ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் பேசியதை கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. கேட்கும் வாய்ப்பு மட்டும்தான். புரிந்து கொள்ளவெல்லாம் இல்லை. புரியாத மொழியில் பேசுகிற எல்லோருடைய பேச்சையும் ஆர்வத்துடன் கவனிக்க முடிவதில்லை. ஆனால் புரியாவிட்டாலும் கூட வெகு சிலரைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அடல்பிஹாரி வாஜ்பாயின் பேச்சும் உடல்மொழியும் ஈர்ப்பு மிகுந்தவை. அதன் பிறகு நரேந்திர மோடி. இப்பொழுது கன்ஹையா குமார். முரண்பட்ட வரிசை முறைதான் என்றாலும் எனக்குத் தெரிந்த வரிசை இதுதான்.
குமார் இயல்பிலேயே மிகச் சிறந்த பேச்சாளர் என்று அவரைப் பற்றிய குறிப்புகளில் இருக்கின்றன. பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தலில் அவரது பேச்சுதான் வெற்றிக்கான முக்கியக் காரணி என்று குறிப்பிடுகிறார்கள். அதனால் அவருடைய பேச்சு கூட அவ்வளவு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் இரண்டு நாட்களுக்கு சிறையில் உட்கார வைத்தால் யாராக இருந்தாலும் நடுக்கம் வந்துவிடும். படுத்த படுக்கையாகக் கிடக்கும் அப்பா, கிராமத்தின் கடைநிலைப் பணியாளாரான அம்மா, இன்னமும் முடிக்காத படிப்பு என்பனவையெல்லாம் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் போது வலிமை வாய்ந்த மத்திய அரசாங்கத்தை எதிர்த்துச் சிறைக்குச் சென்று வந்த எந்தச் சலனமுமில்லாமல் நக்கலும் நையாண்டியுமாக தொடர்ந்து உற்சாகமாகப் பேசுவது லேசுப்பட்ட காரியமில்லை. குமாருடைய குடும்பப் பின்னணியோடு சேர்த்து அவரது இந்தப் பேச்சைப் பார்த்த போது வெகு ஆச்சரியமாக இருந்தது. ‘தைரியமான இளைஞன்’.இவற்றையெல்லாம் அவருடைய தலைமைப் பண்புகள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும்.
தலைமைப்பண்புகள் என்றுதான் சொல்கிறேனே தவிர தலைவர் என்று சொல்லவில்லை. Leadership Qualities என்பதற்கும் Leader என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுதே ‘தலைவர்’ என்று முத்திரை குத்திவிட்டார்கள். எல்லாவற்றிலும் அவசரப்படுகிறோம் என்று நினைக்கிறேன். கன்ஹையா குமாருக்கு இருபத்தெட்டு வயதுதான் ஆகிறது. இன்னமும் வெகு காலமிருக்கிறது. அதற்குள் ஏன் இவ்வளவு பெரிய கொண்டாட்டம் என்று புரியவில்லை.
போராட்டக் குணமும், கலகமும்தான் தலைவராக உருவெடுக்கப் போகிறவரின் ஆரம்பகட்ட குணங்கள். அவை குமாரிடம் இருக்கின்றன. ஆனால் அவை மட்டுமே போதுமானவையில்லை. கொதிக்கிற ரத்தமும் உணர்ச்சியும் பக்குவப்பட்டு நேர்மறையான சிந்தனைகளும், தாம் வாழ்கிற சூழலிலிருந்து தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் கண்டெடுக்கிறவராக மாற வேண்டும். பிரச்சினைகளை மட்டும் பிரதானப்படுத்துவதிலிருந்து மேலேறி தீர்வுகளை முன் வைக்கும் போது தலைவராக்கினால் போதுமானது. இல்லையா?
இன்றைய சமூக வலைத்தள யுகத்தில் திடீரென்று புகழடைந்துவிட முடிகிறது. கன்ஹையா குமாரின் பின்னால் நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சி, டெல்லியின் ஆங்கில ஊடகங்கள், இடதுசாரி அறிவுஜீவிகள், பத்திரிக்கையாளர்கள், ஆளுங்கட்சியின் எதிர்ப்பாளர்கள் எனப் பலருக்கும் கன்ஹையா குமார் ஒரு பற்றுக் கோலாகியிருக்கிறார். ஆளாளுக்கு அவர் மீது வெளிச்சத்தை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
உசுப்பேற்றும் சமூக வலைத்தளங்களையும் ஊடகங்களையும் நம்ப வேண்டியதில்லை. ஒரு வாரம் கொண்டாடுவார்கள். அதன் பிறகு சுத்தமாக மறந்துவிடுவார்கள். இவர்களுக்குத் தேவை ஒரு கச்சாப் பொருள். ஒருவன் கிடைத்தால் தூக்கி உயரத்தில் நிறுத்தி அடுத்த சில நாட்களில் அப்படியே விட்டுவிட்டு திடீரென்று இன்னொருத்தன் பின்னால் சென்றுவிடுவார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பாக குஜராத்தைச் சார்ந்த ஹர்தீப் பட்டேல் என்ற பட்டேல் இனத்தைச் சார்ந்தவரைப் பற்றி எழுதும் போது அடுத்த குஜராத் முதல்வர் என்று கூட எழுதினார்கள். நான்கைந்து மாதங்கள் இருக்குமா? இப்பொழுது அவரது பெயர் கூட மறந்து போய் கூகிளில் தேட வேண்டியிருக்கிறது. ஹர்தீப் பட்டேலும் கன்ஹையா குமாரும் ஒன்று எனச் சொல்லவில்லை. திடீரென்று ஒருவர் மீது டார்ச் அடித்துவிட்டு கைகழுவிவிடுகிற ஊடகக் கலாச்சாரத்தின் உதாரணமாக அவரது பெயர் சட்டென்று ஞாபகத்துக்கு வருகிறது.
அந்தந்த வயதுக்குரிய வெளிச்சமும் புகழும்தான் சரியானவை. இப்பொழுது குமார் மீது விழுவது அதீதமான வெளிச்சம். இது அவசியமில்லை.
அவர் தொடர்ந்து இயங்கட்டும். தமது கருத்துக்களை முன்வைக்கட்டும். பல தரப்பு விஷயங்களைப் பற்றியும் அவர் விவாதம் செய்யட்டும். இத்தகைய உரையாடல்களிலும் கருத்துக்களிலிருந்தும் அவரைப் பற்றியதொரு முழுமையான சித்திரம் உருவாகட்டும். அதற்கான காலத்தையும் இடத்தையும் அவர் உருவாக்கிக் கொள்ளட்டும். அவரவர் உயரத்திற்கும் திறமைக்குமுரிய இடம் கிடைத்தே தீரும்.
கன்ஹையா குமார் மீது எனக்கு ஈர்ப்பு, வெறுப்பு, பொறாமை என்றெல்லாம் எதுவுமில்லை. Its too early to judge என்று நம்புகிறேன். ஒரு நல்ல தலைவனுக்கான தேவை இருந்து கொண்டேதான் இருக்கிறது. நம் அத்தனை பேருக்குள்ளும் ‘யார் அந்தத் தலைவன்?’ என்கிற தேடல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த இடத்தை கன்ஹையா குமாரால் அடைய முடியும் என்றால் சந்தோஷம்தான். ஆனால் அதற்கு இன்னமும் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. இப்பொழுதுதான் அரும்பு விட்டிருக்கிறார். அவரிடம் ஒரு நெருப்பு இருக்கிறது. அது மெல்லச் சுடர் விடட்டும்.
எல்லாவற்றையும் விடவும் இந்திய அரசியல் மிகப்பெரிய பூதம். மிகப் பெரிய ஜாம்பவான்களை எல்லாம் சர்வசாதாரணமாகத் தொலைத்துக் கட்டியிருக்கிறது. மிகச் சாதாராண ஆட்களையும் உச்சாணியில் தூக்கி வைத்திருக்கிறது. ஒரு மனிதனின் தனிப்பட்ட குணநலன்களை எப்படி வேண்டுமானாலும் சிதைக்கும் வல்லமையுடைய இந்த மிகப்பெரிய சுழலைச் சமாளிக்கும் மனப்பக்குவத்தையும் திறமையையும் அடையும் வரைக்கும் அவர் அவரது போக்கில் நகர்ந்து கொண்டிருப்பதுதான் சரி.
நாம் எல்லாவற்றிலும் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர்கள். குமாரின் விஷயத்திலும் அதீதமான உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருகிறோம். முக்கால் மணி நேரம் பேசியதைக் கேட்டுவிட்டு ‘தலைவர் உருவாகிவிட்டார்’ என்று தலைப்புச் செய்தியில் எழுதுவதற்கு இது சரியான தருணமில்லை.
6 எதிர் சப்தங்கள்:
Interesting post!! Evanum comment poduvan vachu seyalam edhir paathirupinga pola..inum yarayum kanom...
சத்தியமான வார்த்தைகள் நண்பரே.!!!
மிகச்சரியான அலசல். சினிமாவில்தான் இவ்வளவு விரைவில் எல்லாமே சாத்தியம், அதையே நேரிலும் எதிர்பார்ப்பது அறிவீனம்.
I tell myself, hey no political posts.
But when I analyse the strategies.
1. I can say that BJP is clueless in containing Kanhaiya Kumar. They made him a big star. I don't listen to hindi speech for obvious reasons and I am not bothered (I like your list. But I add Rajnath Singh and Arvind Kejriwal). But this guy made a fiery speech directly ridiculing PM, the HM and RSS. and you can't always bring in pseudo nationalism.. sorry. Change the strategy and learn new tricks rather than the "divide and rule" learnt from the colonial age.
2. Lets accept that all the tallest leaders today are from one ideology (hope you don't want me to spell it). All have a credible past & present. India is very diverse or to say diverse to the core, will not fall in to "one ideology" trap. The leadership space opposing that ideology, not opposition leader :)-, is unfortunately still vacant except to take very few names like Mr. Kejriwal or Mr.Nithish Kumar. So it is obvious to look for someone from the opposite camp. Kanhaiya Kumar certainly is a bright hope. I wish him a democrat rather than a communist :)-
- Dev
இதுபோல் உள்ள உடகங்களினலேய்யே மக்கள் செய்திதாள்களில் இருந்து வலைப்பக்கங்கள்ளுக்கு மாறுகிறார்கள் .. ஆனால் சாமலியார்கள், இணையம் இல்லாதவர்கள் அனைத்து செய்திகளையும் புறக்கணிக்கிறார்கள்.
இதுனாலதான் என்னவோ கூகிள் சுந்தர் பிச்சை அனைவருக்கும் இலவச இனைய சேவையை தர முன்வந்தார்.
Very perfectly analyzed. Unfortunately in this fast world we want instant leaders to clean up the entire state in one day and if the expectation is not fulfilled we instantly forget or throw him out.
Post a Comment