Aug 27, 2016

ஞாயிறு போற்றுதும்

நாளை சென்னையில் இரண்டு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. ஒன்று கதிர்பாரதியின் ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் கவிதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம். தமிழில் தற்காலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்களில் தவிர்க்க முடியாதவர் என்று கதிர்பாரதியைச் சொல்லலாம். சச்சரவுகளில் தலையிட்டுக் கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று எழுதிக் கொண்டிருக்கும் மனிதர். புத்தகங்கள், எழுத்தாளர்கள் குறித்து பேசுவதற்கு ஏதுவான நண்பர். அவரது தொகுப்புக்கான விமர்சனக் கூட்டத்தில் பாரதி கிருஷ்ணகுமார், தமயந்தி, பா.ரவிக்குமார் மற்றும் தமிழ்ப்பித்தன் ஆகியோர் பேசுகிறார்கள். பாரதி கிருஷ்ணகுமார் பேச்சைத் தவிர பிறர் பேச்சைக் கேட்டதில்லை.


டிஸ்கவரி புக் பேலஸில் காலை பத்து மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. 

இன்னொரு புத்தக வெளியீடு ஜீவகரிகாலனின் ‘ட்ரங்கு பெட்டிக் கதைகள்’- சிறுகதைத் தொகுப்பு இது. கரிகாலனின் முதல் தொகுப்பு. அவரது புத்தகம் வெளிவருவதில் சந்தோஷம். எப்பொழுதோ எழுத ஆரம்பித்துவிட்டார். இப்பொழுதுதான் முதல் தொகுப்பு வெளியாகிறது. யாவரும் பதிப்பகம், அடுத்தவர்களின் புத்தக வெளியீடு என்றுதான் அலைவாரே தவிர தனது புத்தகம் பற்றி பெரியதாக அலட்டிக் கொண்டதில்லை. ‘எப்படியாச்சும் ஒரு தொகுப்பு கொண்டு வந்துடுங்க’ என்று அவ்வப்பொழுது கேட்டுக் கொள்வேன். இப்பொழுது சாத்தியப்படுத்தியிருக்கிறார். 

கரிகாலன் நல்ல நண்பர். சென்னையில் இறங்கி அதிகாலை நான்கு மணிக்கு அழைத்தாலும் வண்டியை எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். பாவமாகத்தான் இருக்கும். ஆனால் சலித்துக் கொள்ளாத இத்தகைய மனிதர்களின் நட்பு வாய்ப்பது அரிது. நூறுக்கும் கூடுதலாக பத்து இருபது கிலோ இருந்தார். பேலியோ டயட் அது இதுவென்று தம் கட்டி ஏழெட்டு கிலோ குறைத்திருக்கிறார். கடந்த முறை பார்த்த போது சிம்ரன் டைட் டீஷர்ட் அணிந்தது போலத் தெரிந்தது. ‘உடம்பு குறைஞ்ச மாதிரி தெரியலையே’ என்று கேட்டதற்கு ‘உடம்பு குறையக் குறைய அதற்கேற்ப சின்ன சின்ன சைஸ் சட்டையா போட்டுட்டு வர்றேன்..அதான் சிம்ரன் மாதிரி சிக்குன்னு தெரியறேன்’ என்றார். நூறு கிலோவுக்கு கீழாக வந்த பிறகு பேலியோவுக்கு முன் பேலியோவுக்கு பின் என்று இருவிதமான படங்களைப் போட்டு அறுநூறு எழுநூறு லைக் வாங்கி தினசரியில் நேர்காணல் கொடுக்கப் போவதாக சத்தியம் செய்திருக்கிறார். நல்லவர் லட்சியம்; வெல்வது நிச்சயம்.

அதிகாலை நான்கரை மணிக்கு வேளச்சேரி சாலையில் அவரது பைக்கில் பின்னால் அமர்ந்து போகும் போது அச்சு அசப்பில் லாரல்-ஹார்டியைப் பார்ப்பது போலவே இருப்பதாக ஒன்றிரண்டு பேர்கள் சொல்லியிருக்கிறார்கள். ‘நீங்க மட்டும் என்ன அப்படியே இருக்கீங்க?’ என்று கேட்டுவிட்டு ‘உடம்பு பூரா வஞ்சம்..இல்லையா?’ என்று பதிலையும் அவரே சொல்லிக் கொள்வார். நிகழ்வில் கணையாழி ஆசிரியர் ராசேந்திரன், அபிலாஷ், கெளதம சித்தார்த்தன், உமா ஷக்தி, அகர முதல்வன் ஆகியோர் பேசுகிறார்கள். 

இந்தக் கூட்டம் மாலையில் எழும்பூர் இக்‌ஷா மையத்தில் மாலை ஆறு மணிக்குத் தொடங்குகிறது.

சென்னை செல்வதாக இன்று மதியம் வரைக்கும் எண்ணம் எதுவுமில்லை. வெள்ளிக்கிழமையானால் துணிப்பையைத் தூக்கித் தோளில் போட்டுக் கிளம்புகிறவனுக்கு வெகு மாதங்களுக்குப் பிறகு வீட்டில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இந்த வாரம் வீட்டிலேயே இருப்பதாகத்தான் யோசனை இருந்தது. காலையில் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது வேணிதான் ‘கதிர்பாரதி கதிர்பாரதின்னு சொல்லிட்டே இருப்பீங்க..கூட்டத்துக்கு போகலையா?’என்றாள். கரிகாலன் கூட்டம் மாலையில் இருப்பதாகச் சொன்னவுடன் ‘உங்களுக்கு வேண்டி எவ்வளவு அலையறாரு?’ என்று குற்றவுணர்ச்சியில் முள்ளை வைத்துக் குத்தினாள். 

சரிதான். 

மனதில் சஞ்சலம் இருக்கும் போதெல்லாம் இவர்களிடம்தான் அதிகம் பேசியிருக்கிறேன். அப்படியான நண்பர்கள் இவர்கள் இருவரும். அவர்களுக்கே அது தெரியாது. அழைத்து எதையாவது பேசிவிட்டுத் துண்டித்துவிடுவேன். அத்தகையை நண்பர்களின் புத்தக நிகழ்ச்சியில் பங்கு பெறுவதை முக்கியமானதாகக் கருதுகிறேன். நிகழ்வில் பேச வேண்டும் என்றெல்லாம் இல்லை. விருப்பமும் இல்லை. பார்வையாளனாக அமர்ந்திருந்தால் போதும். இந்த வாரம் சனிக்கிழமை மட்டும் வீட்டுக்கு. ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுக்கு. இனி கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எந்த சனி, ஞாயிறும் வீட்டில் தங்குவதற்கான வாய்ப்பே இல்லை. அது பரவாயில்லை. கட்டுத்தறியில் அடங்கலாம் என்றாலும் மேய்ச்சல்காரன் அவிழ்த்துவிட்டுவிட்டால் எப்படி கால்கள் நிற்கும்? துணிப்பை தோளில் ஏறியிருக்கிறது.

கரிகாலனுக்கும் கதிர்பாரதிக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! வாய்ப்பிருப்பவர்கள் வருக. நிகழ்வில் சந்திப்போம்- ஒரு நல்ல கவிஞனையும், ஒரு நல்ல எழுத்தாளனையும்.

1 எதிர் சப்தங்கள்:

ஏகாந்தன் ! said...

கதிர்பாரதி, ஜீவகரிகாலன் இருவரையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. இப்போது பெங்களூரில் இருக்கிறேன். பெங்களூரில் இவர்களது புத்தகங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?