ஆறாம் வகுப்பில் வெங்கடாசலம் வாத்தியார் அறிவியல் பாடம் நடத்தினார். எப்பொழுதும் வெற்றிலைக் குதப்பலோடுதான் இருப்பார். ஜோசியகார வாத்தியார் என்ற பெயரும் அவருக்குண்டு. எங்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமணத்திற்காக அவர்தான் பொருத்தம் பார்த்ததாகச் சொல்வார்கள். சற்று முரட்டு ஆசாமி. ஆளும் அவரது காலா நிறமும் வெற்றிலையும் சற்று பயப்படச் செய்யும். சட்டென்று கைநீட்டி விடுவார்.
ஒரு குச்சியும் மர நாற்காலி மீது அமர்வதற்காக விரிப்பதற்கான ஒரு சிறு துண்டும் இல்லாமல் வகுப்பறைக்கு வரவே மாட்டார். மணியடித்தவுடன் வகுப்புத் தலைவன் ஓடிச் சென்று ஆசிரியர்கள் அறையிலிருந்து இந்த வஸ்துகளை எடுத்து வந்துவிட வேண்டும். ஆரம்பத்தில் அப்பாவுக்கு நண்பர்தானே என்று சற்று இளப்பமாக இருந்துவிட்டேன். ஆனால் எதற்கெடுத்தாலும் என்னைத்தான் இழுத்து வைத்து கும்முவார். ஏதாவது கேள்வி கேட்டுவிட்டு ‘டேய்..வாசு பையா....பதில் சொல்லுடா’ என்பார். பதில் தெரியாமல் எழுந்து நின்றால் அந்தக் குச்சிக்கு வேலை வைத்துவிடுவார். பக்கத்தில் இருக்கும் அப்துல் அஜீஸ் காணாத நாய் கருவாட்டைக் கண்டமாதிரி தலையைக் குனிந்து கெக்கபிக்கே என்று சிரிப்பான்.
‘இந்த ஜோசியகாரன் மண்டையை உடைக்க வேண்டும்’ என்று பற்களை வெறுவிக் கொண்டே அழுவேன். வீட்டிலும் சொல்ல முடியாது. அங்கேயும் கும்மு விழும். அப்பாவுக்கு நண்பர் நமக்கு எதிரி- ‘இது என்னடா டீலிங்’ என்றபடி குழம்பியே கிடக்க வேண்டியதுதான். அநேகமாக ‘பையனை கவனிச்சுக்க’ என்று அப்பா சொல்லியிருக்க வேண்டும். அதை வேறு மாதிரியாகப் புரிந்து கொண்ட வெத்தலபாக்கு என்னை அந்த வாங்கு வாங்கியிருக்கிறது.
இரண்டாம் வகுப்பு படித்த போதே செண்பகப்புதூரில் பீடியை உறிஞ்சிவிட்டு வைக்கோல் போருக்குத் தீ வைத்த அனுபவம் உண்டு என்பதால் பிஞ்சிலேயே பழுத்தவனாகியிருந்தேன் என்றாலும் ஆறாம் வகுப்பிலிருந்துதான் ப்ராடுத்தனங்களையெல்லாம் விரிவாகச் செய்யத் தொடங்கியிருந்தேன். மாலையில் மைதானத்தில் விளையாடிவிட்டு பள்ளியில் சிறப்பு வகுப்பு என்று பொய் சொல்வது, ஏடுகளில் எழுதாமல் டபாய்ப்பது, பையன்களுடன் சேர்ந்து கொண்டு வாய்க்காலுக்கும் வேட்டைக்கும் செல்வது என்பதையெல்லாம் பழகிய பருவம் அது. தறுதலையாகப் போயிருக்க வேண்டும்.
இரண்டாம் வகுப்பு படித்த போதே செண்பகப்புதூரில் பீடியை உறிஞ்சிவிட்டு வைக்கோல் போருக்குத் தீ வைத்த அனுபவம் உண்டு என்பதால் பிஞ்சிலேயே பழுத்தவனாகியிருந்தேன் என்றாலும் ஆறாம் வகுப்பிலிருந்துதான் ப்ராடுத்தனங்களையெல்லாம் விரிவாகச் செய்யத் தொடங்கியிருந்தேன். மாலையில் மைதானத்தில் விளையாடிவிட்டு பள்ளியில் சிறப்பு வகுப்பு என்று பொய் சொல்வது, ஏடுகளில் எழுதாமல் டபாய்ப்பது, பையன்களுடன் சேர்ந்து கொண்டு வாய்க்காலுக்கும் வேட்டைக்கும் செல்வது என்பதையெல்லாம் பழகிய பருவம் அது. தறுதலையாகப் போயிருக்க வேண்டும்.
தொடர்ச்சியாக உறிஞ்சுவதில்லையென்றாலும் ஆடிக்கொரு தடவையாவது கசப்பு ருசியை இழுத்துவிடுவதுண்டு. ஆறாம் வகுப்பு வந்த பிறகு வேறு சில சில்லுண்டிகளை இணைத்துக் கொண்டு கணேஷ் பீடிக்கட்டை எடுத்து வந்து வாய்க்கால் மேட்டில் அமர்ந்திருந்தோம். நான்கைந்து பையன்கள். காலையிலேயே பள்ளிக்கு வராமல் நேராக அங்கே சென்றுவிட்டோம். வெள்ளியங்கிரி உண்டிவில் எடுத்து வந்திருந்தான். அவனிடம் பாகுபலி தோற்றுவிட வேண்டும். அழகி என்பதால் தேவசேனாவுக்கு விதிவிலக்கு அளிக்கலாம். வெள்ளியங்கிரி சிட்டுக்குருவி அடிப்பான். அந்தக் காலத்தில் நிறையச் சிட்டுக்குருவிகள் உண்டல்லவா? வயல் வெளிக்கு போனால் போதும். சகட்டு மேனிக்குக் கிடைக்கும். நோ பாவம். நோ புண்ணியம். முட்டைகளுடனான குருவிக் கூடு கிடைத்தால் சாணத்திற்குள் முட்டைகளை உருட்டி தீக்குள் போட்டுவிடுவோம். வெந்த பிறகு தனிச்சுவையுண்டு.
குருவிகளை அடித்து அறுத்து ப்ளேடு கொண்டு கீறி சுத்தம் செய்து- வீட்டிலிருந்து உப்பு, மிளகாய்த்தூள் என்று ஆளுக்கு ஒரு பொருளை எடுத்துச் சென்றிருப்போம்- கறி மீது தடவி காய வைத்துவிட்டு வாய்க்காலுக்குள் இறங்கி குளியல் போட்டுவிட்டு வந்தால் கறியில் காரம் இறங்கியிருக்கும். அதை அப்படியே எடுத்து அனலில் வாட்டினால் நெடியடிக்கும். நாக்கு ஊற, காரம் உச்சியில் ஏறும். தின்று முடிப்போம். அன்றைக்கு எடுத்துச் சென்றிருந்த கணேஷ் பீடியை உறிஞ்சிய போது வெகு கசப்பு. எச்சிலைத் துப்பிக் கொண்டேயிருந்தேன்.
‘உறிஞ்சுடா..உறிஞ்சுடா’ என்றார்கள். உறிஞ்சித் தள்ளிவிட்டேன்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகாக பள்ளிக்குச் சென்றிருந்தோம். மணியடித்த பிறகு முதல் பிரிவேளையே ஜோசியகார வாத்தியாருக்குத்தான். வந்தவுடன் என்னைப் பார்த்தார். நீரில் விளையாடிய பிறகு என்னதான் தலையைத் துவட்டினாலும் கசகசத்துத் தெரியும். ஒருவேளை நோட்டம் பிடித்துவிட்டாரோ என்று உள்ளூர நடுங்கத் தொடங்கினேன். அவர் இயல்பாகத்தான் இருந்தார். பாடத்தை நடத்திவிட்டு ‘வாசு பையா..வந்து இதை போர்டுல வரை’ என்றார். பக்கத்தில் வர வைக்கிறார் என்ற கொக்கி தெரியாமல் வெகு வேகமாகச் சென்றேன். புகை நாற்றம் மூக்கில் ஏறியிருக்கும் அல்லவா? கீழே குனிந்தபடியிருந்தவர் புருவங்களுக்கும் கண்ணாடிக்கும் நடுவிலாக விழிகளை நிறுத்தி என்னைப் பார்த்தார். ஆனால் எதுவும் சொல்லவில்லை. சொன்ன படத்தை வரைந்து முடித்தேன். அவர் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை என்பது பெரிய ஆசுவாசமாக இருந்தது.
மணியடித்தவுடன் எப்பொழுதும் போலச் சென்றுவிட்டார். அதன் பிறகு சிலம்புச் செல்வி டீச்சரின் பாடவேளை. டீச்சர் வந்தவுடன் ‘உன்னை வெங்கடாசல வாத்தியார் கூப்பிடுறாரு’ என்றார். எனக்கு பயம் கவ்வத் தொடங்கியது. ஆசிரியர்களின் அறைக்குப் பக்கத்திலேயே ஓர் அறை இருக்கும். அங்கே அமர்ந்திருந்தார். ‘வாசு பையா...வா’ என்றார். சிரித்தபடியேதான் இருந்தார். அருகில் சென்றேன்.
‘பீடி குடிச்சியா?’ என்றார்.
‘இல்லைங்க சார்’ என்று சொல்வதற்குள்ளாக சப் என்றொரு அறை விழுந்தது.
‘காலைல எங்கடா போன?’ என்ற கேள்விக்குப் பிறகு என்னால் எதையும் மறைக்க முடியவில்லை. எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்.
அவரது குரல் மாறியது. ‘இதை உங்கம்மாகிட்டயும் அப்பன்கிட்டயும் சொன்னன்னா நாண்டுக்குவாங்க’ என்றார். திக்கென்றிருந்தது. அவர் பேசப் பேச உடைந்து போனேன். எவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்திருக்கிறோம் என்கிற மாதிரியான மனநிலைக்குக் கொண்டு வந்துவிட்டார். உலகிலேயே மிகப்பெரிய குற்றவாளி என்பதான பிரம்மையில் நின்றிருந்தேன்.
‘இங்க பாரு..தப்பு எல்லா மனுஷனும் செய்யறதுதான்..செஞ்சுட்ட..பரவால்ல விடு’ என்றார். என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை.
‘ஊட்ல சொல்லி வெச்சுடுறேன்...அவங்களே பார்த்துக்கட்டும்’ என்றார். கெஞ்சினேன். அழ வைத்தார். உதடுகள் வறண்டு போயின.
என்னுடைய கடும் போராட்டத்திற்குப் பிறகு ‘சரி..நான் சொல்லல...ஆனா பீடி குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுறியா’ என்றார். ‘சத்தியம் தோத்துச்சுன்னா உனக்கு படிப்பு வராது’. அந்த வயதில் இவையெல்லாம் பசுமரத்து ஆணிகள் மாதிரி. மனப்பூர்வமாகச் செய்து கொடுத்தேன். அதன் பிறகு கல்லூரியில் படித்த போது மங்களுரூ-ஊட்டி மலைப்பாதையில் பாபுச் சக்ரவர்த்தியிடம் வாங்கி ஓர் இழுப்பு இழுத்தேன். அந்த செமஸ்டரில் அரியர் விழுந்தது. அதோடு சரி. அதன் பிறகு பதினைந்தாண்டுகளாகிவிட்டது.
எனக்கு மட்டுமில்லை- என்னோடு புகையை உறிஞ்சிய மற்றவர்களுக்கும் இதுதான் ட்ரீட்மெண்ட். விவகாரம் எங்கள் நான்கைந்து பேர்களுக்கு மட்டும்தான் தெரியும். வகுப்பில் உள்ள பிற மாணவர்களுக்கும் கூடத் தெரியாது.
சமீபத்தில் சந்தித்த வேறொரு ஆசிரியர் ‘அவனுக எப்படி போனா என்னங்க..’ என்கிற ரீதியில் பேசினார். அவருக்கு இந்தச் சம்பவத்தைத்தான் உதாரணமாகச் சொன்னேன். புகைப்பது சரி தவறு என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். ஆசிரியர் நினைத்தால் எப்பேர்ப்பட்டவனையும் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ‘அதெல்லாம் அந்தக்காலம் சார்’ என்றார். பதில் எதுவும் சொல்லவில்லை.
சில வருடங்களுக்கு முன்பாக ஜோசியகார வாத்தியாரைப் பார்த்த போதும் ‘வாசு பையா..நல்லா இருக்கியா?’ என்றார். நிறையப் பேசினோம். ஆனால் பீடி பற்றி எதுவும் பேசவில்லை. அவருக்கு ஞாபகம் இருக்குமா என்றும் தெரியவில்லை.