May 24, 2017

உத்வேகம்

மாதேஸ்வரன் பற்றியும் அவரது சகோதரி பற்றியும் நிறையப் பேர் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. காலையிலிருந்து ‘யாருங்க அந்த கறிக்கடைப் பையன்’ என்று பலரும் கேட்டுவிட்டார்கள். ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகத்தான் அவர்கள் இருவரையும் தெரியும். ‘அக்காவின் படிப்புக்கு உதவி தேவை’ என்று அணுகினார்கள். அக்கா ஆசிரியர் படிப்புக்கு படித்துக் கொண்டிருக்கிறார். B.Ed. பல வருடங்களுக்கு முன்பாகவே அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள். இவர்கள் இருவருக்கும் துணையாக வயதான பாட்டி ஒருவர் உடன் வசிக்கிறார். பாட்டியால் வெளியில் சென்று வர முடியாது. 

மாதேஸ்வரனும் கல்லூரி மாணவர்தான். என்.சி.சியிலும் உறுப்பினர். 

சாலையோரமாக மேட்டில் கறிக்கடை போட்டிருக்கிறார்கள். கடையெல்லாம் இல்லை. நான்கு குச்சிகளை நட்டு கூரையாக தென்னம் ஓலையை வேய்ந்திருப்பார்கள். ஞாயிறன்று மட்டும்தான் கடை. சனிக்கிழமைச் சந்தையில் ஒரு வெள்ளாட்டை வாங்கி வந்து அதிகாலையிலேயே அக்காவும் தம்பியும் தொங்கவிட்டுவிடுவார்கள். தினசரி கடை இருந்தால் தொடர்ச்சியான வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். ஒரு நாள் மட்டும்தான் கடை என்பதால் வாடிக்கையாளர் பரப்பு குறைவு. சற்று மெல்லத்தான் விற்றுத் தீரும். மதியவாக்கில் கறி தீர்ந்த பிறகு கடையைச் சுத்தம் செய்துவிட்டுச் சென்றால் ஒரு வாரம் கழித்துத்தான் அடுத்த ஆடு. ஒரு ஆடு விற்பனையானால் வாரம் நானூறிலிருந்து ஐநூறு வரைக்கும் இலாபம் நிற்பதாகச் சொன்னார்கள். அந்தத் தொகை ஒரு வாரத்திற்கான குடும்பச் செலவுக்கான தொகை. 

சமையலுக்கும் போக்குவரத்துக்கு இந்த வருமானம்தான். இடையில் வேறு எந்தச் செலவு என்றாலும் ஒற்றை ஆட்டுக் காசுதான். விடுமுறை என்றெல்லாம் எதுவுமில்லை. அடுத்த நாள் பல்கலைக்கழகத் தேர்வு என்றாலும் கூட வருமானத்திற்காகக் கடை நடத்தியே தீர வேண்டும். நடத்துகிறார்கள்.

கடைதான் உலகம். அக்கா தம்பி இருவருக்குமே வெளியுலகம் தெரியாது. இருவருமே அதிகம் பேச மாட்டார்கள். கேள்வி கேட்டால் பதில் சொல்வார்கள். தலையைக் குனிந்து கொண்டு சிரிப்பார்கள். அவ்வளவுதான்.

‘உனக்கு என்ன தம்பி லட்சியம்?’ என்ற போது ‘டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் எழுதணும் சார்’ என்றான். 

கீர்த்தி நாராயணிடம் பேசினேன். மாதேஸ்வரனுக்கு அவர்தான் வழிகாட்டி. Mentor.கீர்த்தி ஐ.ஆர்.எஸ் அதிகாரி. கேரளாவில் பணியில் இருக்கிறார். மாதேஸின் அக்காவுக்கு வேறொருவர் வழிகாட்டியாக இருந்தார். அவர் அமெரிக்கவாசி. தொடர முடியவில்லை என்று தகவல் அனுப்பியிருந்தார். இனி வேறொருவரை அக்காவுக்கு வழிகாட்டியாக இணைத்து வைக்க வேண்டும். 

இந்த வாரமும் சந்தித்துப் பேசினோம். 

என்.சி.சி முகாமிலிருந்து ஒரு நாள் விடுப்பு கேட்டு வந்திருந்தான். இருவருமாக கறிக்கடையை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதே தலையைக் குனிந்த புன்னகை. அதிகமாக பேசிக் கொள்ளவில்லை. வியாபார நேரத்தில் கரடி புகுந்த மாதிரியாகிவிடும். ‘எப்போ ஃபீஸ் கட்டணும்’ என்று மட்டும் கேட்டுக் கொண்டேன்.


அக்கா தம்பி பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கவேயில்லை. ஆனால் விசாரித்தவர்கள் இவர்களைப் போன்ற இளைஞர்கள் அடுத்தவர்களுக்கு உத்வேகம் என்றார்கள். நிச்சயமாக உத்வேகம்தான். சுயமாக வளர்ந்து பொறுப்புணர்வோடு வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கும் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றிருக்கலாம். கேட்பாரற்றுத் திரிந்திருக்கலாம். ஆனால் படித்தாக வேண்டும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை தமக்களித்த எல்லா துக்கங்களையும் கீழே போட்டு மிதித்தபடியே வாழ்க்கையைப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்கும் இவர்களை மாதிரியானவர்கள் எல்லோருக்குமே உத்வேகம்தான்.

இன்னமும் அவர்கள் வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. செல்வார்கள். இப்பொழுதே எல்லாவற்றையும் எழுத வேண்டியதில்லை. வெல்லட்டும். அதன் பிறகு கொண்டாடுவோம்.