Jul 19, 2017

வெளிநாட்டுக்கு அனுப்புவீர்களா?

சமீபத்தில் யதேச்சையாக சந்தித்துக் கொண்டோம்- கல்லூரிக்கால நண்பன். எத்தியோப்பியாவில் இராணுவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறானாம். எத்தியோப்பியா நாட்டைப் பற்றிப் பேசும் போதெல்லாம் மனம் பழைய நினைப்பைக் கட்டிக் கொண்டு சிறகடிக்கத் தொடங்கிவிடும். அது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஏழெட்டு எத்தியோப்பியர்கள் சேர்ந்து என்னை மண்டை காய விட்டுவிட்டார்கள். 

படிப்பை முடித்துவிட்டு விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ் என்ற நிறுவனத்தில் சேர்ந்திருந்தேன். ஹைதராபாத்தில் ஜாகை. அப்பொழுது மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளமாகக் கையில் வந்தது. என்னுடன் பி.ஈ படித்தவர்களில் பலரும் இருபத்தைந்தாயிரத்தைத் தாண்டிவிட்டார்கள். எம்.டெக் முடித்துவிட்டு இவ்வளவு குறைவான சம்பளத்தில் வேலையில் இருக்கிறோமோ என்று உள்ளம் வேகும். அறைத் தோழர்கள் இருவரும் கூட மென்பொருள் பொடியன்கள்தான். வெந்த உள்ளத்தில் வேலைப் பாய்ச்சினார்கள்.

பொறுத்தது போதுமென பொங்கியெழுந்து மென்பொருள் படிப்பைப் படிக்கத் தொடங்கியிருந்தேன். அப்பொழுதெல்லாம் வேலை எளிதாகக் கிடைத்தது. ஒரு நிறுவனத்தில் அழைத்திருந்தார்கள். 

நேர்காணலில் ‘வெளிநாடு அனுப்புவீர்களா?’ என்றேன். 

‘அதுக்குத்தான் வேலைக்கே எடுக்கிறோம்’ என்றார்கள். வெகு மகிழ்ச்சி. 

பணிக்குச் சேர்ந்த முதல் வாரத்திலேயே கடவுச் சீட்டைக் கேட்டார்கள். உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அன்று மாலை மேலாளர் அழைத்து ‘சோமாலியா போறீங்களா?’ என்று கேட்டார். அமெரிக்கா, இங்கிலாந்து என்று கனவு கண்டிருந்தவனுக்கு அது பொடனி அடிதான். பெருத்த ஏமாற்றம். முடியாது என்று சொன்னால் வேலையைவிட்டு அனுப்பிவிடுவார்களோ என்று பயமாக இருந்தது. இணையத்தில் அந்த நாட்டைப் பற்றித் தேடினால் இன்னமும் கூடுதலாகத்தானே புளியைக் கரைக்கும்? எலும்பும் தோலுமாக நாடு திரும்பப் போவதாக கனவு வந்தது. உடனிருந்த ஒருவனிடம் பயத்தைச் சொன்ன போது ‘ஓ திரும்பி வருவோம்ன்னு நம்பிக்கையெல்லாம் இருக்கா?’ என்றான். பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பாகத் தெரிந்தான் அந்தக் கிராதகன்.

அம்மா அப்பாவுக்கும் பயம்தான். மூட்டை கட்டுகிற சமயத்தில் மீண்டும் மேலாளர் அழைத்து ‘சோமாலியா வேண்டாம்...கென்யா போகணும்’. ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்கவில்லை. அப்பாடா என்றிருந்தது. ஆனால் அதுவும் நடக்கவே இல்லை. அது பெரிய கதை. தொடர்ந்து மூன்று முறை விமானம் ஏறுவதற்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்பாக பயணம் ரத்து செய்யப்பட்டு கடைசியில் அந்த ப்ராஜக்டையே கைவிட்டுவிட்டார்கள். 

அதன் பிறகுதான் எத்தியோப்பியா ப்ராஜக்ட்.

முதலில் எத்தியோப்பியர்கள் இந்தியாவுக்கு வருவார்கள் என்றும் அதன் பிறகு இங்கேயிருந்து நம்மவர்கள் அவர்கள் நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று ஒப்பந்தம். இந்திய ஐடி நிறுவனங்களைப் பற்றித்தான் தெரியுமல்லவா? ப்ராஜக்ட் கிடைப்பதாக இருந்தால் போதும். கல்லைக் கட்டிக் கொண்டு வறக்கிணற்றில் குதிக்கச் சொன்னாலும் குதிப்பார்கள். மேலாளர் அழைத்து ‘கோட் போட்டுட்டுத்தான் வேலைக்கு வரணும்..எத்தியோப்பியர்களிடம் நாசூக்காகப் பழக வேண்டும். அவர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் பாடம் நடத்தினார். வெளிநாட்டவர்களுடனான எனக்கு முதல் அறிமுகமும் அதுதான். அதுவும் க்ளையண்ட். வார இறுதியில் புது கோட் ஒன்றை விலைக்கு எடுத்து திங்கட்கிழமையன்று அணிந்து சென்றிருந்தோம். எத்தனை பேர்கள் வருவார்கள் என்று எங்களுக்கு இறுதி வரைக்கும் தெரியவில்லை. அப்பொழுது எங்கள் அலுவலகம் மிகச் சிறியது. யாரும் வந்திருக்கவில்லை. பதினோரு மணிக்கு திமுதிமுவென உள்ளே வந்தார்கள். பதினைந்து பேர்கள். திரும்பிய பக்கமெல்லாம் அவர்களாகவே தெரிந்தார்கள். 

முதலில் மேலாளர் அவர்களுடன் ஓர் அறையில் விவாதித்தார். அரை மணி நேரம் கழித்து எங்களை மட்டும் ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். 

‘இவ்வளவு பேர் வருவாங்கன்னு நமக்கு கம்யூனிகேஷன் இல்லை’ என்றார். அந்த ப்ராஜக்ட்டில் மேலாளரையும் சேர்த்து நான்கு பேர் இருந்தார்கள். எங்களிடம் ‘நீங்க மூணு பேரும் ஆளுக்கு ஐந்து பேர்களை பொறுப்பு எடுத்துக்குங்க..ஹாஸ்பிட்டாலிட்டிக்கு நீங்கதான் பொறுப்பு’ என்று அறிவுறுத்தினார். அவர்களே ஐந்து ஐந்து பேர்களாகப் பிரிந்து கொண்டார்கள். அவர்களிடம் தனித்தனியாக அறிமுகமாகிக் கொண்டோம். முரட்டுத்தனமான ஐந்து பேர்களை எனக்கு ஒதுக்கியிருந்தார்கள் அல்லது அவர்கள் எனக்கு முரட்டுத்தனமாகத் தெரிந்தார்கள். அவர்களது ஆங்கிலம் எனக்குப் புரியவில்லை. அருகாமையில் காதைக் கொண்டு போனால் துப்புவது போலவே பேசினார்கள்.

அவர்கள் வேலை பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இந்தியர்கள் மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்தார்கள். ‘எங்கே ஷாப்பிங் போகலாம்?’ என்று கேட்டார்கள். ப்ராஜக்ட் பற்றிக் கேட்டுவிடுவார்களோ என்று பயந்திருந்த எனக்கு அது நல்ல கேள்வியாகத் தெரிந்தது. மிகப்பெரிய மால் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அசத்திவிடுவதுதான் திட்டம். அலுவலக நேரத்தில் வெளியே சுற்றுகிற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லையல்லவா? பஞ்சாரா ஹில்ஸ்ஸில் ஒரு மால். பத்து மணிக்கு நுழைந்தவர்கள் எடுத்தவுடனேயே பிரிந்துவிட்டார்கள். ‘இங்கேயே இருக்கிறேன்’ என்று சொல்லியிருந்தேன். மணி ஒன்றைக் கடந்து இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. யாரையும் காணவில்லை. கிடைப்பதை உண்டுவிடலாம் என்று சாப்பிட்டுவிட்டு வந்து அமர்ந்த பிறகும் ஆட்களைக் காணவில்லை. இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டால் என்ன ஆகும் என்றெல்லாம் மனம் குழம்பியது. சற்று நடுங்கவும் தொடங்கியிருந்தேன். அவர்கள் யாரிடமும் இந்திய செல்போன் எண் இல்லை. அவர்களது எண் இங்கே வேலை செய்யவில்லை.

ஐந்தாறு தளங்கள் கொண்ட மால் அது. தேட வேண்டியதுதான். கீழேயிருந்து தேடல் படலம் ஆரம்பமானது. முதல் தளத்தில் ஒருவரைப் பிடித்தேன். ‘சார் டைம் ஆச்சு...நாம கிளம்பலாம்’ என்ற போது சிரித்தபடியே ‘ஓகே ஃபைன்’ என்றார். அவரை அழைத்துச் சென்று ‘இங்கேயிருங்க சார்..அடுத்தவங்களைக் கூப்பிட்டுட்டு வந்துடுறேன்’ என்று அடுத்தவரைக் கூட்டி வரும் போது இவர் மீண்டும் ஷாப்பிங் கிளம்பியிருப்பார். அடப்பாவி என்று நினைத்துக் கொண்டு இன்னொருவரை அழைத்து வரும் போது அங்கே யாருமே இருக்கமாட்டார்கள். 

என்னதான் செய்ய முடியும்? கண்ணாமூச்சி விளையாட்டாக இருந்தது.

‘ப்ளீஸ் சார்..இங்கேயே இருங்க’ என்று கெஞ்சினாலும் கேட்பதாக இல்லை. மண்டை காய்ந்ததுதான் மிச்சம். கடைசியில் ஐந்து மணிக்கு வேறு வழியே இல்லாமல் ஒவ்வொரு ஆளாகப் பிடித்து அவர்களையும் உடன் வைத்துக் கொண்டே அடுத்தவர்களைத் தேடத் தொடங்க வேண்டியதாகிவிட்டது. ‘ரெஸ்ட் ரூம் போகணும்’ என்று யாராவது கேட்டால் அவரை உள்ளே விட்டுவிட்டு மீதமிருப்பவர்கள் அங்கேயே காத்திருந்த சம்பவமெல்லாம் நடந்தது. கடைசியாக எல்லோரையும் திரட்டி அலுவலகம் வந்த போது ‘என்ன மணிகண்டன்.. ஒரு நாளையே வீணடிச்சுட்ட?’என்றார் மேலாளர். 

எல்லாம் விதி. நான் மட்டும்தான் வீணடித்தேன் என்று நினைத்தால் மற்ற இருவரும் அதைவிட அட்டகாசம். ஏழெட்டு மணி வரைக்கும் துழாவிக் கொண்டேயிருந்தார்களாம். 

அடுத்த நாள் பெரிய பிரச்சினையில்லை. அலுவலகத்திலேயே ப்ராஜக்ட் குறித்தான விவாதம் நடைபெற்றது. மூன்றாம் நாள் மீண்டும் ஷாப்பிங் என்று தலையில் குண்டைப் போட்டார்கள். ‘அடப்பாவிங்களா. இதுக்காகத்தான் இந்தியாவுக்கே வந்தீங்களா?’ என்று நினைத்துக் கொண்டோம். இந்த முறை நாங்கள் மூவரும் மேலாளரை ஓர் அறைக்கு அழைத்துச் சென்று ‘சார்..இங்க பாருங்க...நாங்க தனித்தனியாவெல்லாம் கூட்டிட்டு போக முடியாது...வேணும்ன்னா மூணு பேரும் சேர்ந்து அவங்க பதினைந்து பேரையும் கூட்டிட்டு போறோம்’ என்றோம். அவருக்கும் எங்களது நிலைமை புரிந்திருந்தது. ஒத்துக் கொண்டார்.

மிகப்பெரிய சதித்திட்டத்தை தீட்ட வேண்டியிருந்தது. ஒரே நுழைவாயில் கொண்ட மால் ஆக இருக்க வேண்டும். எஸ்கலேட்டர், படி என்று விதவிதமான வசதிகள் இருக்கக் கூடாது. கட்டிடத்தில் இரண்டு தளங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. இந்த விதிமுறைகளுக்கு ப்ராண்ட் ஃபேக்டரி ஒத்து வந்தது. இரண்டு தளங்கள். ஒரே நுழைவாயில். பதினைந்து பேர்களையும் அழைத்துச் சென்று உள்ளே விட்டுவிட்டோம். எங்களில் இருவர் ஆளுக்கொரு தளத்தில் நின்று கொண்டோம். எனக்கு நுழைவாயிலில் காப்போன் வேலை. யாரும் வெளியே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெற்றிகரமாக மூன்று மணி நேரத்தில் பணி முடிந்தது. அவர்களுக்கும் வெகு திருப்தி. எத்தியோப்பியா வந்தால் நன்றாக கவனித்துக் கொள்வதாகச் சொன்னார்கள். நல்ல மனிதர்கள்தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கவழக்கம்.

எத்தியோப்பியாவாசிகள் யாராவது இருக்கிறீர்களா? இது பற்றி நிறையப் பேச வேண்டியிருக்கிறது. 

அதே நிறுவனத்தில்தான் அடுத்த சில வருடங்களுக்குப் பணி புரிந்தேன். ஆனால் எத்தியோப்பியா செல்கிற வாய்ப்பு வருவதற்குள் இன்னொரு மேலாளரிடம் கெஞ்சிக் கூத்தாடி மலேசியா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன். வாழ்க்கை திசைமாறிவிட்டது.

6 எதிர் சப்தங்கள்:

Malar said...

உடனிருந்த ஒருவனிடம் பயத்தைச் சொன்ன போது ‘ஓ திரும்பி வருவோம்ன்னு நம்பிக்கையெல்லாம் இருக்கா?’ என்றான். பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பாகத் தெரிந்தான். // :) :)

ADMIN said...

உங்களுடைய முதல் வெளிநாட்டு அனுபவத்தை எதிர்பார்த்து ஏமாந்து போனேன். கடைசியில் நீங்கள் பிராஜக்டைவிட ஷாப்பிங் திட்டம் அருமையாக இருந்தது. ஹா..ஹா.. இன்னும் என்னென்ன அனுபவமெல்லாம் இருக்கோ... ! எழுதிகிட்டே இருங்க சார்.

MV SEETARAMAN said...

//மிகப்பெரிய சதித்திட்டத்தை தீட்ட வேண்டியிருந்தது....எங்களில் இருவர் ஆளுக்கொரு தளத்தில் நின்று கொண்டோம். எனக்கு நுழைவாயிலில் காப்போன் வேலை. யாரும் வெளியே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெற்றிகரமாக மூன்று மணி நேரத்தில் பணி முடிந்தது. // manikandan you had real life managerial experience, problems only gives way for solutions ... best wishes to you

அன்புசிவம் said...

உங்க பக்கத்துல Reader View வரமாட்டேங்குதே மணிகண்டன். இருந்தா கைபேசியில் படிக்கும்போது வசதியா இருக்கும்.

அனுசுயா said...

கடந்த நாலு வருசமா எத்தியோப்பியாதான் ஆனா அந்த ஊர்காரங்க ரொம்ப நல்லவங்க ஆனா இந்தி சினிமா பார்த்து இந்திய உடை உணவு மேல ரொம்ப மோகம் அதிகம்

kulo said...

sema interesting padikkumpothe sweat aagiramaathiri feel pannen. nalla eluthureenga!