May 25, 2016

ஐம்பதாயிரம்

மூன்றாம் நதி நாவலின் முதல் சில பிரதிகளை ஏலத்தில் வெளியிட்டு வரக் கூடிய தொகையை சில பெண்களின் கல்வி உதவித் தொகையாகக் கொடுத்துவிடலாம் என்று யோசனை தோன்றிய போது அதிகபட்சமாக ஐந்து அல்லது பத்தாயிரம் ரூபாய்க்கு யாரேனும் கேட்கக் கூடும் என்றுதான் நினைத்தேன். நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும்- நேற்றிரவே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு சந்தானராமன் கேட்டுவிட்டார். அவர் மட்டுமில்லை. பத்தாயிரம் ரூபாய்க்கு இரண்டு பேர்கள், ஏழாயிரத்துக்கு ஒருவர், ஐந்தாயிரத்துக்கு இருவர், மூன்றாயிரம் என்கிற அளவில் இரண்டு மூன்று பேர் என்று நிறையப் பேர் கேட்டிருக்கிறார்கள்.

அத்தனை பேரும் ஒத்துக் கொள்ளும்பட்சத்தில் எப்படியும் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் தேறிவிடும். பதிப்பாளர் கரிகாலனிடம் சொன்னேன். அவர் நம்பவேயில்லை. தமிழ்ச் சூழலில் இது சாத்தியமே இல்லை என்றார். அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நம் கண் முன்னால்தானே அத்தனையும் நடக்கிறது? எதிர்பாராததெல்லாம் சாத்தியமாகிறது? ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய் கணக்குக்கே வந்து சேர்ந்துவிட்டது. சேர்ந்த தொகையை வைத்துக் கொண்டு நான்கு மாணவிகளை அழைத்து ஆளுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொடுப்பதில் அர்த்தமில்லை. சரியான முறையில் பரிசீலித்து யாருக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தொகையைப் பிரித்துக் கொடுக்கலாம். அது ஒரு மாணவியாக இருந்தாலும் சரி. ஐந்து மாணவிகளாக இருந்தாலும் சரி. ஐந்தாயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி; நாற்பதாயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி.

அநேகமாக ஜூன் 4 அல்லது 5 ஆம் தேதிவாக்கில் சென்னையில் ஒரு சிறு நிகழ்வை ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். இடம், தேதி மற்றும் நேரம் முடிவான பிறகு எழுதுகிறேன். வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள். நிகழ்வில் புத்தகத்தையும் அதில் எழுதியிருப்பதையும் பேசுவதைவிடவும் அந்த எழுத்தின் வழியாக நான்கு பேருக்கு சிறு விளக்கினைக் கையில் கொடுக்கிறோம் என்பதில்தான் சந்தோஷமே இருக்கிறது. அதைப் பேசினாலே போதும். புத்தகத்தைப் பற்றி பேச விரும்புகிறவர்கள் எப்படியும் பேசிவிடுவார்கள். அதற்குத்தான் நம்மிடம் ஏகப்பட்ட ஊடகங்கள் இருக்கின்றனவே.

நேற்று மதியம் இரண்டு மணிவாக்கில் ஏலம் குறித்தான அறிவிப்பை எழுதியிருந்தேன். இரவு பத்து மணிக்கெல்லாம் இந்தக் குறிப்பை தட்டச்சு செய்யத் தொடங்கிவிட்டேன். லட்ச ரூபாய் கூட அரை நாளில் சேர்ந்துவிடுகிறது. ஆச்சரியம் என்பதைவிடவும் நெகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. இனி பணம் பெரிய விஷயமாகவே இருக்காது என்று தோன்றுகிறது. கேட்டால் கொடுத்துவிடுகிறார்கள். இத்தனை பேர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் ஆகப்பெரிய பலம். இந்த பலம் போதாதா? எத்தனை பெரிய சுமையையும் தூக்கி தலை மீது வைத்துக் கொண்டு களத்தில் இறங்கலாம். எழுத்து எதைக் கொடுக்கிறது என்றால் இதைத்தான் கொடுக்கிறது. எழுத்துக்கு நாம் நேர்மையாக இருந்தால் அது நமக்கு அதைவிடவும் நேர்மையாக இருக்கிறது.

ஏலம் கோரியவர்கள்:
திரு. சந்தானராமன்
ரூ. 50000
திரு. அருண்
ரூ 10001
திரு. சத்யா
ரூ 10000
திரு. அம்ஜத்
ரூ 7000
திரு. ஹரி
ரூ 6800
திரு. துரை முருகன்
ரூ 5555
அகிலா
ரூ 5001
திருமதி. ஸ்வேதா
ரூ 3500
திரு. வெங்கடேசன் சக்ரவர்த்தி
ரூ 3000

இவை தவிர சிலர் ஆயிரம் ரூபாய்க்கு கோரியிருக்கிறார்கள். ரஜினி ஸ்டைலில் சொன்னால் - மகிழ்ச்சி.

இனி இப்படியே இருந்துவிடலாம். 

வாழ்க்கை மிக எளிமையாக இருக்கிறது. அதை அப்பட்டமாக எழுதிக் கொண்டிருந்தால் போதும். எழுத்துக்கும் பேச்சுக்கும் பகட்டும் அரிதாரமும் அவசியமென்று தோன்றவில்லை. அப்படி எழுதுவது இலக்கியமாக இல்லாமல் போகலாம். அது பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லை. இலக்கியம், காவியம் என்பதையெல்லாம் தாண்டி மனிதத்தைப் பேசுவதை முக்கியமானதாக கருதுகிறேன். அதற்கு இருக்கக் கூடிய வலிமையையும் ஆற்றலையும் ஒவ்வொரு நாளும் அணுக்கத்திலிருந்து ரசிக்கின்ற வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அது பெரும் பாக்கியம். வேறு என்ன சொல்வது?

எப்பொழுதும் எழுத ஆரம்பிக்கும் போது மடமடவென்று எழுதிவிட முடியும். இன்றைக்கு இதற்கு மேல் என்ன எழுதுவதன்று தெரியவில்லை. சற்றே கனமாக உணர முடிகிறது. 

பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. பெருமையாகவும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பாதை தெளிவாக இருக்கிறது. சலனப்படாமல் நடந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான். செல்ல வேண்டியது வெகு தூரம். பாதையெங்கும் அரவணைக்கவும் ஆதரிக்கவும் ஆர்ப்பரிக்கவும் உற்சாகமூட்டவும் ஆயிரமாயிரம் கைகள் வந்து போய்க் கொண்டேயிருக்கின்றன. அத்தனை கைகளுக்கும் அன்பான ஸ்பரிசங்கள். 

இதுதான் எழுத்துக்கான அர்த்தம். வாழ்கிற வாழ்க்கைக்கான அர்த்தம். இப்பொழுது இதை உரக்கச் சொல்ல முடியும். அர்த்தம் கொடுக்கும் அத்தனை பேருக்கும் நன்றி! இந்த மூன்றெழுத்துச் சொல் மிகச் சிறியதுதான். ஆனால் அதைத் தவிர வேறு எந்தச் சொல்லும் என்னிடமில்லை.

3 எதிர் சப்தங்கள்:

Unknown said...

நம்பிக்கை

சேக்காளி said...

//இதுதான் எழுத்துக்கான அர்த்தம்//
எழுதுவதால் என்ன பலன் என நீங்கள் ஒரு பதிவிட்டிருந்ததாய் நினைவு.
அதற்கான பதில் இப்போது உங்களிடமிருந்தே வந்திருக்கிறது.

Ravi said...

Excellent news!