May 26, 2016

விளம்பரம்

கடந்த வருடம் அலுவலகத்தில் ஆண்டு விழா நடந்த போது நிறையப் பேர் ஆடினார்கள். பாடினார்கள். எனக்கும்தான் ஆசை. ஆனால் ஆடவும் தெரியாது. பாடவும் வராது. அடுத்த ஆண்டுக்குள் நடனமாடி பழக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தலைகீழாக, கைகளை மட்டும் நிலத்தில் ஊன்றி, கால்கள் அந்தரத்தில் நடக்கும்படியாக விதவிதமான நடன அசைவுகள். ஆசைப்பட்டு ஆறு மாதம் ஆகிவிட்டது. ஒரு அசைவைக் கூட முயற்சி செய்து பார்க்கவில்லை. முயன்றால் இடுப்பு சுளுக்கிக் கொள்ளும் என்று தெரியாதா என்ன? ஆண்டு விழாவுக்குப் பிறகு ஏன் அவ்வளவு ஆசை என்று யோசித்துப் பார்த்தால் ஒரே காரணம்தான் - நாலு பேர் பாராட்டுவார்கள் அல்லவா?

காலங்காலமாக உள்ளுக்குள் உருவேறிக் கிடக்கும் ஆசை இது. கதை, கட்டுரையெல்லாம் பள்ளிக் கூடத்தில் எழுத ஆரம்பித்தது. ஆட்டம், பாட்டம் என்று எந்தத் திறமையுமில்லை. படிப்பும் பிரமாதமில்லை. அடுத்தவர்கள் நம்மை கவனிக்க வேண்டுமென்றால் நமக்கும் ஏதாவது ஒன்று தெரிய வேண்டும். அப்படியெல்லாம் முயற்சித்ததுதான். ஒரு கட்டத்தில் கட்டுரைக்கும், கதைக்கும் கவிதைக்கும் பரிசு கொடுத்தார்கள். கை தட்டினார்கள். அப்படியே பிடித்துக் கொண்டேன். திருமணம் வரைக்கும் ஒரு காதலியைக் கூட தேற்ற முடியவில்லையென்றாலும் கல்லூரி காலம் வரைக்கும் அடுத்தவர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்கு ஓர் உபகாரியாக இருந்த போது சந்தோஷமாக இருந்தது. கடிதம் எழுதி வாங்கிக் கொண்டவர்கள் பாராட்டினார்கள். 

இப்படி நான்கு பேர் பாராட்டுகிறார்கள் என்ற உத்வேகம் இருக்கிறது பாருங்கள்- கனவேலை செய்யும். அடுத்தடுத்த கட்டம் என்று நம்மை நகரச் செய்துவிடும். சுதந்திர தின பொன்விழாவில் கவிதை வாசித்ததிலிருந்து இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கிற இந்தப் பதிவு வரைக்கும் ‘நேற்று எழுதியதைவிட இன்றைக்கு நன்றாக எழுத வேண்டும்’ என்று நினைப்பதுதான் தொடர்ந்து எழுதுவதற்கான காரணியாகவே இருக்கிறது. அதை எப்படி அளவிட முடியும்? அடுத்தவர்களின் பாராட்டு வழியாகத்தான். ஆனால் நம் மனம் மெதுவாகப் பக்குவப்பட்டுக் கொண்டே வருவதை உணர முடியும். முழுமையான பக்குவம் என்று சொல்லவில்லை- அன்று இருந்ததைவிட இன்று பக்குவமடைந்திருக்கும். எது நிலையான புகழ், இந்தப் புகழுக்கு நாம் தகுதியானவன்தானா? அடுத்தவர்களின் பாராட்டுக்கு நாம் பாத்திரமானவனா என்று கேட்டுக் கொண்டேயிருக்கும். அடுத்தடுத்து மேம்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டும் என்று தோன்றும். அப்படித்தான் வலைப்பதிவு, அறக்கட்டளை இத்யாதி இத்யாதி எல்லாம்.

திடீரென்று எதற்கு இந்த தன்னிலை விளக்கம்? வருடத்திற்கு ஒரு முறையாவது சொல்லிவிட வேண்டிய தேவை உருவாகிவிடுகிறது.

இன்றைக்கும் நான் சராசரியானவன்தான். மனது நிறையக் கசடுகள் நிரம்பித்தான் கிடக்கின்றன. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை வெளியேற்ற முடியுமா என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அறுபது அல்லது எழுபது வயதில் முழுமையான முதிர்ச்சியை அடையலாம். ஒருவேளை அதெல்லாம் முடியாமல் சமூகம், குடும்பம் என்கிற அங்கங்களின் காரணமாகத் திரும்பத் திரும்ப இப்படியே உழலவும் கூடும். உழல்கிறோமோ அல்லது அடைகிறோமோ என்பது இரண்டாம்பட்சம்- முயற்சிப்போம்.

அவ்வளவுதான். 

எல்லாவற்றையும் விளம்பரமாக மட்டுமே பார்க்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். விளம்பரம்தான். இல்லையென்றெல்லாம் மறுக்க முடியாது. விளம்பரம் இருந்ததால்தான் கடலூருக்கும் சென்னைக்கும் லட்சக்கணக்கில் கொடுத்தார்கள். விளம்பரம் இருந்ததால்தான் நூறு பக்கமுள்ள ஒரு புத்தகத்தை லட்சக்கணக்கில் விலை கோருகிறார்கள். செய்கிற காரியங்களை வெளியில் சொல்கிறேன். விளம்பரமேதான். வலது கை கொடுப்பதை இடது கைக்குத் தெரியாமல் செய்கிற அளவுக்கு எனக்கு யோக்கியதை இல்லை. அடுத்தவர்களிடம் வாங்கித்தான் செய்ய முடிகிறது. அடுத்தவர்களின் பணத்துக்கு சரியான கணக்கு காட்ட வேண்டாமா? நம்மைச் சுற்றிய சமூகத்தில் இருக்கும் துன்பங்களையும் துக்கங்களையும் விலாவாரியாக எழுத வேண்டாமா? எழுதுகிறேன். விளம்பரம்தான்.

ஆனால் விளம்பரத்துக்கும் வியாபாரத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. வியாபாரம் என்பதில் எனக்கு ஆதாயம் இருக்க வேண்டும். பணம் கொழிக்க வேண்டும். அதைச் செய்வதில்லை என்பது என் மனசாட்சிக்குத் தெரியும். பணம் எனக்கு பொருட்டே இல்லை. இதைச் சொல்வது கூட விளம்பரம்தான் - ஆனால் சொல்லிவிடுகிறேன். எனது வாழ்க்கை முறை மிக எளிமையானது. ஒவ்வொரு மாதமும் ஐந்தாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு மொத்தச் சம்பளத்தையும் என் தம்பியிடம் கொடுத்துவிடுகிறேன். மாதம் முழுமைக்கும் அந்த ஐந்தாயிரம் ரூபாய்தான் என் செலவுகளுக்கு. பெரும்பாலும் மாதக் கடைசியில் தம்பியிடம் பணம் கேட்க வேண்டியிருக்கும். அதனால்தான் கஞ்சத்தனமாக இருப்பேன். தேவையில்லாத செலவுகளைக் குறைத்துக் கொள்வேன். என்னுடைய அதிகபட்ச பொழுது போக்குச் செலவு வாரம் ஒரு சிக்கன் பிரியாணி. பேருந்துகளில் வாசிக்க சில சஞ்சிகைகள். மற்றபடி, அரசுப் பேருந்துதான். கால் நடைதான். 

‘எழுதறியே காசு ஏதாச்சும் வருதா?’ என்று அம்மாவும் அப்பாவும் அடிக்கடி கேட்பதுண்டு. வரும். அவ்வப்போது. குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடருக்கு பத்தாயிரம், சுஜாதா விருதுக்கு பத்தாயிரம், கல்கி தொடருக்கு சில ஆயிரங்கள் இப்படி ஏதாவது வரும். எழுத்து வழியாக வரக் கூடிய எந்தப் பணமும் அடுத்தவர்களுக்குத்தான் என்றுதான் அவர்களிடமும் சொல்லியிருக்கிறேன்.‘அடுத்தவங்களுக்குக் கொடுத்தா பரவால்ல...கொஞ்சத்தையாவது பசங்க பேர்ல ஏதாச்சும் ஃபிக்சிட் டெபாஸிட் செய்யலாம்ல’ என்று எத்தனை முறை கேட்டிருப்பார்கள் என்று அவர்களுக்கும் எனக்கும்தான் தெரியும். தேவையில்லை. சம்பளம் வருகிறது. அதில் பார்த்துக் கொள்ளலாம். எழுத்து என்பது நான் வாழ்கிற சமூகத்திற்கானதாக இருக்கட்டும். கலை இலக்கியம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். எனக்கு வாய்த்திருக்கிற எழுத்து வழியாக அதிகபட்சமாக எவ்வளவு நற்காரியங்களைச் செய்ய முடியுமோ அதைச் செய்யலாம். அதற்கு விளம்பரம் செய்துதான் ஆக வேண்டும். ப்ராண்டாக மாறித்தான் தீர வேண்டும். இதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

இதெல்லாம் விளம்பரம் என்று யாராவது சொன்னால் எனக்கு பெரிதாக உறுத்தாது. ஆனால் வியாபாரம் என்றால் சங்கடமாக இருக்கிறது. வியாபாரம், பணம், சொகுசான வாழ்க்கை என்றெல்லாம் நினைப்பதாக இருந்தால் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு வாழ முடியும். புகழும் பணமும் மட்டுமே விருப்பமாக இருந்தால் அதை எப்படி வேண்டுமானாலும் அடைய முடியும். நூறு பக்கப் புத்தகத்தைக் கட்டிக் கொண்டு அழ வேண்டியதில்லை. கடவுளின் கருணையினாலும், அடித்தும் உதைத்தும் போராடியும் பெற்றவர்கள் படிக்க வைத்ததனாலும் கை நிறையச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறேன். 

எழுத்தை வைத்துக் கொண்டு சம்பாதிக்கப் போவதில்லை. ஆனால் அதை வைத்துக் கொண்டு சமூகத்தில் செய்யக் கூடிய உச்சபட்ச சாத்தியங்களை எல்லாம் முயன்று கொண்டேதான் இருப்பேன். அதற்காகத்தான் அத்தனை சிரமங்களும். பொய்யையும் புரட்டையும் எழுதி அத்தனை பேரையும் வெகு காலத்திற்கு ஏமாற்ற முடியாது. இறங்கி வேலை செய்ய வேண்டும். செய்து கொண்டிருக்கிறேன். 

எப்பொழுதாவது அதிகாலையில் ஏதாவதொரு ஊரின் பேருந்து நிலையத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் போது எனக்கே தோன்றும். இப்படியெல்லாம் சிரமப்பட வேண்டுமா என்று யோசித்திருக்கிறேன். அலைய வேண்டியதில்லைதான். ஆனால் மனிதர்களை நெருங்கிப் பார்க்க விரும்புகிறேன். அந்த நெருக்கம் என்னைச் சிறுகச் சிறுக செதுக்கும் என்று நம்புகிறேன். உள்ளுக்குள் புதைந்திருக்கும் கசடுகளை வெளியேற்றும் என நினைக்கிறேன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கோயம்பேட்டிலும் மதுரையிலும் சேலத்திலும் இறங்கி பத்து ரூபாய் கொடுத்து அரசாங்கத்தின் தண்ணீர் பாட்டிலை வாங்கி முகத்தைக் கழுவிக் கொண்டு பேருந்து நிலையத் திண்டுகளில் நிறைய நாட்கள் படுத்திருக்கிறேன். விடியும் வரை படுத்திருந்துவிட்டு விடிந்ததும்தான் நண்பர்களை அழைப்பேன். கோயம்பேடு திண்டுகளில் பயணிகள் படுத்துவிடக் கூடாது என்று நடுநடுவே சிறு தடுப்பு வைத்திருப்பார்கள். படுத்தால் இடுப்பு அழுந்தும். எல்லோருக்கும் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்குத் தெரியும். யாரிடமும் சொன்னதில்லை. வேணிக்கும் அம்மாவுக்கும் தெரிந்தால் அவர்கள் அழுது விடக் கூடும். அந்தந்த ஊர் நண்பர்கள் வருந்தக் கூடும். 

‘எங்க வீட்டுக்கு வந்துடுங்க’ என்று சொல்வதற்கு ஏகப்பட்ட பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான்கு மணிக்கும் மூன்று மணிக்கும் அடுத்தவர்களின் கதவைத் தட்ட மனமே வராது. அதெல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறேன். வாழ்க்கை எளிமையானதாகவே இருக்கட்டும். எவ்வளவுதான் நண்பர்கள் என்றாலும் அவர்களது நம்பிக்கையும் அன்பும் அப்படியே இருக்கட்டும். யாரையும் சிரமப்படுத்தாமல் என்னால் முடிந்த வேலைகளை என்னைச் சுற்றியிருக்கிறவர்களுக்காக செய்து கொண்டிருக்கிறேன். இதையெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை- ஆனால் வியாபாரம் என்று சொன்னால் சிரிப்பாக வருகிறது. ஒரு புத்தகம் விற்று வரக் கூடிய ராயல்டி என்பது எனது மாதச் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை என்பதைக் கூட நான் புரிந்து வைத்திருக்க மாட்டேனா என்ன?

ஒரு புத்தகம் வெளியிட்டு அதை விற்பனை செய்துதான் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் எதுவுமில்லை. லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் புத்தகம்தான் யாவரும் பதிப்பகத்தின் முதல் புத்தகம். நான்கைந்து இளைஞர்கள் சேர்ந்து பதிப்பகம் ஆரம்பித்தார்கள். நல்ல வியாபாரம். இன்றைக்கு ரமேஷ் ரக்சன், கணேசகுமாரன், இன்பா சுப்பிரமணியன் என்று ஏகப்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள். நல்ல விஷயம்தானே? தவறு எதுவுமில்லை. விளம்பரம்தான் காரணம். இன்றைக்கு மூன்றாம் நதி ஆயிரம் பிரதிகள் விற்றால் அவர்களுக்குத் தெம்பு. இன்னமும் இரண்டு புத்தகங்களை அடுத்த ஆண்டில் வெளியிடுவார்கள். விற்றுவிட்டு காசு கொடுப்பார்கள். பணத்தை வாங்கி வேறு சிலருக்குக் கொடுப்பேன். புத்தகம் விற்றால் என்ன விற்கவில்லை என்றால் என்ன என்னால் விட முடியாது. கரிகாலன் கேட்கிறாரோ இல்லையோ வேடியப்பனிடம் நான் தினமும் கேட்கிறேன். நன்றாக விற்கட்டுமே!

மேற்சொன்ன அடுத்தவர்களின் பாராட்டு, விளம்பரம், சமூகம், அறக்கட்டளை, எழுத்து என எல்லாமே பின்னிப் பிணைந்துதான். ஒன்றிலிருந்தான் இன்னொன்று வடிவம் பெறுகிறது. உருமாறுகிறது. அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இவற்றையெல்லாம் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. பிரித்தால் ஒன்றுமேயில்லை. செய்கிற செயலை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நமக்கான திருப்தியை அடையும் வகையில் அடுத்தவர்களுக்கு அர்த்தமாகும் வரையில் செய்ய முடியுமா என்றுதான் பார்க்கிறேன். 

பாதை தெளிவாகத்தான் இருக்கிறது. 

4 எதிர் சப்தங்கள்:

Murugan R.D. said...

உண்மைதான் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை அவர்களின் பயணங்களின்போது ஓரளவிற்கு அறியலாம், அவர்கள் நடை,உடை, சாப்பாடு போன்ற விசயங்களை வைத்து, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு என்ற சினிமா பாடல்வரி எவ்வளவு உண்மை என்று இந்த பேருந்து. பாசஞ்ஜர் ரயில் பயணங்களில்தான் உணரமுடியும், அதுபோல லக்சூரியாகவும் பரபரப்பாகவும் ஓடிக்கொண்டேயிருக்கிற உணர்ச்சியற்ற ஒரு உலகமும் இருக்கு என்றும் சி்ட்டிக்குள் பஸ்சுற்றிவரும்போது தெரியும், ஒரே நேரத்தில் இரு மாறுபட்ட வாழ்க்கை முறையை காண இநத சாதாரண பேருந்து பயணம் உதவும்

பேருந்து நிலையங்களில் பலதரப்பட்ட மக்களையும் அங்கு வியாபாரம் செய்து பிழைப்பவர்களையும் காணும்போது கொஞ்சம் புதிராகதான் இருக்கும், என்ன வருமானம்? என்ன நம்பிக்கை? என்ன உடல்வலிமை (ஆரோக்கியம்) என்று பல சுவாரஸ்யமான கேள்விகள் எழும், சில நேரங்களில் முன்னுக்குப்பின் முரணாக வேட்டிசட்டையோட எளிமையாக சாதார பேருந்து பயணம் செய்பவரின் வருமானம் 50 ஆயிரம் ஒரு லட்சம் என்று கூட இருக்கும், ஆம்னி பஸ்களில் பயணம் செய்பவர்களின் வருமானம் 20 ஆயிரம், முப்பதாயி‌ரம் என்றஅளவில் இருக்கும்,

பலதரப்பட்ட மனிதர்களுடனான பழக்கம் அல்லது அவர்களை தொடர்ந்து காண நேரிடும் சந்தர்ப்பங்கள் கூட நம்மை பக்குவப்பட்ட மனிதனாக செதுக்குவதில் ஒரு காரணமாக இருக்ககூடும், தொடரட்டும் உங்கள் சேவை,

Anand Viruthagiri said...

அக்மார்க் வா.ம வின் பதிவு.
கொஞ்ச நாள் ஆச்சுங்க, உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பதிவு வந்து.
இத்தனை வெளிப்படையான, நேர்மையான விளக்கம் மிக மிக அரிதான ஒன்று. இது உங்களது மிக பெரிய பலம் மட்டுமல்ல ஒருவிதமான காந்தமும் கூட.

Avargal Unmaigal said...

என்னை முதல்வராக்குங்கள் நான் வானத்தை வில்லாக வளைத்து உங்கல் காலடியில் வைக்கிறேன் என்பது போன்று வாக்குறுதி தரும் தலைவர்கள் உங்களின் செயல்களை பார்த்து அதன்படி செய்தாலே மிக எளிதாக முதல்வராகி விடுவார்கள்...

Satheesh said...

உலகில் அனைவருக்கும் பிடித்த மாதிரி செயல்களை கடவுளால் கூட நடத்த முடியாது ..
எத்தனை பேர் குடும்பத்தை விட்டுவிட்டு பெரும்பாலான வார கடைசிகளில் முகம் தெரியாத மனிதர்களின் துயரங்களுக்காக ஓடி இருக்கிறார்கள் ??? இங்கே கருத்துச் சொல்லும் என்னாலும் முடியாது...

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் 6 ஜென்மங்களாய் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..

அற்ப மனிதர்களின் சொல்லுக்காக நீங்கள் வருந்தும் நேரத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு மனிதனுக்கு தேவையான உதவி காலம் தாழ்த்திக்கிடைக்குமே என்ற சிறு அறிவும் இல்லாதவர்களை மறந்து விடுங்கள்...