May 26, 2017

பாட்டையா

கோரமங்களா சிக்னலில் நிற்கும் போது பாட்டையாவிடமிருந்து அழைப்பு. ‘ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் போறியாடா?’ என்றார். அங்கு பார்த்திப ராஜா நடத்தும் நாடகத் திருவிழா நடக்கிறது. என்னால் முடியாது. அடுத்த வாரம் முழுவதும் பிரேசில்காரர்களிடம் மாரடிக்க வேண்டும். மாலை ஐந்து மணிக்கு அலுவல்கள் தொடங்கும். நள்ளிரவு தாண்டியும் தாளிப்பார்கள். 

பாட்டையா கோரமங்களாவில் அவரது இளைய மகள் வீட்டில் வசிக்கிறார். பாட்டையா பற்றி அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மனிதர். எண்பதைத் தாண்டிய குசும்பர். வாய் நிறையக் நக்கலும் கையில் பைப்புமாக காட்சியளிக்கிற தகவல் சுரங்கம்.


பதினேழு வயதில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு டெல்லி சென்றவர். பதினெட்டாவது வயதில் அங்கேயொரு திரைச்சங்கம் தொடங்கி, நாடகங்கள் நடத்தி என்று திருமணத்திற்கு முன்பாகவே டெல்லி வட்டாரத்தில் அவர் அடைந்தது வெகு உயரம். டெல்லி வட்டாரத்திலும் தமிழகத்திலும் அவருக்குத் தெரியாத அந்தக் கால ஆளுமைகளே இல்லை என்று சொல்லலாம். எவ்வளவு பெரிய மனிதர் என்றாலும் அவரைப் பற்றி அரை மணி நேரமாவது பேசுகிற அளவுக்கு பாட்டையாவிடம் அறிமுகமிருக்கும்- அரசியல்வாதி, சினிமாக்காரர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் என்று இவ்வளவு மனிதர்களுடன் பழகியவர் நம்மிடம் சரிக்குச் சமமாக அமர்ந்து பேசுகிறார் என்பதே கெளரவம்தானே?

கடந்த வாரத்தில் அலைபேசியில் பேசும் போது ‘பாட்டையா...நீங்க எப்போ ஃப்ரீயா இருப்பீங்க?’ என்றேன்.

‘ஒரு நாளைக்கு இருபத்தைஞ்சு மணி நேரமும் ஃப்ரீதான்..நீ எப்போடா வர்ற?’என்றார். 

கோரமங்களா சிக்னலில் இருந்து எட்டிப் பிடித்த மாதிரிதான். திருப்பத்தூர் சம்பந்தமாக அவர் பேசியவுடன் வண்டியை அவரது வீட்டிற்குத் திருப்பிவிட்டேன். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தோம். அவர்தான் பேசினார். நான் அவ்வப்போது கேள்விகளை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தேன். ஏழாவது மாடி பால்கனியில் அவருக்கென்று ஓரிடம். இரண்டு மூன்று நாற்காலிகள். பக்கத்திலேயே புகையிலை சமாச்சாரங்களை வைத்துக் கொண்டு பக்கத்து மாடிகளில் தெரிகிற பெண்களை சைட் அடித்துக் கொண்டிருந்தார். 

‘ஜெயகாந்தன் வீட்டு மாடி மாதிரி’ என்றேன்.

‘அவர் ரூம்ல நெடியடிக்கும்டா..இங்க அடிக்காது’ என்றார்.

வெங்கட் சாமிநாதனில் ஆரம்பித்து சிவாஜி கணேசன் வழியாக ரஜினி வரைக்கும் பேசினார். ஒவ்வொன்றுமே சுவாரசியம்தான்.

பாட்டையாவுக்கு சமீபத்தில் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். சமீபத்தில் என்றால் நவம்பர் ஒன்பதாம் தேதி. டீமானிட்டைசேஷன் அறிவிக்கப்பட்ட அடுத்த நாள். நாடே பரபரப்பாகியிருந்த சமயம். மயக்க மருந்து கொடுத்துப் படுக்க வைத்திருக்கிறார்கள். மயக்கம் வந்துவிட்டதா என்று தெரிந்து கொள்ள மருத்துவர் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அத்தனை கேள்விகளுக்கும் நக்கலான பதில்கள்தான். ‘உங்க பேரைச் சொல்லவே இல்லையே’ என்று மருத்துவர் கேட்ட போது ‘ஐ ஆம் நரேந்திர மோடி’ என்றிருக்கிறார். ஒருவேளை மயக்க மருந்துதான் குதர்க்கமாக வேலை செய்துவிட்டதோ என்ற பதற்றத்தில் ‘என்ன சொன்னீங்க’ என்று அதிர்ச்சியோடு கேட்டிருக்கிறார் மருத்துவர். முகத்தில் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் கருவியை நீக்கிவிட்டு தெளிவாக ‘ஐ ஆம் நரேந்திர மோடி..பிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா’ என்றாராம். அத்தனை நக்கல் பார்ட்டி நம் பாட்டையா.

அறுவை சிகிச்சை முடிந்து படுக்க வைத்திருந்த போது ‘ஓ நீங்கதானா அது’ என்று நிறையப் பேர் வந்து பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். எனக்கு சிரிப்பு நிற்கவேயில்லை. எண்பது வயதில் இவ்வளவு குசும்பு என்றால் முப்பதுகளில் எப்படி இருந்திருப்பார்? அடுத்த முறை சந்திக்கும் போது அவருடைய கேர்ள் ப்ரெண்ட்ஸ் பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு வந்து எழுதுகிறேன்.

ஒருநாள் மகியிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு கேலக்ஸி இருக்கு தெரியுமா?’என்றான். கூகிளில் தேடிப் பார்த்து ‘நூறு பில்லியன்’ என்றேன். ‘எங்கப்பனுக்குத் தெரியாத விஷயமே இல்ல போலிருக்கு’ என்று அவன் நம்பியிருக்கக் கூடும். அவ்வப்பொழுது அவனை ஏமாற்றிவிடுவேன். பேசிவிட்டு யோசித்துப் பார்த்தால் நூறு பில்லியன் கேலக்ஸிகளில் ஒற்றைப் புள்ளி நம்முடைய பால்வெளி (Milkyway).அதில் இத்தினியூண்டுதான் சூரிய குடும்பம். இத்தினியூண்டு சூரிய குடும்பத்தில் சோட்டா பையன் பூமி. அதில் இந்தியா, பெங்களூரு, ஏஈசிஎஸ் லேஅவுட் என்று பார்த்தால் தூசி மரியாதை கூட நமக்கு இல்லை. அதற்குள்ளாக எத்தனை பந்தா? எத்தனை அழிச்சாட்டியம்? எத்தனை லோலாயம்? 

பாரதி மணி மாதிரியான பெரியவர்களிடம் பேசும் போது ‘நாமெல்லாம் எந்த மூலைக்கு?’ என்கிற எண்ணம் இன்னமும் துலக்கம் பெறுகிறது. தூசியிலும் தூசி. அத்தனை அனுபவங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்.  நேரம் மட்டும் இருந்தால் போதும். எவ்வளவு வேண்டுமானாலும் அவரிடம் பேசிக் கொண்டிருக்கலாம். அவ்வளவு சுவாரஸியங்கள்.

அந்தக் காலத்தில் அவருக்கிருந்த தொடர்புகளுக்கும் நட்பு வட்டாரத்திற்கும் எவ்வளவோ சொத்து சேர்த்திருக்க முடியும். ‘அதைப்பத்தியெல்லாம் எனக்கு எந்த யோசனையுமில்லடா..வாழ்க்கையை வாழ்ந்திருக்கேன்’  என்கிறார்.

எண்பதைத் தாண்டிய வயதில் ‘I am ready for departure' என்கிற மனிதர் ‘வாழ்க்கையை வாழ்ந்திருக்கேன்’ என்று பைப்பில் புகையை இழுத்தபடியே திருப்தியாகச் சொல்வதுதான் அடுத்த தலைமுறைக்கான பாடம். இன்னும் எத்தனை கோடி பேர் வந்தாலும் இந்த பிரபஞ்சம் அவர்களையெல்லாம் இழுத்து தம்மில் புதைத்தும் எரித்தும் கொண்டேயிருக்கும். பதினைந்து பில்லியன் ஆண்டுகளாக பிரபஞ்சம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. நாம் அதிகபட்சமாக நூறு ஆண்டுகள் வாழ்வோமா? அதை முழுமையாக வாழ்ந்துவிட வேண்டும். நரை விழுந்த பருவத்தில் யோசித்துப் பார்க்கும் போது ‘வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்திருக்கிறேன்’ என்கிற திருப்தி நமக்கு வேண்டும்- பாட்டையா மாதிரி.

குமுட்டி அடுப்பைப் போல இடைவிடாமல் பற்ற வைத்துக் கொண்டிருக்கும் பைப் பற்றிக் கேட்டேன். ஒரு காலத்தில் நிறைய சிகரெட் அடிப்பாராம். ‘அதுல ஒரு பிரச்சினை இருக்குது..ஓசி கொடுக்கணும் இல்லன்னா கடன் கொடுக்கணும்..இதுல அப்படியில்ல எச்சின்னு யாரும் கடன் கேட்க மாட்டாங்க’ என்றவர் ‘ஓராள் மட்டும் இதைக் கடன் வாங்கி உறிஞ்சியிருக்கிறார்’ என்றார். யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

‘தலைவா...காலா’ என்றார்.  

எனக்கு பாரதி மணியும்தான் காலாவாகவும் தலைவாவாகவும் தெரிகிறார்.

பாட்டையாவின் புத்தகம் புள்ளிகள் கோடுகள் கோலங்கள். கிட்டத்தட்ட அவருடைய சுவாரஸியமான சுயசரிதை.