Jul 11, 2016

மூன்றாம் நதி- விமர்சனங்கள்

மூன்றாம் நதி நாவலுக்கு வருவது போன்ற விமர்சனங்களும் மின்னஞ்சல்களும் வேறு எந்தப் புத்தகத்திற்காகவும் எனக்கு வந்ததில்லை. அத்தனையும் பாராட்டுப்பத்திரங்கள் என்று சொல்ல முடியாது. குறைகளைச் சுமந்து கொண்டும் வருகின்றன. என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இந்த உரையாடல் சந்தோஷமளிப்பதாக இருக்கிறது. அத்தனை பேருக்கும் நன்றி.

                                                        ***

நேற்று ”மூன்றாம் நதி” படித்தேன். நிறைய இடங்கள் சரளமாக சுவாரஸ்யமாக இருந்தது. எனக்கு இந்த நாவல் நாஞ்சில் நாடனின் “சதுரங்க குதிரை” போன்ற நாவல்களை ஏனோ நினைவுபடுத்தியது. அதே போல அழகிய பெரியவனின் ஒரு குறுநாவல் (தலைப்பு மறந்து விட்டது) நினைவு வந்தது. அந்நாவலில் ஒரு இளம் பெண் கிராமத்தில் இருந்து சென்னையில் ஒரு சேரியில் வசிப்பாள். கணவன் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இறந்து விடுவான். பிறகு அவள் தன் கணவனின் முதலாளியான ஒரு அரசியல்வாதிக்கு இரையாவாள். பிறகு மெல்ல மெல்ல அவள் ஒரு விபச்சாரியாக்கப்படுவாள். ஒரு காட்சி பயங்கரமாக இருக்கும். அவளை ஒரு தெருவில் அரைமயக்கமாய் படுக்க வைத்து ஒருவன் வரிசையாக வாடிக்கையாளர்களை அழைத்து வந்து பணம் பண்ணுவான்.

ஒப்பிடுகையில் வா.மணிகண்டனின் நாவல் சற்று மென்மையானது.

எனக்கு அவர் பவானி பாத்திரத்தை நீர்மையின் உருவகமாய் பயன்படுத்தி இருந்தது பிடித்திருந்தது. பஞ்சம் பிழைக்க நகரம் தேடி வரும் அமாசையின் மகளான அவள் ஒரு தலைமுறையின் கனவின் உருவகம். நீர் இல்லாது தானே அவர்கள் கிராமத்து வாழ்வை துறக்கிறார்கள். பின்னர் நீரை விற்கும் வணிகப் போட்டியின் வன்முறையில் அவள் வாழ்வும் சிதைகிறது. ஒரு நதி நகரத்தில் வந்து கவனிப்பாரற்று சீரழிகிறது. அசுத்தமாகிறது. குறுகி வறண்டு போகிறது. பவானியின் முதலாளி பால்காரர் தான் வாடகைக்கு விட்டிருக்கும் வீடுகளுக்கு நீர் போதாமல் போகும் போது போர் கிணறு தோண்டுகிறார். பூமிக்குள் நீரோட்டம் அவருக்காய் திறந்து கொள்கிறது. சுத்தமான இனிப்பான ஏராளமான தண்ணீர். அதை வைத்து அவர் ஏக்கர் கணக்காய் விவசாயம் செய்யலாமே என ஒருவர் கூறுகிறார். ஆனால் பால்காரர் தன் மனதுக்குள் நீரை எப்படி விற்பது என கணக்கு போடுகிறார். விவசாயம் ஒரு வியாபாரம் அல்ல. அது மண்ணுடனான உறவு. ஒரு வாழ்க்கை முறை. நகரத்தில் இந்த விழுமியங்களுக்கு மதிப்பில்லை. அங்கு எதுவும் விற்க வேண்டிய / வாங்க வேண்டிய ஒரு பண்டம் மட்டுமே. ஆனால் நகரத்தில் வந்து அந்த வாழ்க்கையில் மெல்ல மெல்ல தன்னை கரைத்த பின்னரும் பவானிக்கு தண்ணீருடன் ஒரு ஆத்மார்த்தமான உறவு இருக்கிறது. குழாய் கிணற்றில் முதன்முதலாய் நீர் பொங்கும் போது பால்காரர் உற்சாகமாய் அதை அள்ளி பவானியிடம் “பார் காவிரி தண்ணீர்” என்பார். அப்போது பவானி “இது காவிரி இல்லை” என்பாள். காவிரி என்றால் அது வேறொரு ஒரு இருப்பு. அது மக்கள் வாழ்வில் ஊடுருவும் ரத்த நாளம். அதை கூறு போட்டு விற்க முடியாது. அதே போல ஒரு இடத்தில் மரங்களை வெட்டி சாய்த்திருப்பார்கள். அங்கே ஒரு கிளையில் இருந்து சிதறிய கூடும் முட்டைகளும் கிடக்கும். அருகில் தத்திச் செல்லும் கொக்குக்குஞ்சை அவள் தூக்கிக் கொள்வாள். வீட்டுக்கு கொண்டு போய் வளர்க்கலாம் என நினைப்பாள். இந்த இடங்களை மிகவும் ரசித்தேன். அந்த நீரும் அந்த கொக்குக்குஞ்சும் அவளையும் அவள் அப்பாவையும் போன்ற மனிதர்களே!

அதே போல அவள் பத்து பாத்திரம் தேய்க்கும் வீட்டில் உள்ள கணவன் ஒருநாள் அவளை பார்க்கும் அலட்சியமான காமப் பார்வை, அது அவளுக்கு தரும் அருவருப்புணர்வு, அவள் பாத்திரம் தேய்த்து வீட்டை சுத்தம் பண்ணும் பொட்க்ஹு அவளை பொருட்டாகவே கருதாமல் வீட்டில் வசிக்கும் தம்பதியினர் தமக்குள் கொஞ்சுவது – நல்ல அவதானிப்புகள். எனக்கு அந்த நகரத் தம்பதியினரை ஒரு தனி டிராக்காக கொண்டு போயிருக்கலாம் என பட்டது. நாவலில் இன்னும் ஒரு ஐம்பது பக்கங்கள் எழுதியிருக்கலாம். குறிப்பாய் நகரத்தின் சிதைவுகள் பற்றி.

இறுதியில் பவானியின் கணவன் கருகி இறந்து போகிறான். அவன் பாதி கருகிய உடலை பார்க்கையில் அவளுக்கு இளமையில் கிராமத்தில் சுட்டுத் தின்ற சிட்டுக்குருவி நினைவு வரும். அந்த அபத்தம் நன்றாய் உள்ளது.

நாவலில் மிகச்சிறந்த காட்சி இரண்டாம் அத்தியாயத்தில் வருகிறது. பவானியின் அப்பாவான அமாசையும் அவர் முதலாளி சின்னச்சாமியும் கறவை மாட்டை விற்று விட்டு ஊருக்கு திரும்பும் இடத்தை அபாரமாய் சித்தரித்திருக்கிறார் மணிகண்டன். எனக்கு அது “பாஸ்கர பட்டேலருடன் எனது வாழ்வு” நாவல் நினைவு வந்தது.
அப்போது எனக்கு அமாசை தான் நாவலின் உண்மையான நாயகன் என தோன்றியது. அவன் பங்களூருக்கு வந்து சின்னசாமி போல் மற்றொருவருக்கு கீழ் துணிச்சலாய் செயல்பட்டு எப்படி ஒரு சீரழிவு வாழ்க்கைக்கு பயணிக்கிறான், ரெட்டி போன்றவர்கள் எப்படி நகரத்தை கூறு போட்டு விற்று முழுக்க அந்நியமாக மாற்றுகிறார்கள், அவருடன் எப்படி அமாசையும் வளர்கிறான், பிறகு எப்படி தன் பணம், அதிகாரத்தை இழந்து வீழ்கிறான் என ஒரு தனிமனித வீழ்ச்சியின் சித்திரத்தை நகரத்தின் வீழ்ச்சியுடன் இணைத்து காட்டியிருக்கலாம் என தோன்றியது. அப்போது நாவல் இன்னும் வலுவாக வந்திருக்கும். பவானியை பின்னணியில் வைத்திருக்கலாம். ஜெயமோகனின் “ரப்பர்” நாவலின் டெம்பிளேட் இது போன்ற படைப்புகளுக்கு கச்சிதமாய் பொருந்தக் கூடியது. சின்ன திருகல்களுடன் அதை இந்நாவலுக்கு பயன்படுத்தி இருக்கலாம்.

ஆனால் இது வா.மணிகண்டனின் நாவல். அவன் தன் விருப்பப்படி, தீர்மானங்களின் படி இதை எழுதுவதே நியாயம்.

இந்த நாவல் நகரமயமாக்கலின் ஒரு வரலாற்று சித்திரத்தை அளிக்கும் நோக்கம் கொண்டது என ஆரம்பத்தில் தோன்றியது. ஆனால் பிற்பாடு அது பவானியின் அவல வாழ்வின் கதையாக சுருங்கி விட்டது. அதற்கு காரணம் அவளுக்கு அந்த வரலாற்றில் பங்கு இல்லை என்பதே. வரலாற்றுக்கும் தனிநபர் இழப்புக்கும் நடுவில் நாவல் மாட்டிக் கொண்டு விட்டது.
ஒட்டுமொத்தமாய் நாவல் நல்ல வாசிப்பனுபவத்தை தந்தது. அங்கங்கே சுஜாதா தென்படுகிறார். ஒருவேளை பங்களூர் பின்புலம் என்பதாலா வா.மணிகண்டனின் ஸ்டைலினாலா எனத் தெரியவில்லை. அடுத்த முறை பிடிவாதமாய் அவர் சுஜாதாவின் ஆவியை துரத்தி விட வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

வாழ்த்துக்கள் மணிகண்டன்.

- எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன்

                                       ***
அன்புள்ள மணிகண்டன்

வணக்கம்.

ஞாயிறு அன்று கலாப்ரியாவுடன் உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மிகமிக அருகாமையில் வசித்தும்கூட, ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள இப்படிப்பட்ட தருணங்களுக்காக நாம் காத்திருக்கவேண்டி இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. நகர வாழ்க்கை நமக்களிக்கும் வரம் அப்படி. யாரை நொந்துகொள்ள முடியும்?

ஞாயிறு இரவே உங்கள் புதிய நாவலைப் படித்துமுடித்துவிட்டேன். நாவலின் கருவுக்கு மிகவும் பொருத்தமான தலைப்பு. இந்த இடத்தில் உங்களிடம் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். சில மாதங்களுக்கு முன்பாக அந்திமழை இதழுக்காக ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன். அதன் தலைப்பு மூன்றாவது நதி. அப்படி ஒரு தலைப்பை அந்தக் கதைக்குச் சூட்டியதுமே என் மனம் கிளர்ச்சியுற்றது. அக்கதையின் கருவுக்கு அத்தலைப்பு கச்சிதமாகப் பொருந்திவிட்டது. அதுவே என் புதிய தொகுப்பின் தலைப்பாக அமையவேண்டும் என்று விழைந்தேன். தற்செயலாக அன்று வண்ணதாசனுக்கு எழுதிய மடலில் இந்தக் குறிப்பைப் பகிர்ந்துகொண்டேன். உடனே அவர் மடல் போட்டிருந்தார். ‘மணிகண்டன் இந்தத் தலைப்பில் ஒரு நாவல் எழுதுவதாக ஒரு தகவலைப் படித்த நினைவிருக்கிறது. முடிந்தால் மாற்றுங்கள்”என்று குறிப்பிட்டிருந்தார். பிறகு உங்கள் தளத்துக்கு வந்து பதிவுகளைப் படித்தபோது அது சரியான தகவல் என்று புரிந்துகொண்டேன். உடனே என் தொகுதிக்கு வேறொரு கதையின் தலைப்பான ‘கண்காணிப்புக் கோபுரம்’ என்ற தலைப்பை முடிவு செய்து கொடுத்தேன். அன்று முதலே உங்கள் நாவலுக்காக நான் காத்திருக்கத் தொடங்கினேன்.

நான் நினைத்திருந்ததைவிட சிறிய அளவில் இருக்கிறது நாவல். ஆனால் இதன் களம் என் மனத்துக்கு மிகவும் நெருக்கமான, உவப்பான களம். இந்த மனிதர்களை அவர்களுடைய எல்லாக் குற்றம் குறைகளுடன் நேசிப்பவன் நான். ஓர் உத்தியாக லிங்கப்பாவின் படுகொலையை முதலில் விவரித்த பின்னார், பின்னகரும் நினைவுகளில் பவானியின் குழந்தைப்பருவம் முதலான அனுபவங்கள் நகர்ந்துபோய் மீண்டும் அப்புள்ளியில் குவிந்து முடிவை நோக்கி நீள்கிறது. விவசாயம் பொய்த்ததால் தொடர்ந்து  பண்ணையத்தையும் பசுவையும் பார்க்க முடியாத ஒருவர் தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தை அனுப்பிவிடுகிறார். பிழைப்பைத் தேடி இளம்மனைவியோடும் கைப்பிள்ளையோடும் நகரத்தை நோக்கி வருகிறான் ஒருவன். கிராமத்து விவசாயி நகரத்தின் தொழிலாளியாக மாறுகிறான். அவனைப்போல நகரத்தை நாடிவரும் கூட்டத்துக்கு அவன் ஒரு முன்மாதிரி. அத்தகையோர் நகரத்திலிருந்து பெறுவதைவிட இழப்பவை அதிகம். அவன் வாழ்க்கையிலும் அதுவே நேர்கிறது. பவானியின் நினைவுப்பதிவுகளாக விரியும் அத்தருணங்கள் முக்கியமானவை. மூன்று விஷயங்கள் அப்பதிவுகளில் ஒன்றோடு ஒன்று முயங்கிக்கிடக்கின்றன. ஒன்று நகரத்தின் இரக்கமற்ற வளர்ச்சி. இரண்டு, அதிகாரத்தின் அடித்தட்டில் நிலவும் உறவுகள், மோதல்கள். மூன்று சுய தேர்வு என்பதற்கு இடமே இல்லாமல் இவ்விரண்டு விசைகளின் அழுத்தத்தை ஏற்று கேரம் போர்ட் காய் போல வாழ்க்கையென்னும் செவ்வகப்பலகைக்குள் உருண்டோடியபடி இருக்கும் மனிதர்கள். இது நாவலின் மிகப்பெரிய பலம். ஐ.டி.துறை வளர்ச்சி, தண்ணீர் விற்பனை (ஒருமுறை தோகூர் க்ராஸ் நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்றிருந்த பத்து நிமிடங்களில் பதினைந்துக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளைப் பார்த்தேன். புதிய அடுக்ககங்கள் உருவாகும் இடங்களை இவை எப்படி வளைத்துப்போட்டு தம்மை ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக மாற்றிவைத்துக்கொள்கின்றன என்றெல்லாம் யோசித்தபடி நின்றிருந்தேன். பெருமூச்சு விடுவதற்கும் மேலாக என்னால் ஒன்றும் செய்ய முடிந்ததில்லை), அதையொட்டி நிகழும் அதிகார மோதல் என பொருத்தமான பின்னணியோடு கதையின் களத்தை அமைத்திருக்கிறீர்கள். கச்சிதமான உங்கள் மொழியால் மிகக்குறைவான சொற்களின் துணையோடு காட்சிகளை அடுத்து, அடுத்து என நகர்த்திக்கொண்டே செல்கிறீர்கள். ஒரு காட்சி அழுத்தமான அனுபவமாக மனத்தில் இறங்கி பதியும் முன்பாகவே, அடுத்த காட்சியை நோக்கி நாவல் நகர்ந்துவிடுகிறது. அதை ஒரு பெரிய பலவீனமாகவே நான் உணர்கிறேன். பவானியின் பள்ளிப்பருவக் குழப்பம் ஒரு முக்கியமான காலகட்டம். உமாவின் முடிவும் அத்தகைய ஒரு முக்கியமனா காலகட்டம். ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு பவானி அவசரம் அவசரமாக மாறி, தன்னைத் தகவமைத்துக்கொள்வதும் முக்கியமான கட்டம். அவை அனைத்துமே இன்னும் அழுத்தமான காட்சிகளைக் கோரும் இடங்கள். தாவிச் செல்லும் முறையால், நாவல் வாசிப்பு ஒரு செய்தித்தாளில் வெளிவரும் சம்பவ வாசிப்பாக சரிந்துபோவதாக உணர்கிறேன். சம்பவங்களே இல்லாத கதையை சிலர் நானூறு, ஐந்நூறு பக்கங்கள் எழுதுகிற இந்தக் காலத்தில், ஏராளமான சம்பவங்களை ஒருசில வரிகளால் நீங்கள் கடந்துபோக முயற்சி செய்திருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அறியாமையோ, இயலாமையோ நிச்சயம் இதற்குக் காரணமல்ல என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். அவற்றையும் கடந்து இந்த முடிவை நோக்கி உங்களைச் செலுத்திய விசை எதுவென எனக்குப் புரியவில்லை, எதுவாக இருந்தாலும் என்னை நம்பும் நண்பர் நீங்கள் என்கிற நிலையில் அந்த விசைக்கு நீங்கள் செவிசாய்த்திருக்கக்கூடாது என்றே சுட்டிக் காட்ட விழைகிறேன். விரிவாக எழுதுங்கள் மணிகண்டன். நாவல் என்பதற்கான பொருளே விரிவுதான். விரிவான தளத்தில், களத்தில் வாழ்க்கையை வைத்துப் பார்த்தல். விரிவின்மையே இந்த நாவலில் நான் காணும் பெரிய குறை. அது உங்கள் அடுத்த நாவலில் நிகழக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

எழுத்தாளர் பாவண்ணன்.

                                       ***

மூன்றாம் நதி நாவல் தமிழுக்கு புதுமையானது. 100 பக்கங்களில் தான் சொல்ல வந்த கதையை நேர்த்தியாக சொல்லிவிட முடியும் என்ற எழுத்தாளரின் நம்பிக்கை பாராட்டுக்குரியது. நகரமயமாதல் ஏழைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றத்தை 100 பக்கங்களில் சமரசம் இன்றி சொல்லிவிட முடிகிறது வா. மணிகண்டனால். நாவல் என்றாலே அது பலனுரு பக்கங்களில் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியவர்கள் தான் இந்த மாற்றத்தையும் ஆதரிக்க வேண்டும்.

100-150 பக்கங்களுக்குள் நாவல் எழுத விழைவோருக்கு இந்நாவல் ஒரு வழிகாட்டி. தலையணை சைஸ் புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு படிக்கமுடியாமல் தடுமாறுவதை விட இதுமாதிரியான நாவல்கள் நல்ல முயற்சியே. தம்பி லஷ்மி சரவணக்குமாரின் நாவல்களும் அத்தகைய வடிவத்தையே கொண்டிருக்கிறது.

இளம் எழுத்தாளர்களின் புதிய முயற்சியை வரவேற்பதுதான் தமிழ் கூறும் நல்லுகத்துக்கு நல்லது.

- நாச்சியாள் சுகந்தி

                                      ***

அன்பின் மணிகண்டன் அவர்களுக்கு,

சென்னை புத்தக கண்காட்சியில் டிஸ்கவரி அரங்கில் மூன்றாம் நதி வாங்கிய பின் திரும்பி பார்த்தால் நீங்கள். ஆச்சர்யம். நான் வாங்கும் புத்தகங்களில் அதை எழுதியவர்கள் கையொப்பம் இடம் பெற்றிருக்கும். மூன்றாம் நதியிலும் அது கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சி.
நீங்கள் படித்துவிட்டு நிச்சயம் கருத்தை சொல்லுங்கள் என கேட்டமையால் இந்த மின்னஞ்சல். புனைவு வழி ஒரு நகரத்தின் வளர்ச்சியை சொல்லியமைக்கு வாழ்த்துக்கள்.

கருத்து, விமர்சனம் என என்னால் சொல்ல முடியவில்லை. வாசிப்பனுபவமாக பகிர்கிறேன்.

பெங்களூர் என்னும் பெயரில் வாழ்ந்த நகரமே சொர்கம். எப்போது பெங்களூரு ஆனதோ அது நரகம் என்றும் சொல்லலாம். என் பெரியப்பா மாமா பெங்களூரில் இருப்பதால் சிறு வயதில் இருந்தே விடுமுறை ஆனால் பெங்களூர் சென்றுவிடுவேன். அப்பொழுதான் K.R புரம் உங்கள் கதையில் வரும் ஏரியைப் போல் அதன் மாற்றத்தை வருடா வருடம் கண்கூடாக பார்த்திருக்கிறேன். இப்போது இருக்கும் பெங்களூரு என்னவோ எனக்கு அந்நியமாய்படுகிறது. நான் பார்த்த அழகிய குளிர் பிரதேசம் இதுவல்ல என்றே தோன்றுகிறது. மூன்றாம் நதியில் சொல்லப்படும் தண்ணீர் பிரச்சனைகளை கோடை விடுமுறைகளில் கண்கூடாக பார்த்திருக்கிறேன் அணுபவத்திருக்கிறேன். தண்ணீர் டிராக்டர் வந்தால் தான் நமக்கு இனி குளியல் என்னும் நிலைமையையும் கடந்திருக்கிறேன். தண்ணீருக்காக காலி குடங்களில் என் மாமியுடன் சேர்ந்து K.R புரம் ITI லேஅவுட் வீதிகளில் அலைந்திருக்கிறேன். அப்படி பிடிக்கும் போது குடத்தில் இருந்து சிறிதளவு தண்ணீர் சிந்தியமைக்காக அருகில் இருந்தவர்களிடம் வசையும் வாங்கி இருக்கிறேன். ரோட்டில் ஏதாவது தண்ணீர் டிராக்டர் வந்தால் அதனை மறித்து யார் வீட்டிற்காவது போறீங்களா? எங்களுக்கும் தண்ணீர் வேணும் கொண்டு வாரீங்களா. போன்ற கேள்விகள் சம்பில் தண்ணீர் காலியாகும் போது மாமா மாமியிடமிருந்து வந்திருக்கிறது. இப்போது காவேரி நீர் வருகிறது என்கிறார்கள். ஆக இந்த நாவலின் கதைக்களம் படிக்கும் போது எனக்கு நெருக்கமாகவே இருந்தது.

மூன்றாம் நதியில் முதல் அத்தியாயம் தவிர்த்து ஒரே பிடிப்பில் வாசித்து விட வேண்டுமென்ற வேகம் வந்து விட்டது. அவ்வளவு யதார்த்தமாய் விறுவிறுப்புடன் செல்கிறது. ஏனோ முதல் அத்தியாயம் ஒட்டவில்லை. முதல் அத்தியாயத்தை ஒரு சிறுகதை போல் வாசித்தால் அருமை என்றே தோன்றும். ஒரு சந்தர்ப்பத்தில் லிங்கப்பாவுக்கும் பவானிக்கு திருமணம் ஆகிவிட்டது அவர் தீயில் கருகி உயிரியக்க போகிறார் என்று தெரிந்தவுடன் பின் வரும் பக்கங்களை படித்துவிட வேண்டும் என்ற ஒரே காரணத்தால் நகர்கிறது. அமாசையின் முதலாளி முடிச்சிக்கலாம் என சொல்லுவதில் இருந்து லிங்கப்பா தான் பவானியின் கணவர் என தெரிய வரும் பக்கங்ககள் வரை எனக்கு பிடித்திருந்தது. எளிய குடும்ப சூழ்நிலையில் பிறந்து தன் வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதை அழகாய் நகர்த்தி இருக்கிறீர்கள். அவளுக்கு ஏற்படும் துன்பம் மகிழ்ச்சி சிரிப்பு கண்ணீர் என அனைத்தையும் காட்டி கதை நகர்கிறது. பெங்களூரு எனும் நகரம் சாமானியர்களின் கையை விட்டு வெகு தூரம் சென்றுவிடுகிறது. பவானி அமாசை உமா லிங்கப்பா பால்காரர் ஹொஸா ரோட்டுகாரர் என அனைவரின் குணாதிசயங்களும் உணர்த்திய விதம் அருமை. எடுத்த கதைகளத்திற்கு நியாயம் செய்திருக்கிறீர்கள்.

ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போது உவமையாக ஒன்றை சொல்லி முடித்திருந்தது பிடித்திருந்தது.

அடுத்த புத்தகத்திற்காக காத்திருக்கிறேன்.

ஹேம்நாத் அண்ணாதுரை
சென்னை
                                           ***
மூன்றாம் நதி- புத்தக கண்காட்சியிலேயே வாங்கி அப்போதே படித்து விட்டேன். விமர்சனம் எழுத வேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தாலும், இப்போதுதான் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. முதலில் வடிவமைப்பு, அட்டைப்படம் அட்டகாசமாக இருக்கிறது என்றாலும் லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பனுக்கு ஈடாக முடியவில்லை. பக்கங்களை வைத்து பார்த்தால் விலை சற்று அதிகம். ஆனால் உள்ளே இருக்கும் சரக்குக்கு கண்டிப்பாக கொடுக்கலாம்.

மணிகண்டனின் முதல் நாவல், ஆனாலும் மனிதர் அசராமல் அட்டகாச படுத்தி இருக்கிறார். கதை மாந்தர்களை அட்டகாசமாக பிணைத்து இருக்கிறார். பொதுவாக மணிகண்டனின் எழுத்தில் இருக்கும் நக்கலும், நையாண்டியும் இதில் இல்லை, ஏனெனில் கதை மாந்தர்கள் விளிம்பு நிலை மனிதர்கள், அதனால் அவர்கள் வாழ்க்கையில் நகைச்சுவையும், நையாண்டியும் இருக்காது என்று முடிவு செய்துவிட்டார் போலும், கதை முழுவதும் பிழியப் பிழிய சோகம், மிகப் பெரிய நாவலுக்கு வாய்ப்பு இருந்தும் மிகவும் சுருக்கி விட்டார், இதனுடைய தொடர்ச்சி எழுதப்போவதாக சொல்லி இருக்கிறார், இருந்தாலும் இந்த பக்கத்திலேயே நிறைய விஷயங்களை சொல்லாமல் விட்டது போல் தெரிகிறது, ஒரு நிறைவு இல்லாமல் இருப்பது போன்று தோன்றுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனியாக படித்தால் தனி சிறுகதை போன்று இருக்கவேண்டும் என்று முயற்சித்து இருப்பதாக சொல்லியிருந்தார், ஒரு வேலை அதனால் தான் நாவல் முழுமையின்று தோன்றுகிறது என்று நினைக்கிறேன். பல இடங்களில் தொடர்ச்சி இல்லாமல் பிய்த்து போட்டது போல் தொங்குகிறது, ஆனாலும் மணிகண்டனுக்கு மிகப்பெரிய வெற்றிதான், நிச்சயமாக படிக்க வேண்டிய நாவல். சாருவைபோல் முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று படிப்பவன் மண்டையை குழப்பாமல், சாமானியர்களுக்கு புரிவது போல் எளிமையான நடையில் எழுதுவதற்கு தனியாக பாராட்ட வேண்டும்.

ஈரோடு ஆனந்த்

                                          ***

எந்த ஒரு இலக்கியப் படைப்பும் புனைவு, எதார்த்தம் ஆகிய இரண்டு தூண்களின் மீது கட்டமைக்கப்படுகின்றன. இவ்விரண்டும் சரிசமமாக இருக்கும்போதுதான் படைப்பாளியின் நோக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கேனும் நிறைவேறும். ஒன்றை மற்றொன்று மிஞ்சும் பொழுது ஒன்று அந்த படைப்பு அதிகம் சோபிக்காமல் போய்விடுகிறது அல்லது பொது தளத்திற்கு வராமல் அறிவு தளத்திலேயே தேங்கிவிடுகிறது. தங்களின் மூன்றாம்நதி எனும் இந்த புதினத்தில் இவ்விரண்டு அம்சங்களையும் சரிசமமாக கையாண்டிருப்பதற்காய் என் முதல் வாழ்த்துகள்!

தலைப்பைப் படித்தவுடன் இந்த கதை ஏதோ ஒரு அழிவின் விளிம்பில் இருக்கும் நதியைப் பற்றியதாக இருக்கும் என்றெண்ணிய நான், முகவுரையை படித்தவுடன் என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்! மூலாதாரமாக இருக்கும் நதிகள் நம்முடைய அலட்சியத்தாலும், கவனக்குறைவாலும் மூன்றாம் நதிகளாக உருமாறி இருக்கின்றன.

தாம் சுரண்டப்படுகிறோம் என தெரிந்து தம்முடைய உழைப்பை தம்மை சுரண்டுபவர்களுக்கே தரக்கூடிய நிலையில் இருந்து பார்க்கும்பொழுது நாமும் ஒருவகையில் மூன்றாம் நதிகள்தான்!

பவானியும் லிங்கப்பாவும் சார்ந்திருக்கக்கூடிய சமூகம் வெறும் வாழ்வாதாரத்திற்காக தம்மை சுரண்டலுக்கு உட்படுத்திக்கொள்கிறார்கள்! ஆனால் மெத்த படித்த நம்மைப்போன்றோர் சுரண்டலுக்கு ஆட்படுவதையே ஒருவித கௌரவமாக கருதுகிறோம். இந்த நூலிழை வித்தியாசம்தான் நம் இருவரையும் வெவ்வேறு திசைகளை நோக்கி ஓடச் செய்கின்றது.

இன்றைய சமூக சூழலில் இந்த புதினத்தை இந்த அடிப்படையிலிருந்து அணுகுவது எதார்த்தமானதாக இருக்கும் என்ற என் எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்த கருத்தை பதிவு செய்திருக்கிறேன்! 
மூன்றாம் நதியாக சித்தரிக்கப்பட்டுள்ள மனிதர்களின் வாழ்வியல் எதார்த்தங்களான, வாழ்வாதாரத்திற்கான போராட்டம், காதல், குடும்பம், காமம், சோகம் போன்றவைகளை பேசி இருப்பது அவர்களும்
மனிதர்கள்தான், எல்லோரைப்போலவும் அவர்களுக்கும் வாழ உரிமை உண்டு எனும் நாம் மறந்துவிட்ட எதார்த்தங்களை நினைவூட்டுகிறது. கதையின் துவக்கமும் முடிவும் ஒரே புள்ளியில் அமைந்திருப்பது படிப்பவர்களின் மீது உறுதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது!

இடையிடையே வரும் கதாபாத்திரங்கள் புனைவின் ஓட்டத்திலும், எதார்த்த நிலையை பதிவுசெய்வதிலும் பெரும் பங்காற்றுகின்றன. உமாவின் வருகையும், அதற்கும் பவானியின் தந்தை சொல்லும் காரணங்களும் என்னை ஒருகணம் (பொம்பளை வாசம்) எனும் தங்களின் கதைக்கு இட்டுச் சென்றது. இரண்டு கதைகளும் வெவ்வேறு தளங்களில் நிகழ்ந்தாலும் அவை பதிவு செய்யும் எதார்த்தம் ஒன்றுதான்! பஞ்சகச்ச வாத்தியாரைப் போன்றோர் இருந்ததால்தான் என்னமோ இன்றைக்கு பொது சமூகத்தில் ஆசிரியர்கள் மீது அதிருப்தி உருவாகி இருக்கிறது. தங்களின் கண் முன்னே நிகழும் முறைகேடான செயல்களைக்கூட இன்றைய ஆசிரியர்கள் தட்டிக்கேட்க முடிவதில்லை. ஆசிரியர்கள் மதிப்பிழந்ததற்கு ஆசிரியர்கள்தான் அடிப்படைக் காரணம் என்பதை நான் இதன்மூலம் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

பால்காரர் கதாப்பாத்திரத்தைப் பொருத்தவரை நான் தங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஏன் பால்காரர் தண்ணீர் விற்பதாக சித்தரித்திருக்கிறீர்கள்? இன்றைய சூழலில் தங்களை பால்காரர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் உண்மையில் தண்ணீரைத்தான் விற்கிறார்கள் என்ற எதார்த்தத்தை பதிவு செய்யும் முயற்சியா இது? 

இப்படியாக சில கதாப்பாத்திரங்களை கதைவோட்டத்திற்கு ஏற்றாவாறு படைத்திருப்பது ஒரு தனிச்சிறப்பு. ஐ.டி நிறுவனங்களில் ஒருவரை வேலைக்கு தேர்ந்தெடுக்கும்பொழுது சோதிக்கப்படும் மென்திரன்களில் (Soft Skills) பிரதானமானதான சுய மரியாதை (Self Esteem) என்ற விஷயம் கம்பெனிகளின் இலக்கை அடையும் முனைப்பில் காற்றில் பறக்கவிடப்படுகிறது என்பதை பதிவு செய்திருந்தது தகவல் தொழில்நுட்பத்துறையின் முரணானவற்றுள் ஒன்று. நம் சமூகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் எதிர்மறை தாக்கங்களை போகிற போக்கில் பதிவுசெய்த விதம் அருமை.

லிவிங் டுகெதர் கலாச்சாரமாகட்டும், மனிதநேயமற்ற தொழில் முறைகளாகட்டும், தன் சுய லாபத்திற்காக நிலங்களை அபகரிப்பதாகட்டும் இன்றைய சூழலில் இவைகளை எளிதில் எவராலும் கன்டறிந்துவிட முடியும். பால்காரர் வெட்டப்படும் காட்சியும், லிங்கப்பா பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்படும் காட்சியும், எரிந்த உடலை பவானி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் காட்சியும் என்னை அதிகம் பாதித்தன. நேரில் பார்த்திருந்தால் ஏற்படும் ஒருவகை பீதி கலந்த அதிர்ச்சி இந்த காட்சிகளை படித்தவுடன் எனக்கு உண்டானது. அன்றைக்கு முழுவதும் அதன் தாக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது!

நம் பாரம்பரியம் பற்றி வாய் கிழிய பேசும் நாம், நம் கண் எதிரே நிகழும் அநியாயங்களை பொருட்படுத்தாமல் சென்றுகொண்டிருக்கிறோம் எனும் எதார்த்தத்தை இந்த புதினம் வெளிப்படுத்துவதாக நான் உணர்கிறேன். இந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது தாங்கள் வெற்றிப்பெற்றுவிட்டீர்கள் என்றே சொல்லலாம்! என்னளவில் நான் உணர்ந்தவைகளை பதிவுசெய்துவிட்டேன் என்றே நினைக்கிறேன்.

தாங்கள் இந்த புதினத்தை எழுதியதற்கும், இன்னமும் எழுத வேண்டும் என்பதற்கும் வாழ்த்துகள் சொல்லும் அதே வேளையில், இந்த படைப்பின் மூலப் பிரதியை எங்களைப் போன்ற விழியிழந்தோருக்கு ஏற்றவகையில் ஆடியோவாகக் கொடுக்க முன்வந்ததற்கு தங்களுக்கு நன்றி. 

- நரேன் நவரசன்

                                                                      **

மசால் தோசை 38 ரூபாய் புத்தகம் ஏற்படுத்தியிருந்த தாக்கம் இதனை விரைவாக படிக்க தூண்டியது. அதற்காகவே பெங்களூரில் இருந்து சென்னை சென்று புத்தக கண்காட்சியில் இருந்து வாங்கி வந்து படித்தேன். வாங்கி வந்த அடுத்த நாள் ஆர்வம் தாங்காமல் காலை 6 மணிக்கு படிக்க ஆரம்பித்தேன். முழு மூச்சில் படித்தும் முடித்து விட்டேன் காலையிலேயே. படித்து முடித்ததும் ஏன் 100 பக்கங்களில் முடித்து விட்டீர்கள் என்றால் தோன்றியது. நானும் பெங்களூரில் வாழ்வதால் எளிதில் காட்சி படுத்தி விட்டேன் உங்கள் கற்பனைகளை. ஆயிரம் ஆயிரம் பவானிகளை தினமும் பார்த்து கொண்டு செல்வதுனாலயே என்னவோ கதை வெகுவாக கவர்ந்து விட்டது. மிக நன்றாக இருந்தது. ஓரே ஒரு சுணக்கம். அந்த பால்காரர் தன் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த செய்யும் பக்கங்களில் சிறிது தொய்வு வந்தது. பொறுமையை அதிகம் சோதித்து. பின் வேகம் எடுத்தது. அந்த பக்கங்களின் வீரியத்தை சற்று குறைத்து இருக்கலாம் என்பது என் கருத்து,,

இது அனைத்தும் என் கருத்து. என் மனப்போக்கு. விமர்சனங்களால் மட்டுமே நாம் அடுத்த நிலைக்கு செல்ல முடியும் என்பதனாலேயே உங்களுக்கு என் விமர்சனம். பொறுமையாக படித்ததற்கு என் நன்றிகள்.

நேரில் சந்திக்கும் காலத்திற்கு காத்து இருக்கிறேன்.

- பிரபு கந்தசாமி

                                                                       **

அன்புள்ள மணி அண்ணனுக்கு,

தங்களின் மூன்றாம் நதி நாவலை நேற்று தான் படித்து முடித்தேன். அதிக பக்கங்கள் கொண்டவை என்பதாலேயே நாவல்கள் என் விருப்ப தேர்வில் பெரும்பாலும் இருக்காது. நீங்கள் நூறு பக்கங்கள் என்று சொன்ன பொழுதே எனக்கு புத்தகத்தின் மீது ஒரு நன்மதிப்பு உண்டானது. 

நகரமயமாதலால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பணம், புகழ் என்னும் மாயைகளுக்காக சூறையாடுகிறது என்பதை கூறும் அழுத்தமான பதிவு. வாழ்த்துக்கள்.

கதையை வெவ்வேறு காலங்களில் நகர்த்திய விதம், ஆவலை தூண்டிய விதம் அழகு. ஆனால் அந்த பால்காரர் போர்வெல் போடும் அத்தியாயம் சற்று சலிப்படைய செய்தது. மேலும் அந்த போலீஸ் ஸ்டேஷனில் சொல்லப்படும் சிலிண்டர் திருட்டு நிசப்தம் தளத்தில் வாசித்த ஞாபகம். கடைசி பத்தியில் வரும் கொலைகள் பற்றி கூட தாங்கள் எழுதிய ஞாபகம் வந்தது. 

மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள், தங்கள் எழுத்து பணியும் சேவையும் என்றும் தொடர என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

அன்புள்ள,
இரா ஹரிராமன்                     

0 எதிர் சப்தங்கள்: