Aug 11, 2016

இருப்பு நிலைக் குறிப்பு

நிசப்தம் அறக்கட்டளையின் 2014-15 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுக் கணக்கு சரி பார்க்கப்பட்டு தணிக்கை செய்து சான்றிதழ்களைக் கையில் கொடுத்திருக்கிறார்கள். 

‘பார்த்தீல்ல ஊர்ல என்னன்னு எல்லாம் கேசு கொடுக்கிறானுகன்னு? இவன்கிட்ட பத்தாயிரம் ரூவா கொடுத்தேன்...கணக்கே காட்டலைன்னு எவனாச்சும் கம்ப்ளைய்ண்ட் கொடுத்தா போதும்...கூட்டிட்டு போய் வெச்சு கும்மி நல்லி எலும்பை எண்ணிக் கையில கொடுத்துடுவானுக’ என்று பயமூட்டிக் கொண்டேயிருந்த நண்பருக்கு இதைச் சமர்பிக்க வேண்டும். 

‘நான் என்னய்யா தப்பு செய்யறேன்?’ என்று அவரிடம் நான்கு முறையாவது கேட்டிருப்பேன். தப்பு செய்கிறவனைவிட இந்தக் காலத்தில் நல்லது செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு வாயைக் கொடுக்கிறவர்களைத்தான் குமுட்டிலேயே குத்துவார்களாம். எனக்குத்தான் சனிபகவான் தம்பதி சமதேகராக தலை மீதே குடியிருக்கிறாரே! பயந்தபடியே இருப்பதுதான் நல்லது. ‘ஏய் அதிகார வர்க்கமே!’ என்று அவசரப்பட்டுக் கூவிவிடக் கூடாது என்பதில் வெகு கவனமாக இருந்தாலும் கூட அவ்வப்போது எதையாவது உளறிவிடுகிறேன். அதனால் கணக்கு வழக்கெல்லாம் சரியாக இருப்பதுதான் எனக்கும் நல்லது. நல்லி எலும்புக்கும் நல்லது. 

ஆவணங்கள் வரிசையாக இருக்கின்றன. எனக்கு இதில் ஆன்னா, ஆவன்னா கூடத் தெரியாது. தணிக்கையாளர்கள் கேட்ட விவரங்களையெல்லாம் கொடுத்திருந்தேன். இன்றைக்கு அழைத்து ‘வந்து பேலன்ஸ் ஷீட்டை வாங்கிக்குங்க’ என்றார்கள். கணக்கு வழக்கு விவகாரம் தெரிந்தவர்கள் உன்னிப்பாக சரி பாருங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். ஆடிட்டரிடம் கேட்கிறேன். அப்படி எதுவும் இல்லையென்றால் அங்கேயிருந்தேபடியே‘வெரிகுட்’ என்று முதுகைத் தட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்கிறேன்.

2014-15 பெரிய பிரச்சினையில்லை. அடுத்தது இருக்கிறது பெரிய கண்டம். ஆகஸ்ட் 30க்குள் 2015-16க்கான நன்கொடையாளர்களின் PAN மற்றும் முகவரிகளைச் சேகரித்து ஒப்படைப்பதாக தணிக்கையாளரிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். கடலூர், சென்னை வெள்ளம் வந்த டிசம்பர், ஜனவரி மாதங்களின் வரவு செலவு விவரங்களை நினைக்கவே திகிலாக இருக்கிறது. ஒடிசா, ஆந்திராவாலாக்கள் கூட பணம் அனுப்பி வைத்திருந்தார்கள். அவர்கள் நிசப்தம் படிக்கப் போவதுமில்லை. அவர்களின் தொடர்பு விவரங்களைத் தேடியெடுத்து அத்தனை பேரிடமும் எப்படி வாங்கிச் சேர்க்கப் போகிறேன் என்று தெரியவில்லை. நிசப்தம் வாசிக்கிறவர்களாக இருப்பின் கருணையுள்ளத்தோடு அனுப்பி வைத்து உதவவும். பணம் கொடுத்ததைவிடவும் பெரும் புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும். மாரியம்மன் கோவிலில் தண்டம் விட்டுக் கொடுக்கச் சொன்னாலும் கூடச் செய்கிறேன்.

நன்றி.

2 எதிர் சப்தங்கள்:

Kannan said...

அதென்ன கையெழுத்து யாருக்கும் தெரிய கூடாது என்று முன் ஜாக்கிரதை முத்தண்ணா? ஊரு முழுக்க எல்லாத்துக்கும் காசோலை கொடுத்துண்டு தானே இருக்கீங்க?

Vaa.Manikandan said...

கையெழுத்தோடுதான் முதலில் போஸ்ட் செய்தேன். ஒரு நண்பர் வந்து ‘சைபர் கிரைம்’ புக் எல்லாம் எழுதிட்டு நீங்களே இப்படி செய்யலாமா என்றார்? ஏதோ தப்பு போலிருக்கேன்னு நீக்கிட்டேன். இப்போ நீங்க இப்படி கேட்குறீங்க. நீங்களே சொல்லுங்க..நான் என்ன செய்யட்டும்? :)