May 17, 2016

கனவு

எட்டாவது படிக்கும் போது பரப்புரைக்குச் சென்றிருந்தேன். தேர்தல் பரப்புரைதான். பள்ளி முடிந்தவுடன் யாராவது அழைத்துச் செல்வார்கள். வீட்டில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாமல் வண்ணச் சட்டையை பைக்குள் ஒளித்து வைத்திருப்பேன். என்னை யாருக்கும் அடையாளம் தெரியாத பகுதிகளாக அழைத்துச் செல்வார்கள். வழக்கமாக சீருடையைக் கழற்றி உள்ளே வைத்துவிட்டு வண்ணச் சட்டையை அணிந்து கொண்டு ஒலி வாங்கியைப் பிடித்து ‘அன்பார்ந்த தாய்மார்களே, பெரியோர்களே, வாக்காளப் பெருங்குடி மக்களே’ என்று ஆரம்பித்தால் எட்டு மணிக்குள்ளாக முடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். வழக்கம் போல வீட்டுக்கு வந்து எதுவும் தெரியாதது போல படுத்துக் கொள்வேன்.

அந்தச் சமயத்தில் நிறையக் கட்சிப் பிரமுகர்கள் அறிமுகமாகியிருந்தார்கள். எப்படியும் பனிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராகிவிடலாம் என்று பெருங்கனவில் இருந்தேன். அப்பொழுது அமைச்சர்களாக இருந்தவர்களையெல்லாம் ஏதாவது ஒரு நடிகையோடு இணைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். நம் திறமைக்கும் அழகுக்கும் இரண்டு நடிகைகளையாவது செட்டப் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். நாம் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைக்கும் அல்லவா?

ஒரு நாள் வேட்டைகாரன்கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். அங்கே என்னைப் பார்த்த சதிகாரப்பாவி எவனோ அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டான். ‘உங்க பையனைப் பார்த்தேன்...அருமையா பேசறான்’ என்று சொல்லியிருக்கிறார். வீட்டில் அனுமதி பெறாமல் பரப்புரைக்குப் போனது அந்த மனிதருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பற்ற வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். வீட்டுக்கு வந்தேன். எதுவுமே தெரியாதது போல அப்பா அமர்ந்திருந்தார். அம்மாவின் முகத்தில் கடுகு வெடித்துக் கொண்டிருந்தது. என்னவோ தவறு நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வெகு நேரம் ஆகவில்லை. 

‘எங்க போய்ட்டு வர்ற?’ என்றார் அப்பா.

‘ஸ்பெஷல் க்ளாஸ் வெச்சாங்க’ என்றேன். அப்பொழுது செல்போன் எதுவும் புழக்கத்தில் இல்லை அல்லவா? 

‘வேலுச்சாமி வாத்தியாரைக் கேட்டுட்டு வர்றேன்’ என்று கிளம்பினார். அவரும் அப்பாவும் பால்ய நண்பர்கள். பிரச்சினையை அரை மணி நேரம் தள்ளிப்போட்டுவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பா வருவதற்குள் தூங்கிவிட வேண்டும் அல்லது தூங்குவதாக நடிக்க வேண்டும் என்பதுதான் திட்டம். அம்மாவிடம் பேச முயன்றேன். முகத்தைத் திருப்பிக் கொண்டார். வெளியே சென்ற அப்பா மூன்றாவது நிமிடம் வீட்டுக்குள் வந்துவிட்டார். அதற்குள் எப்படி விசாரித்திருக்க முடியும் என்று யோசிப்பதற்குள் கையில் இருந்த பச்சை விளாறை ஒரு விசிறு விசிறினார். அது ட்ரவுசரின் மீது பெருத்த ஓசையுடன் இறங்கியது. ‘அடங்கொக்கமக்கா...கண்டுபிடிச்சுட்டாங்கய்யா’ என்று சுதாரிப்பதற்குள் நான்கைந்து விளாசுகளில் ரத்தம் துளிர்க்கத் தொடங்கியிருந்தது. பின்பக்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கையை வைத்தால் அடி கைகளின் மீது இறங்கியது.

‘முளைச்சு மூணு இலை விடல...அதுக்குள்ள கோவணாண்டிக கூடச் சேர்ந்து அரசியலா?’ என்று விடாமல் இணுங்கிக் கொண்டேயிருந்தார். அம்மா எதுவுமே தெரியாதது போல ஏழெட்டு அடிகளுக்குப் பிறகு இடையில் புகுந்து ‘இனிமே போகலைன்னு சொல்லித் தொலைடா’ என்றார். ‘சொன்னீன்னா அடிக்க மாட்டாங்க’ என்று தம் கட்டிப் பேசினார். ‘இனிமே போகலை’ என்றேன். எனக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இரண்டு பேருமாகச் சேர்ந்து சதித் திட்டம் வகுத்திருக்கிறார்கள் என்று பிறகுதான் தெரிந்தது. அமைச்சர், பாதுகாவலர்கள், சைரன் வைத்த கார், குறிப்பாக இரண்டு நடிகை- அத்தனை கனவுகளுக்கும் ஏழெட்டு விளாசுகளில் சோலியை முடித்துவிட்டார்கள்.

அதன்பிறகு அரசியல் பரப்புரைக்கும் எனக்கும் காத தூரம் ஆகிவிட்டது. ஆசையாகத்தான் இருக்கும். அப்பா திட்டுவார் என்று கலந்து கொண்டதேயில்லை. இது நடந்து வெகு காலத்திற்குப் பிறகு பேரூராட்சித் தேர்தல் ஒரு வாய்ப்பை உருவாக்கியது. தேர்தலில் நண்பர் களமிறங்கினார். எட்டாம் வகுப்பளவிற்கு பொடியனாக இல்லாமல் வளர்ந்து வயசுக்கு வந்திருந்தேன். அரும்பு மீசை முளைத்திருந்தாலும் வேலைக்கு போகிற பருவம் வந்திருக்கவில்லை. எங்கள் பேரூராட்சியின் பெயர் லக்கம்பட்டி. ‘எங்கள் ஆள் வென்றால் லக்கம்பட்டியை குட்டி சிங்கப்பூர் ஆக்குவார்’ என்று ஆட்டோவில் ஏறி மைக் பிடித்தேன். வீதி வீதியாக வண்டி சுற்றியது. தொண்டை காய்ந்தது. அம்மாவும் அப்பாவும் அலுவலகம் முடித்து வருவதற்குள் வீட்டுக்கு வந்துவிடுவேன். சில நாட்கள் கழிந்திருந்தது. வழக்கம் போல அலைந்து திரிந்து மாலையில் வீடு வந்து சேர்ந்தேன்.

நுழைந்து நுழையாமலும் அப்பா, ‘நாம இந்த ஊர்ல இருக்கணுமா? இல்ல எவனாச்சும் வந்து நம்மைக் குடி கிளப்பணுமா?’ என்றார். எதனால் சீக்கிரமாக வீட்டுக்கு வந்திருக்கிறார் என்று புரியவில்லை. அதே காரணம்தான் - கடந்த முறையைப் போலவே இந்த முறையும் யாரோ ஒரு பிரகஸ்பதி போட்டுக் கொடுத்திருக்கிறார். அதனால் சீக்கிரமாகக் கிளம்பி வந்து வீட்டில் அமர்ந்துவிட்டார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாக நின்றிருந்தேன். அப்பாவுக்கு பயம். பிரச்சாரம் செய்யப் போனால் எதிராளிகளைச் சம்பாதித்துக் கொள்வான் என்று நினைத்தார். அப்பொழுதும் அம்மா ‘நாங்க ரெண்டு பேரும் கவர்ண்மெண்ட் வேலை...எங்களுக்கு பிரச்சினை வரும்ங்கிறது இரண்டாம்பட்சம்...ஆனா நமக்கு இதெல்லாம் தேவையா?’ என்றார். அரசியல், கட்சி என்பதெல்லாம் அயோக்கியர்களுக்கான புகலிடம் என்பதை ஆழமாக நம்புகிற நடுத்தரவர்க்க மனநிலை. அரசியல்வாதிகள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று தீர்க்கமாக நம்பினார்கள். அதன் பிறகு பிரச்சாரம் செய்வதை விட்டுவிட்டுக் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றேன். 

இப்பொழுது மூன்றாவது முறை. தடுக்கிற அளவுக்கு அவர்களுக்கு வலு இல்லை. ஆனாலும் அப்பா அலற விட்டுவிட்டார். இன்னொரு நாளில் அதை விரிவாகச் சொல்கிறேன். அம்மாவும் அதே பழைய ஸ்டைலில் ‘இதெல்லாம் நமக்கு எதுக்கு?’ என்றுதான் பேசினார். அவர்களை சமாளிக்கிற வித்தையைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். எதையாவது சொல்லி சமாளித்து ஓர் ஊர்வலம், பரப்புரை, பரப்புரையின் கடைசி தினத்தில் மேடைப் பேச்சு என்று கடந்த காலங்களை விட அதிகமாகச் செய்திருக்கிறேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விரிவாகத் தெரியாது. ஆனால் ஊரில் இருக்கிற மற்றவர்களுக்குத் தெரியும். பெற்றவர்களைப் பொறுத்த வரைக்கும் நான் அதே பொடியன் தான். அவர்கள் அதே நடுத்தர வர்க்கத்தினர்தான். ‘படித்து வேலைக்குச் சென்று சம்பாதித்து எந்தச் சலசலப்புமில்லாமல் குடும்பத்தை நடத்தி வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும்’ என்கிறார்கள். அவர்கள் நினைப்பதைப் போலவே அவர்களுக்காக நடித்துவிடலாம்.

தேர்தல் முடிந்துவிட்டது. ஆளுங்கட்சி சார்பில் தேர்தலில் பணத்தைக் கொட்டியிருக்கிறார்கள். சராசரியாக ஒரு வாக்குக்கு இருநூற்றைம்பது ரூபாய். அந்தப் பணத்தின் விளைவு பற்றித் தெரியவில்லை. எண்பத்து மூன்று சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கிறது. விழுந்த வாக்குகள் மாற்றத்திற்கான வாக்குகளா? பணத்துக்கான வாக்குகளா என்ற முடிவு நாளை மறுநாள் தெரியட்டும். இப்போதைக்கு இந்தக் களம் புரிந்திருக்கிறது. முழுமையாகப் புரிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. பெருங்கடலின் சிறு துளி.

நிறைய உள்ளூர் இளைஞர்களைச் சந்திக்க முடிந்தது. பொங்கலுக்கும் தீபாவளிக்கும் மாரியம்மன் பண்டிகைக்கும் ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்புகிற வழக்கத்திலிருந்து சற்றே மாறியிருக்கிறோம். ஊரைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறோம். அவரவர் கனவுகளின் ஒரு துளியைப் பரிமாறிக் கொண்டோம். புரட்சிகரக் கனவுகள் என்றெல்லாம் எதுவுமில்லை. அடிப்படையான புரிதல்கள் மட்டும்தான். ‘நம்மால் எதையாவது செய்ய முடியும்’ என்கிற நம்பிக்கைதான். இந்த நம்பிக்கையும் கனவுகளும் இந்தத் தேசத்துக்கானவை. எதிர்காலத்திற்குரியவை. 

அதே கனவுகளுடன் 19 ஆம் தேதி வரை காத்திருக்கிறோம்!

8 எதிர் சப்தங்கள்:

Unknown said...

அப்படி என்ன அலற விட்டுவிட்டார் அப்பா ? சொல்லுங்களேன்

சேக்காளி said...

//அமைச்சராகிவிடலாம் என்று பெருங்கனவில் இருந்தேன்//
கனவை நிசமாக்கிறணும் அப்பு. அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கு வேப்புமனு தாக்கல் செய்யுறோம்.போட்டி போடுறோம் . செயிக்கிறோம். அமெரிக்க சனாதிபதி ஆவுறோம்.

Muralidharan said...

//எண்பத்து மூன்று சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கிறது. //
பதிவான வாக்கு சதவீதம் எழுபத்தி மூன்று., திருத்திக்கொள்ளவும்.

காத்தவராயன் said...

நீங்க எட்டாவது படிக்கும் போது [94/95] எந்த தேர்தல் நடந்தது? :)

Vaa.Manikandan said...

முரளிதரன்,

எண்பத்து மூன்று சதவீதம் என்பது கோபியில் பதிவான வாக்குகளின் சதவீதம்.

காத்தவராயன்,

எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு- கோபி பாராளுமன்றத் தேர்தலில் வி.பி.சண்முகசுந்தரம் வென்று எம்.பி ஆனார்.

Vinoth Subramanian said...

what did your father say now?

”தளிர் சுரேஷ்” said...

நம்பிக்கை ஜெயிக்கட்டும்!

ramass said...

Nambikkai thotruvittathe. Nallavargalukku arasialil vetri undaa? Illai enbathu enn nilai.