Jul 18, 2017

பரப்பன அக்ரஹாராவுக்குச் சென்றிருந்தேன்

பரப்பன அக்ரஹாராவில் மட்டுமில்லை பொதுவாகவே இந்திய சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு சகல வசதிகளும் கிடைக்கும் என்றுதான் சொல்வார்கள். பணமும் செல்வாக்கும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். யாரை அணுக வேண்டும் என்ற நெளிவு சுளிவு தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அவ்வளவுதான். பெரும் தொழிலதிபர்கள், மீடியா வெளிச்சம் இல்லாதவர்கள் கைதிகளாக இருந்தால் இவற்றையெல்லாம் கமுக்கமாக அனுபவித்துவிட்டு வெளியே வருகிறார்கள். சசிகலா மாதிரியானவர்கள் உள்ளே இருக்கும் சமயத்தில் டிஐஜி ரூபா மாதிரியானவர்கள் சிறைத்துறை அதிகாரிகளாக வரும் போது பல்லிளித்துவிடுகிறது.

சிறைச்சாலை என்பது தனி உலகம். சீருடை அணிந்த கைதிகள் மிகச் சாதாரணமாக வெளியில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வெகு காலமாக உள்ளேயிருப்பவர்களாக இருப்பார்கள். ‘இவர்கள் தப்பிக்க மாட்டார்கள்’ என்ற நம்பிக்கை வந்த பிறகு வெளி வேலைகளை அவர்களிடம் ஒப்படைப்பார்கள். சிறை வளாகத்தில் இருக்கும் தோட்டத்தைச் சுத்தம் செய்வது, சிறைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடைக்குச் செல்வது என்ற வேலைகளையெல்லாம் அவர்கள் செய்வார்கள். மாலை ஆனால் உள்ளே சென்று அடைந்து கொள்வார்கள். இது ஒரு வகையிலான சுதந்திரம். தமக்குத் தாமே சிறகுகளைக் கத்தரித்துக் கொண்டு சிறைப்பறவையின் சுதந்திரத்தை அனுபவிக்கிறவர்கள்.

வேறொரு வகையும் உண்டு. சிறைக்குள்ளேயே இருந்தபடி செல்போன், இணைய வசதி, பீடி, கஞ்சா என்று சகலத்தையும் அனுபவிக்கிற வகையறா. அவர்களுக்கு வெளியிலிருந்து சகலமும் உள்ளே அனுப்பி வைக்கப்படும்.

கடந்த சில நாட்களாக பரப்பன அக்ரஹாரா சிறை செய்திகளில் அடிபடத் தொடங்கிய பிறகு நேற்று மதியவாக்கில் சிறை வளாகத்திற்குச் சென்றிருந்தேன். முன்பு இருந்ததைக் காட்டிலும் கெடுபிடிகளை அதிகமாக்கியிருக்கிறார்கள். சிறை வளாகத்திற்குள் செல்வதற்கு ஒரு வலுவான காரணத்தைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன். அதைக் கன்னடத்தில் சொன்னால் உள்ளே அனுமதித்துவிடுவார்கள். இங்கே குறிப்பிடப்படுகிற சிறை வளாகம் என்பது முதல் நுழைவாயில். அதனுள்ளேதான் அலுவலர் குடியிருப்பு, குன்ஹா தீர்ப்பளித்த நீதிமன்றம், பரப்பன அக்ரஹாரா காவல் நிலையம் உள்ளிட்டவை இருக்கின்றன. அதன் பிறகு இரண்டாவது நுழைவாயில்தான் உண்மையான சிறை வளாகம். அதற்குள் அனுமதியில்லாமல் நுழைய முடியாது. முன்பு ஒரேயொரு முறை மட்டும் சிறைக் கண்காணிப்பாளரின் அறை வரைக்கும் செல்கிற வாய்ப்புக் கிடைத்தது.

இம்முறை முதல் நுழைவாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்த போது டிஐஜி ரூபாவை இடமாற்றம் செய்திருப்பதாகத் தகவல் பரவியிருந்தது. செய்தியாளர்கள் ஓரிருவர் இருந்தனர். சிறைக்காவலர்கள் கெடுபிடியைக் காட்டினார்கள். சிறை வளாகத்திற்குள்ளிருந்து கன்னடத்தில் கோஷம் எழுப்பட்டது. கைதிகள் எழுப்பிய கோஷம். அது ரூபாவுக்கு ஆதரவான கோஷமா எதிரான கோஷமா என்று புரியவில்லை. ஒரு காவலரிடம் ‘என்ன சார் இது?’ என்ற போது ‘அந்தம்மாவுக்கு சப்போர்ட் செய்யறாங்க’ என்றார். சிறைக்குள் அவர் வந்த பிறகு பல தகிடுதத்தங்களைப் பற்றி குரல் எழுப்பியிருக்கிறார். அதனால் அவருக்கு ஆதரவாக ஒரு கைதிகள் கூட்டமும் உருவாகியிருக்கிறது.

சிறைக்குள் நடைபெறும் தில்லாலங்கடித்தனங்களை ரூபா வெளியில் பேசத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அவரைப் பற்றி கன்னட சேனல்கள் ஒளிபரப்பை ஆரம்பித்திருந்தன. அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று கர்நாடகாவிற்கே பணிக்கு வந்தவர். வெகு நேர்மையான அதிகாரி என்றுதான் அவரைச் சொல்கிறார்கள். தனது மகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்ததிலிருந்து வணங்காமுடியாக கடந்த பதினாறு ஆண்டுகளில் மட்டும் முப்பது முறை பதவி மாறுதல் செய்யப்பட்டவர் என்பது வரை எல்லாமே அவரைப் பற்றிய நல்ல செய்திகள்தான். 

சித்தராமையாவுக்கு இது பெரும் தலைவலி. விரைவில் கர்நாடகத் தேர்தல் வரவிருக்கிறது. பாஜக ஆட்சியைப் பிடித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. ‘சிறைக்குள்ளேயே இவ்வளவு ஊழல்’ என்று எதிர்கட்சிகள் களமாடுவார்கள் என்பதால் இதைக் கட்டுக்குள் கொண்டு வந்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு. இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ரூபாவால் குற்றம்சாட்டப்பட்ட டிஜிபியை பணியிலிருந்து விடுவித்துவிட்டார்கள். சிறைக் கண்காணிப்பாளரையும் இடமாற்றிவிட்டார்கள். தற்போதையை சிறைக் கண்காணிப்பாளர் மீதான கடுப்பில் சிறைச்சாலையின் விவகாரங்களை எல்லாம் விசாரணைக் குழுவின் முன்பாக புகாராக அளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட கைதிகள் முப்பதுக்கும் மேலானவர்களை வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு இரவோடு இரவாக மாற்றிவிட்டார்கள். எல்லாம் பளிச்சென்று சுத்தமாகியிருக்கிறது.

இனி உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். கண் துடைப்பாக இல்லாமல் இருக்கக் கடவது.

சசிகலாவை உள்ளே அழைத்து வந்த போது ‘நாலு வருஷம் ஜெயிலுக்குள்ள இருந்தாங்கன்னா சிதைஞ்சுடுவாங்க இல்ல?’ என்று ஒரு காவல்துறையைச் சார்ந்த நண்பரிடம் பேசியது நினைவில் இருக்கிறது. ‘புழல் ஜெயிலுக்குக் கூட மாறுதல் கேட்கமாட்டாங்க பாருங்க’ என்றார். அப்பொழுது புரியவில்லை. இப்பொழுது புரிகிறது. ஐந்து அறைகளைச் சேர்த்து தனியொரு வளாகமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்களாம். சமையலுக்கு என்று இரண்டு பெண் கைதிகள். பணிவிடைகளுக்கு என்று இன்னும் சிலர் என்று சகல வசதிகள்தான். புழல் சிறைக்கு வந்தால் கூட எதிர்கட்சிகளுக்கு அனுதாபமான சில காவலர்கள் நிழற்படங்களை எடுத்து வெளியில் கசியவிடச் செய்யும் வாய்ப்பிருக்கிறது என்பதால் பெங்களூரு எல்லாவிதத்திலும் செளகரியம்.

நேரமிருக்கும் போது கூகிளில் ‘Sasikala Jail' என்று படங்களைத் தேடிப் பார்க்கலாம். 

சசிகலாவுக்கு பார்வையாளர் சந்திப்பில் எந்தக் கெடுபிடியும் இல்லை என்பதில் ஆரம்பித்து பார்வை நேர விதிகள் அவருக்கு தளர்த்தப்பட்டிருக்கின்றன என்றெல்லாம் ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகி அடங்கின. இப்பொழுது இந்தச் செய்தி. நிழற்படங்கள் வெளியாகியிருக்கின்றன. சலனப்படம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. சசிகலாவும் அந்த சலனப்படத்தில் இருக்கிறார். ஒற்றைக் கட்டில், ப்ளாஸ்டிக் சேர் என்று அவர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த ராஜ வாழ்க்கையோடு ஒப்பிடும் போது இவை ஒன்றுமில்லை- ஆனால் கைதி என்றபட்சத்தில் இவையெல்லாம் அதீதம். 

தொண்ணூறுகளில் செய்த தவறுக்கு இருபத்தைந்து வருடங்கள் வழக்கு நடத்தப்பட்டு தண்டனை என்று வழங்கப்படுமானால் அதனை எல்லாவிதத்திலும் மீறுவதற்கான சாத்தியங்களை நம் ஊர் சட்டங்களும் ஆட்சியாளர்களும் உருவாக்கித் தருகிறார்கள்.

அரை மணி நேரத்தில் இரண்டு காவலர்கள் ‘ஏனு பேக்கு?’ என்று என்னிடம் கேட்டுவிட்டார்கள். முன்பெல்லாம் அதே பகுதியில் மிகச் சாதாரணமாக வெகு நேரம் அலைந்திருக்கிறேன். யாரும் பதறியதில்லை. இப்பொழுது ஆட்சியாளர்களுக்கும் சிறைத்துறையினருக்கும் இருக்கும் அழுத்தம் புரிகிறது. 

‘ஏனு இல்லா’ என்றேன். 

அரசியலும் அதிகாரமும் சாக்கடை. அதில் சிங்கங்கள் தாக்குப்பிடிப்பதுமில்லை பன்றிகள் அனுமதிப்பதுமில்லை என்று யாரோ சொன்னது நினைவில் வந்து போனது.

‘பேப்பர்ல வர்றதெல்லாம் உண்மையா சார்?’ என்று ஒரு காவலரிடம் கேட்டேன். பதிலைச் சொல்லவா போகிறார்கள்? முறைத்தார்.

சிரித்தபடியே வண்டியை ஓட்டி வந்துவிட்டேன். 

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//கடந்த பதினாறு ஆண்டுகளில் மட்டும் முப்பது முறை பதவி மாறுதல் செய்யப்பட்டவர் என்பது வரை எல்லாமே அவரைப் பற்றிய நல்ல செய்திகள்தான்.//
இது நல்ல செய்தியா ய்யா?

Anonymous said...

"பரப்பன அக்ரஹாரா" சூப்பர் பேரு! பேருக்கேத்த நடைமுறை!

Aravind said...

"ஒன்னு ஒளிங்ஜது" நு அன்னைக்கு அன்னந் சொல்லி இருண்தார். but அது இன்னும் ஒளியாமல் இன்னொரு ரவுன்டு வரும் போல

GeoKaiser said...

Is this why Sidda has taken up Kannada pride these days - to deflect the attention from the real issues ? What is the ground situation there Mani - do people really oppose Hindi(in Metro), support a flag or is it just a twitterverse creation ?