Jul 20, 2016

நேர்காணல்

மூன்றாம் நதி நாவல் குறித்து த டைம்ஸ் தமிழ் இணைய இதழில் வெளியான நேர்காணல். பத்திரிக்கையாளர் மு.வி.நந்தினி வினாக்களை அனுப்பியிருந்தார். புத்தகத்தை வாசித்துவிட்டு வினாக்களை அனுப்பி அதற்கான பதில்களைப் பெற்று வெளியிடுவதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. அவருக்கு நன்றி.

த டைம்ஸ் தமிழ் இணையத்தளமானது தொடர்ந்து அப்டேட் செய்யப்படுகிறது. பெரும்பாலான செய்திகள் current issues தான்.

                                               ****

1. நாவலை குறிப்பிட்ட பக்கங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்கிற தீர்மானத்தில் எழுதினீர்களா? அனைத்து அத்தியாயங்களும் சுருக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. கூடுதலாக இந்தக் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துக்கு தடைபோடுவதுபோல் உள்ளது. இதை நீங்கள் உணர்ந்தீர்களா?

நாவல் நூற்றைம்பது பக்கத்திற்குள் இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன். முதல் நாவலிலேயே அகலக் கால் வைத்துச் சிக்கிவிடக் கூடாது என்பது முதல் காரணம். புதிதாக வாசிக்கிறவர்கள் சலிப்பில்லாமல் வாசித்துவிடக் கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பது இரண்டாம் காரணம். நாவல் என்றாலே விரிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நறுக் என்று இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளலாம் என்று எழுதி முடித்து புத்தகமாக்கி, இப்பொழுது பார்த்தால் இதுதான் நாவலின் பலமாகவும் இருக்கிறது. பலவீனமாகவும் இருக்கிறது. பாராட்டுகிறவர்கள் இந்த அம்சத்தைத்தான் பாராட்டுகிறார்கள். விமர்சிக்கிறவர்களும் இதைத்தான் பிரதானமாக விமர்சிக்கிறார்கள். உண்மையைச் சொன்னால் இப்போதைக்கு எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது.

2. பவானி; கொங்கு வட்டாரத்தின் குறியீடு; அம்மக்களால் வணங்கப்படும் ஒரு தெய்வம். இதுதான் பவானி கதாபாத்திரத்தை ஒழுக்க மதிப்பீடுகளுக்குள் வைக்கக் காரணமா? தனக்கான அளவற்ற சுதந்திரமும் ஒழுக்க மதிப்பீடுகளை திணிக்காத வாழ்க்கையையும் கொண்ட பவானியின் காதல் அத்தியாயம் தணிக்கை செய்து எழுதப்பட்டதாக தோன்றுகிறது. உங்கள் பதில் என்ன?

பவானியை நேரில் சந்தித்திருக்கிறேன். நிறையப் பேசியிருக்கிறேன். அவளுடைய கதைதான் இது. நம்முடைய சூழலில் ஒரு பெண் தனது வாழ்க்கைக் கதையைச் சொல்லும் போது இந்தச் சமூகம் ஒழுக்க மதிப்பீடுகளாக வரையறை செய்திருக்கும் எல்லைகளுக்குள் நின்றுதான் தன்னுடைய கதையைச் சொல்வாள். ஒருவேளை அவளுக்குக் கட்டற்ற சுதந்திரம் கிடைத்திருந்தாலும் கூட ஒழுக்க மதிப்பீடுகளை மிஞ்சாதவளாகத்தான் தன்னைப் பற்றிப் பேசுவாள். ஒருவகையில் இதுவொரு சுய தணிக்கைதான். அப்படி தணிக்கை செய்யப்பட்ட வடிவத்தில்தான் பவானியின் கதையைக் கேட்டேன். கேட்டவற்றை நாவலாக்கியிருக்கிறேன். நாவல் வலுப்பெற வேண்டும் என்பதற்காக அவளது கதாபாத்திரத்தைச் சிதைக்க வேண்டியதில்லை என்பதில் தெளிவாக இருந்தேன். ஒருவேளை அவள் இந்த நாவலை வாசிக்கிற வாய்ப்புக் கிடைக்குமாயின் வாசித்துவிட்டு தன்னைப் பற்றி அசிங்கமாக எழுதியிருக்கிறான் என்று நினைத்துவிடக் கூடாதல்லவா? 

3. நாவலில் தொடக்கம் முதல் அது பயணித்து முடிவது வரை அதில் சொல்லப்பட்டிருக்கும் இடப் பெயர்வு வாழ்க்கைக்கு இணையாக நிஜத்தில் உங்களுடைய இடப்பெயர்வும் இருந்திருக்கிறது இல்லையா? உங்களுடைய பூர்விகம், படிப்பு, வேலைக்காக பெங்களூர் வந்தது பற்றி கேட்கிறேன்...

எனக்கு நிகழ்ந்ததெல்லாம் துன்பமில்லாத இடப்பெயர்வு. சேலம், வேலூர், சென்னை போன்ற ஊர்களுக்கு படிப்பதற்காகச் சென்றேன். எங்கே படிக்கப் போகிறேன், செலவுக்கு என்ன செய்யப் போகிறேன் என்பதில் தெளிவு இருந்தது. படித்து முடித்த பிறகு ஹைதராபாத், பெங்களூர் போன்ற இடங்களுக்குச் சென்றதெல்லாம் சம்பளத்தோடு கூடிய இடப்பெயர்வு. பணம் இருந்தால் இந்த உலகில் பிழைத்துக் கொள்ளலாம். அந்தப் பணம் தேவையான அளவுக்கு கிடைத்தது. இடப்பெயர்வின் போது வேதனைகள் இருக்கும்தான். காதலி கிடைக்கவில்லை, வண்டி வாங்க வக்கில்லை என்கிற மேம்போக்கான துன்பங்கள் அவை. அதை வைத்துக் கொண்டு ‘எவ்வளவு துன்பத்தை அனுபவித்தேன் தெரியுமா?’ என்று புலம்பினால் அது போலியான புலம்பலாகத்தான் இருக்கும்.  

பவானி, அமாசை மாதிரியானவர்களின் இடப்பெயர்வுடன் என்னுடைய மத்தியதர இடப்பெயர்வை எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாது. எங்கே போகிறோம்? சம்பாத்தியத்துக்கு என்ன வழி என்ற எந்த தெளிவுமில்லாமல் பெருநகரத்தில் காலை வைக்கும் ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு பாவப்பட்டவன் என்பதை யோசித்தாலே அடி வயிறு கலங்குகிறது. அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லை. கையில் பத்து பைசா வருமானமில்லை. இரவில் காலை நீட்ட இடமில்லை என்று அவர்களுக்கு இருக்கக் கூடிய பெருங்கவலைகளில் ஒன்றிரண்டு சதவீதம் கூட என்னைப் போன்றவர்களுக்கு இருந்திருக்காது. அதனால் ஒப்பீடு தேவையில்லை.

4. விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை எப்போதும் துயரம் நிரம்பியதாகவே இருக்குமா? பவானியில் பிறப்பிலிருந்து தொடங்கும் துயரம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நீண்டுகொண்டே போகிறதே...

பெங்களூரின் விளிம்பு நிலை மக்களை அணுக்கத்தில் இருந்து கவனித்திருக்கிறேன். பொதுவாக விளிம்பு நிலை மக்களின் கொண்டாட்டங்கள் உற்சாகமளிக்கக் கூடியவைதான். ஆனால் பவானி நேரில் சந்தித்த கதாபாத்திரம். இப்பொழுதும் கூட அவளை அவ்வப்போது சந்திக்கிறேன். என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். அவளது வாழ்க்கை துயரம் மிகுந்தது. ஆனால் அந்த வாழ்விலும் உற்சாகமும் கொண்டாட்டமும் உண்டு. அதை வேறொரு குரலில் பதிவு செய்ய வேண்டும்.

5. ஒரு நகரை நிர்மாணிப்பது போன்ற ‘வளர்ச்சி’ என சொல்லப்படும் பணிகளில் யார் உழைப்பைக் கொட்டுகிறார்கள் என நாவலின் ஊடாக ஆவணப்படுத்தியுள்ளீர்கள். அதுபோல பெங்களூரின் தண்ணீர் தட்டுப்பாடு விஷயத்தையும் சொல்லலாம்; கதாபாத்திரங்களின் வாழ்க்கைச் சூழலோடு ஒன்று இந்த விடயங்களும் வருவது இயல்பாக இருக்கிறது. எழுதும்போது இது நாவலின் போக்கில் வந்ததா? அல்லது இந்த விடயங்களுக்காக கதாபாத்திரங்களின் சூழலை வடிவமைத்தீர்களா?

நாவலில் இடம்பெறும் தண்ணீருக்கான கொலை எங்கள் வீட்டிற்கு பின்புறமுள்ள வீதியில் நிகழ்ந்தது. ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த உடலைப் பார்த்தேன். அதன் பிறகு ஏன் கொலை செய்யப்பட்டார் என்று விசாரித்த போது கிளைக் கதைகள் நீண்டு கொண்டேயிருந்தன. எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒற்றைக் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு நாவலின் களமாக்கிய பிறகு இன்ன பிற விஷயங்கள் நாவலின் போக்கில் இயல்பாக வந்தது.

6. விவசாயக் கூலிகளாக இருந்த தமிழக பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெங்களூர் சென்று திரும்புவதன் மூலம் ஓரளவு பணத்தை ஈட்டி, சொந்த ஊரில் உள்ள மற்றவர்களைக் காட்டியும் மேம்பட்ட பொருளாதார நிலையில் இருக்கிறார்கள்.  ஒரு கட்டத்தில் ஊர் திரும்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள்...நீங்கள் பார்த்தவரையில் நாவலின் சொல்லப்பட்ட வாழ்க்கைதான் நிதர்சனத்திலும் உள்ளதா?

பெங்களூர் வந்துவிட்டு ஊர் திரும்புகிறவர்களும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து மேஸ்திரிகள், கம்பி வேலை செய்கிறவர்கள் என நிறையப் பேர் வேலை நடக்கும் இடங்களிலேயே தங்கியிருந்தபடி அவ்வப்பொழுது ஊருக்குச் சென்று எப்பொழுதாவது நிரந்தரமாக ஊரிலேயே தங்கிக் கொள்கிறார்கள். ஆனால் பெங்களூரில் சில சேரிப்பகுதிகள் இருக்கின்றன. விவேக்நகர், கார்வேபாள்யா போன்ற பகுதிகளில் குடிசைவாசிகளில் தொண்ணூறு சதவீதம் பேர் தமிழர்கள். விசாரித்தால் தமிழகத்தை பூர்வகுடிகளாகக் கொண்டவர்கள். இங்கேயே வந்து தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து பெங்களூர்வாசிகள் ஆகிவிடுகிறார்கள். துரதிர்ஷ்டம் என்னவென்றால் சொந்தமாக வீடு கூட இல்லை. 

7. இது உங்களுடைய முதல் நாவல். எவ்வித வெளியீட்டு, விமர்சன நிகழ்வுகளும் நடத்தாமல் இருப்பதன் பின்னணி என்ன?

அப்படியெல்லாம் எதுவுமில்லைங்க. ஒரு கூட்டம் நடத்தி அதற்கு நான்கைந்தாயிரம் செலவு செய்ய வேண்டுமா என்று யோசனை இருந்தது. அதற்கு பதிலாக ஏலம் விட்டுவிடலாம் என்று தோன்றியது. முதல் பிரதியை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கிக் கொண்டார்கள். மொத்தமாக இரண்டு லட்ச ரூபாய் கிடைத்தது. ஏழெட்டு மாணவிகளின் படிப்புச் செலவுக்குக் கொடுத்திருக்கிறோம். வெளியீட்டு விழா நடத்தியிருந்தால் இன்னமும் கவனம் கிடைத்திருக்கும்தான். ஆனால் அதைவிடவும் இத்தகைய காரியங்கள்தான் முக்கியம்.

8. பவானியைப் போன்றவர்கள் துயரங்களிலிருந்து விடுபட நீங்கள் எந்தவிதமான தீர்வுகளை பரிந்துரைப்பீர்கள்...

நம் சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் மிகச் சிக்கலானவை. சாதியில்லாமல் சமூக அமைப்பு இங்கு சாத்தியமில்லை. அதே போல பணமும் மதமும் இல்லாமல் அரசியல் அமைப்பும் சாத்தியமில்லை. துரதிர்ஷ்டவசமாக அத்தனை எதிர்மறையான விஷயங்களும் பின்னி பிணைந்து கிடக்கின்றன. எல்லா மட்டங்களிலும் வல்லவன் எளியவனை உறிஞ்சிப் பிழைக்கிற வாழ்க்கை முறைதான் நம் முன்னால் இருக்கிறது. இதையெல்லாம் ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ளாமல் எதுவுமே சாத்தியமில்லை. எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே பெருங்கூட்டம் செயல்படுகிறது. அதை உடைப்பதில்தான் வெற்றி இருக்கிறது.

9. சமூக அக்கறையோடு செயல்படும் நீங்கள், எழுத்திலும் சமூக அக்கறை வெளிப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா? அல்லது எழுத்து படிப்பவரை மகிழ்ச்சிப் படுத்தினால் போதும் என நினைக்கிறீர்களா?

எழுத்தில் உண்மை இருந்தால் போதும். நாம் என்னவாக இருக்கிறோம்; எதை நினைக்கிறோம் என்பதை அப்படியே எழுதினால் போதும். பிறவற்றைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

10. மூன்றாம் நதி, சினிமாவாகவோ, குறும்படமாக எடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. இதை சினிமாவாக்குகிறேன் என யாரேனும் விரும்பிவந்தால் உங்களுடைய எதிர்வினை என்னவாக இருக்கும்?

நாம் எழுதுவதைப் பற்றி பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள் என்பதில்தான் சந்தோஷமே இருக்கிறது. இந்த நேர்காணலும் கூட அப்படியான சந்தோஷம். நாவலை யாராவது படமாக்குகிறேன் என்று கேட்டால் தாராளமாகக் கொடுத்துவிடுவேன். அது சந்தோஷமான விஷயமில்லையா? திரையில் பெயர் வரும். அம்மாவிடம் காட்டலாம். வீட்டில் பந்தா செய்யலாம்.

11. மூன்றாம் நதி எழுதிய பாதிப்பிலிருந்து மீண்டு விட்டீர்களா? பவானி நீ்ங்கள் நினைத்தது போல வெளிப்பட்டிருக்கிறாளா?

பவானி பற்றி எதிர்பார்த்த மாதிரிதான் சொல்லியிருக்கிறேன். உங்களின் முதல் கேள்வியைப் போல அவளது முழுமையான வாழ்க்கை இந்த நாவலில் வெளிப்படவில்லை என்று விமர்சனங்களும் வந்திருக்கின்றன. அதனால் இதை மனதில் போட்டுக் குதப்பாமல் கொஞ்சம் விலகி இருக்கலாம் என்று தோன்றுகிறது. சூடு ஆறட்டும் என நினைக்கிறேன். 

12. நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்பினால் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்..

மூன்றாம் நதி பற்றி நிறையப் பேர் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். உற்சாகமாக இருக்கிறது. இதைத்தான் விரும்பினேன். திட்டிக் கூட எழுதட்டுமே. ஆனால் நாம் எழுதியதைப் பற்றியதான உரையாடல் நடப்பதுதான் உயிர்த்திருப்பதற்கான அடையாளம். அந்த உற்சாகம் கிடைத்திருக்கிறது. இனி அடுத்த நாவலை எழுத விரும்புகிறேன். வேறொரு கதாபாத்திரம். மனதுக்குள் ஒரு வடிவம் கிடைத்தவுடன் எழுத ஆரம்பித்துவிடுவேன். 
                                                 
                                                          ***
மூன்றாம் நதி ஆன்லைன் விற்பனைக்கான இணைப்பு

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே பெருங்கூட்டம் செயல்படுகிறது. அதை உடைப்பதில்தான் வெற்றி இருக்கிறது.//