Dec 21, 2016

சைவம் Vs அசைவம்

ஜட்ஜ் பலராமய்யாவின் சித்த மருத்துவத் திரட்டு மொத்த இரண்டு பாகங்கள். பாகம் ஒன்று எளிமையானது. பாகம் இரண்டு அவ்வளவு எளிதில் புரியாது. இரண்டு பாகங்களையும் மெரினா புத்தகங்கள் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அப்படித்தான் ஆர்டர் செய்திருந்தேன். பணம் அனுப்பவில்லை. புத்தகங்களை அனுப்பி வைத்துவிட்டார்கள். இரண்டு நாட்கள் கழித்து அவர்களை அழைத்து ‘புத்தகங்கள் வந்து சேர்ந்துவிட்டன. பணத்தை எப்படிக் கொடுப்பது’ என்று கேட்ட பிறகு வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பி வைத்திருந்தார்கள். புத்தக வியாபாரத்தில் மனிதர்கள் மீது இவ்வளவு நம்பிக்கை இருக்கிறதா என ஆச்சரியமாக இருந்தது.

இரண்டு பாகங்களும் சேர்த்து ஆயிரம் ரூபாய். முதல் பாகம் மட்டும் அறுநூறு ரூபாய். இணைப்பில் இருக்கிறது.

சைவத்துக்கு மாறியது குறித்து எழுதிய கட்டுரைக்கு வந்த பெரும்பாலான பாராட்டுகளும் சரி; எதிர்ப்புகளும் சரி- ‘பெருங்குற்றத்திலிருந்து விடுபட்ட மாதிரி இருந்தது’ என்ற ஒற்றை வரியை முன்வைத்துத்தான் இருந்தன. ‘ஆமாம், கொல்லாமை புனிதம்’ என்று ஒரு சாரார் சொன்னால் ‘இறைச்சி உண்ணாததைப் புனிதப்படுத்த வேண்டாம்’ என்று இன்னொரு சாரார் பேசினார்கள். உண்மையில் புனிதத்தன்மை, அன்பு ஆகியவற்றை முன் வைத்து அசைவத்தை கைவிடவில்லை. ஒரே வினாடியில் எடுத்த முடிவு அது. ஒரு நள்ளிரவுப் பயணத்தின் போது திடீரென இறைச்சியைத் தொடக் கூடாது எனத் தோன்றியது. அடுத்த தினத்திலிருந்து உண்பதில்லை. அவ்வளவுதான்.

அசைவப் பிரியன் நான். 

2008 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டபடியால் இனி திருமணம் வரைக்கும் அசைவத்தைத் தொடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லியிருந்தார்கள். திருமணத்துக்கு ஆறு மாத காலம் இடைவெளியிருந்தது. மலேசியா, பிரான்ஸ் என்று இரண்டு தேசங்களுக்குச் செல்ல வேண்டிய வாய்ப்பும் கிட்டியிருந்தது. தினந்தோறும் அசைவ உணவைத்தான். ‘சம்பிரதாயங்களை மீறுவதால் திருமண வாழ்க்கைக்கு ஏதாவது ஆகிவிடுமோ’ என்ற பயமிருந்தாலும் மனம் கட்டுக்குள்ளேயே இல்லை. தின்று தீர்த்தேன். அதனால்தான் இப்பொழுதும் கூட அசைவத்திற்கு எதிரான மனநிலை தோன்றினாலும் கூட எவ்வளவு நாள் கைவிட முடியும் என்று சந்தேகமாகத்தான் இருந்தது. 

இப்பொழுது முடிவெடுத்து சில மாதங்கள் ஓடிவிட்டன. அசைவத்தைத் தொட வேண்டும் என்கிற எண்ணம் இனி வராது என்ற நம்பிக்கை வந்துவிட்ட பிறகு வெளியில் சொல்லத் தொடங்கியிருக்கிறேன். இந்த வாரத்தில் கூட அலுவலக நண்பர்களோடு விருந்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒன்பது பேர்களில் ஏழு பேர் அசைவம். என்னையும் சேர்த்து இருவர் மட்டும் சைவம். சலனமில்லாமல் பருப்புப் பொடியும் நெய்யும் ஊற்றி உண்டுவிட்டு எழுந்து வர முடிந்தது. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகுதான் நேற்றைய கட்டுரையை வெளியிடுகிற தைரியமும் கூட வந்தது. இனி எந்தக் காலத்திலும் ஆசைக்காக அசைவம் உண்ண வேண்டியதில்லை என்கிற தைரியம் அது. 

நாம் செய்கிற எந்தவொரு காரியத்துக்கும் மனம் ஒரு நியாயத்தைத் தேடும் அல்லவா? நாம் செய்தது சரிதான் என்று நம்மை நாமே நம்பச் செய்வதற்கான வித்தை அது. அப்படியான ஒரு ஆறுதல்தான் ‘இனி உணவுக்காக ஒரு உயிரைக் கொல்ல வேண்டியதில்லை’ என்று தோன்றியதும் கூட. உண்மையிலேயே அதுவொரு ஆசுவாசம்தான். அதிகாலையில் எங்கள் ஊர் சந்தைக்கடையில் ஓங்கி அடித்துக் கொல்லப்படுகிற மாடுகளையும், கதறக் கதற டிவிஎஸ் 50 வண்டியில் கட்டி எடுக்கப்பட்டு வந்து கழுத்து அறுக்கப்படும் ஆடுகளையும் பார்த்து அதையே தின்று சப்புக்கொட்டி ருசித்துக் கொண்டிருந்தவனுக்கு ஏதோவொரு விடுதலையுணர்வு கிடைப்பது இயல்பானது. ஆனால் அதற்காக சைவத்தைப் புனிதப்படுத்திக் காட்டி, அசைவம் உண்கிறவர்களையெல்லாம் ஏதோ கொலைக்குற்றவாளிகளைப் போல கூண்டில் ஏற்ற வேண்டும் என்கிற எண்ணம் இல்லை.

அசைவம் புனிதமற்றது என்று தீர்ப்பெழுதவுமில்லை. 

ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். அதை நியாயப்படுத்த என்னளவில் காரணங்களை அடுக்குகிறேன். அதில் மனதளவிலான ஆசுவாசமும் ஒரு காரணமாக இருக்கிறது. இந்த ஆசுவாசத்தை வெளிப்படையாகச் சொல்லும் போது ‘சைவம் சரி; அசைவம் தவறு’ என்கிற தொனி உண்டாகிறது. அவ்வளவுதான். சரி தவறு என்பதெல்லாம் அவரவர் மனநிலையைப் பொறுத்தது. ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் நியாயமாக இருக்கக் கூடிய எல்லாமும் இன்னொரு பக்கத்திலிருந்து பார்த்தால் அநியாயமாக இருக்கும். நாம் எந்தப் பக்கமாக நிற்கிறோம் என்பதைப் பொறுத்துத்தானே முடிவுகளே அமைகின்றன?

கொல்லாமையை வள்ளுவரிலிருந்து வள்ளலார் வரைக்கும் நிறையப் பேர் பேசியிருக்கிறார்கள். வள்ளுவனை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக இருந்தால் கொல்லாமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். வள்ளலாரை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் புலால் உண்ணுதலை தவிர்க்க வேண்டும். புத்தமும் சமணமும் சரி என்று பேசுகிறவர்கள் அசைவத்தை தவிர்க்கத்தான் வேண்டும். வள்ளுவன் சரி; வள்ளலார் சரி; புத்தம் சரி; சமணம் சரி என்ற புரிதலை நோக்கி நகர வேண்டுமானால் என்னளவில் சில பழக்கங்களை விட்டொழிக்க வேண்டியதாகிறது. அதில் அசைவம் தவிர்த்தலும் ஒன்றாகிறது. 

சித்த மருத்துவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். வள்ளலாரைப் பின் தொடர்கிறவர்கள் பழக்கமாகியிருக்கிறார்கள். அவர்களுடன் பேசும் போது புலால் உண்ணாமை சரி எனப்படுகிறது.

சித்த மருத்துவத்தை முன் வைத்துப் பேசினாலும் கூட சித்த மருத்துவம் முற்றிலும் அஹிம்சையில்லை. மருந்து தயாரிப்புக்காகவே உயிர்களைக் கொல்வதுண்டு. விலங்குகளின் ரத்தங்களை எடுக்கிறார்கள். ஏதோவொரு மருந்து தயாரிப்புக்கு நூறு ஆண் சிட்டுக்குருவிகளின் கழுத்தை அறுத்து ரத்த எடுத்ததாக ஒரு சித்த வைத்தியர் சொன்னார். ஆனால் அதே சித்த வைத்தியர் நோய்க்கு மருந்து கொடுக்கும் போது முதல் வேலையாக அசைவத்தைக் கைவிடச் சொல்வார். அவரும் அசைவம் உண்ணக் கூடிய மருத்துவர்தான். மருந்து உண்ணும் போது மட்டும் ஏன் அசைவத்தை தவிர்க்கச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் உடல் இலகுவாகச் செயல்படுவதற்கு சைவம்தான் சரி என்கிறார். புலால் உணவை சீரணிக்க நம் உடல் அதிகமாக மெனக்கெடுகிறது. நமது தட்பவெப்பத்துக்கு இறைச்சியை விடவும் சைவமே சிறப்பு என்கிறார். சுவடிகள் அப்படித்தான் சொல்கின்றன; சித்த மருத்துவப்பாடல்கள் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கின்றன என்கிறார். என்கிறார் என்பதைவிடவும் என்கிறார்கள் என்பது சரியாகப் பொருந்தும். பன்மை. நிறையப் பேர் சொல்கிறார்கள். தமிழ் மருத்துவம் பேசக் கூடிய மருத்துவர்கள் யாரேனும் இது குறித்து இன்னமும் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்லக் கூடும்.

இப்படியெல்லாம் யோசிக்கையிலும் தெரிந்து கொள்ளும் போதும் ஏதோவொரு வகையில் சைவ உணவு மனதுக்கும் உடலுக்கும் சரி என்பதாகப் படுகிறது. நீடுழி வாழ விரும்பினால் முன்னோர்களின் வழியைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. தமிழ் மருத்துவத்தின் வழியையும் வள்ளுவத்தையும் சித்தர்களையுமே பின் தொடர விரும்புகிறேன். அவர்கள் சொல்வதற்கேற்ப சிலவற்றை நாம் தொடர்ந்து சில விதிகளைச் செயல்படுத்த வேண்டியிருக்கிறது. அதில் அசைவம் உண்ணாமையும் ஒன்று. உடல், உள்ளம் என இரண்டையும் சேர்த்துத்தான் சைவத்தின் பக்கமாக நிற்கிறேன். எனக்கு இந்தப் பக்கம் சரி என்று படுகிறது. அதே சமயம் அந்தப் பக்கமாக நிற்பவர்கள் தம்மைச் சரி என்று கருதினால் அதை மறுக்கவும் எதிர்க்கவும் இப்போதைக்கு என்னிடம் ஒன்றுமில்லை.

8 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

நல்லது. தொடரவும்.

Unknown said...

"I stopped explaining myself when I realized people only understand from their Level of Perception" - Came across this, just wanted to share :).

Prabu Oneness said...

Its completely true. Being vegetarian is good for health and mind. Plus we actually digest all the food's characteristics also. Thats like injecting foods DNA in our body in some way or other. That doesn't mean, non-vegans are warriors and vegans are cowards. I believe that matters in your thought structure..ain't I?

Prabu Oneness said...

I completely agree with this. I heard we actually inject our body with the characteristics of the food we intake. I dont know how true it is! But when seeing people, sometimes I feel thats correct!

:)

Anonymous said...

நான் மெரினா புக்ஸ் லிருந்து...

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!

Paramasivam said...

மெரினா புக்ஸ்-நானும் வாங்கிக் கொள்கிறேன். நன்றி. சைவமா அல்லது அசைவமா எது நல்லது எனில், எது அவரவர் விருப்பமோ, அவரவருக்கு ஒத்துக் கொள்கிறதோ, அவர்கள் அதைப் பின் பற்றிக்கூறும் கொள்ள வேண்டியதுதான். நானும் சைவம் தான். எங்களுடன் மணிகண்டன் இணைந்துள்ளார். அவ்வளவே. இது ஒரு பிரச்சனையே இல்லை.

Kannan said...

ஒரு முறை என் மகனிடம் இது பற்றி பேசும்போது, மரம் செடிகளுக்கு உயிர் உண்டு. அதை உடைக்கும் போது அதற்கும் வலிக்கும், கத்தும். என்ன அது நமக்கு கேட்பதில்லை. இது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது .என்கிறான். என்ன சொல்ல.. நம் உடம்பு லகுவாக ஜீரணம் செய்து விடும் என்பது உண்மையே. சொல்ல போனால், பல சைவ உணவுகள் கூட ஜீரணம் செய்வதற்கு உடம்பு அழும். நமது உடல் பொதுவாகவே, இதற்கான சமிஞயை நமக்கு கொடுத்து விடுகிறது. நாம் தான் கவனிக்காமல் அதை பாடு படுத்துகிறோம்.

Thangavel Manickam said...

நேற்று விஜயபிரபாகரனிடம் புத்தகத்தை அனுப்பி வைக்க இயலுமா என்று கேட்டேன், இதோ கையில் இருக்கிறது. பணம் இனிமேல்தான் அனுப்ப வேண்டும். இப்படியெல்லாம் இந்த உலகில் ஆட்கள் இருக்கின்றார்கள். வெகு சுவாரசியமான சம்பவம். சில பக்கங்களைப் புரட்டினேன். ஜட்ஜ் பட்டாசு கிளப்பி இருக்காரு. செமதூள் புக். ஒவ்வொருவரும் வீட்டில் அவசியம் வைத்திருக்க வேண்டிய புத்தகம் இது. பைண்டிங் செய்யச் சொல்லி இருக்கிறேன்.