர் காலனி சிங்கக்குட்டிகள் பார்த்துக் கொண்டார்கள். கஃபீலும், வெங்கியும் பெங்களூரில் அலுவலக அனுமதி உள்ளிட்ட எல்லாவிதமான செயல்களையும் மேற்கொண்டார்கள். இதை எழுத வேண்டிய தேவை இருக்கிறது. பெருநிறுவனங்கள் பலவும் இத்தகைய உதவிகளை வழங்குகின்றன. உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் உதவிகள் வந்து கொண்டேயிருக்கின்றன. கொஞ்சம் கவனித்து அவர்களிடம் பேசினால் உதவிகளைத் தேவைப்படுகிறவர்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்க முடியும். 

நிறைய வெங்கிகளும் கஃபீலும் தேவையாக இருக்கிறார்கள். முகம் காட்டாத மனிதர்கள் முகம் தெரியாத மனிதர்களுக்கு என வழங்குகிறார்கள். நாம் நேரடியாக உதவ முடியாத இடங்களில் இத்தகைய உதவிகளைப் பற்றிய தகவல்களை சரியான நபர்களுக்குத் தெரியப்படுத்தினால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம் ‘இவ்வளவுதானா?’ என்று நினைக்கும் ஒவ்வொன்றுமே ஏதாவதொரு மனிதருக்கு ‘அம்மாடியோ’வாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். எதுவுமே ‘இவ்வளவுதான்’ என்றில்லை. இங்கு எல்லாவற்றுக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது.  

ஏழு பள்ளிகளுக்குத் தலா ஐந்து கணினிகள் தவிர மீதமான இரு கணினிகளை எம்.ஜி.ஆர் காலனியில் அமைத்துக் கொடுத்திருக்கும் நூலகத்திற்கு வழங்கிவிடலாம் என்பது திட்டம். அந்த மாணவர்கள் மாலை நேரத்தில் பயன்படுத்தட்டும்.

கணினிகளை வழங்கிய Sasken நிறுவனத்திற்கும் எழுதுபொருட்களை வழங்கிய KPMG நிறுவனத்திற்கும் நன்றி. கஃபீலுக்கும் வெங்கிக்கும் தனியாக நன்றி சொல்ல வேண்டியதில்லை. இருவரும் செயல்பட்டிருக்கவில்லையெனில் இந்தப் புன்னகை சாத்தியமில்லை. 

4 எதிர் சப்தங்கள்:

viswa said...

இதனால் தான் பங்களூருவில் மழை பிய்த்து உதறுகிறது.

விஸ்வநாதன்

சேக்காளி said...

வழக்கம் போல்

அன்பே சிவம் said...

எளியோர்க்கு எல்லாம் எளிதே.
வாழ்க நற்பணி.

Anonymous said...

Great! Wishes to the good hearts!!