Mar 3, 2016

புரட்சி ஓங்குக

சமூக ஊடகங்கள் பெருகிவிட்டதன் ஆகப்பெரிய விளைவு கிட்டத்தட்ட அத்தனை பேரும் செமி சேகுவேராக்களாகவும் அரைப்பாதி அம்பேத்கர்களாகவும் மாறிவிட்டதுதான். சாவர்க்கரைக் குறிப்பிடாமல் விட்டால் யாராவது சண்டைக்கு வருவார்கள். அதனால் சரிபாதி சாவர்கர்க்கர்களையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். 

‘காத்தால எந்திரிச்சவுடனே கம்யூட்டரைத் திறக்கணுமா?’ என்று ஒரு காலத்தில் வீட்டில் திட்டு வாங்கியிருக்கிறேன். இப்பொழுதெல்லாம் நானாகவே திறப்பதில்லை. பயமாக இருக்கிறது. பற்களைக் கூட துலக்காமல் கணினியைத் திறந்து வைத்தால் ஒருத்தர் தேசபக்தியை  ஊசியாகப் போட்டு உசுப்பேற்றுகிறார். சிலிர்த்துப் போய் இன்னொருத்தர் எழுதியதை வாசித்தால் அவர் இந்தியாவைத் துண்டாடுவதற்கான காரணங்களை மாத்திரைகளாக்கி அப்படியே வாய்க்குள் போட்டு குச்சியை வைத்துக் குத்திவிடுகிறார். பற்களைத் துலக்கி முடிப்பதற்குள்ளாகவே ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டுமா சொல்லக் கூடாதா என்று பெருங்குழப்பமாகிவிடுகிறது. வாயில் எச்சிலை வைத்துக் கொண்டே யாருக்கும் புரியாதபடிக்கு வந்தே மாதரம், இந்தியா ஒழிக இரண்டையும் ஒன்றாகச் சொல்லித் துப்பி திருப்தி அடைந்துவிடுகிறேன்.

எல்லோரும் இப்படியே இருப்பதில்லைதான். மடோன்னா செபாஸ்டியன் - இந்தப் பெண் பெங்களூரில் கிறைஸ்ட் கல்லூரியில்தான் படித்திருக்கிறார். அவருடைய கல்லூரி பதிவு எண், 2012 ஆம் ஆண்டு கல்லூரி விழாவில் ‘பெஸ்ட் ஸோலோ’ விருது வாங்கியது உட்பட அத்தனை தகவல்களையும் சேகரித்து வைத்திருக்கிறேன் - ச்சூ, ச்சூ.. இது வெகு தீவிரமான பதிவு என்பதால் இந்த விவரங்களை இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம். மடோன்னா செபாஸ்டியன், கோத்தகிரி சாய் பல்லவி பற்றியெல்லாம் எழுதி ஆங்காங்கே ஜாலியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இந்தச் சமூகத்தில் நல்லவனாகவும், அறிவாளியாகவும், சமூக ஆர்வலனாகவும் நடிக்க வேண்டியிருப்பதால் வேறு வழியில்லாமல் சேகுவராக்களுக்கும், அம்பேத்கர்களுக்கும், சாவர்க்கர்களுக்கும் நண்பனாக இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. 'உனது நண்பர்களைச் சொன்னால் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்று சொன்னவன் மட்டும் கையில் கிடைத்தால் கைமாதான். அவன் சொல்லிவிட்டுப் போய்விட்டான். நாம்தான் புரட்சியாளர்களோடு மாரடிக்க வேண்டியிருக்கிறது. கழுதைக்கு வாக்கப்பட்டால் உதை வாங்கித்தான் தீர வேண்டும் என்பதால் பல் துலக்குவதற்குள் குழம்பித்தான் தீர வேண்டும்.

இந்தியக் கொடியைக் கொளுத்தி, தமிழகத்தைப் பிரித்து, தனிநாடாக்கி என்று யாராவது பொங்கல் வைத்துக் கொண்டிருக்கும் போது சிரிப்பு வந்துவிடும். ஆனால் புரட்சியாளர்களிடம் சிரிக்கவா முடியும்? முகத்திலேயே குத்துவார்கள். ‘சரிப்பா? அப்படியே பிரிச்சுக் கொடுத்துடலாம்..அதுக்குப் பிறகு எந்த அடக்குமுறையும் கருத்துத் திணிப்பும் இருக்காதா?’ என்று கேட்கத்தான் தோன்றும். ‘போடா டேஷ் பக்தா’ என்று திட்டி அனுப்பி வைப்பார்கள். பொதுவெளியில் திட்டு வாங்கி பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாதல்லவா? அதனால் சத்தமேயில்லாமல் ஒரு லைக் மட்டும் போட்டுவிட்டு வந்துவிட வேண்டும். 

கார்போரேட் நிறுவனங்களில் பணிபுரியும் பொதுவுடமைவாதிகள், வீட்டில் வாய்க்கு வாய் சாதியைச் சொல்லித் திட்டும் சாதிய ஒழிப்பாளர்கள், பூணூல்வாதிகள், பெண்ணியவாதிகள், சூழலியலாளர்கள் என சகலரும் இணையத்தில் புரட்சி மோடிலேயே இருப்பதால் நாமும் அதே மோடிலேயே இருக்க வேண்டியிருக்கிறது. புரட்சி மோடில் இருக்கும் போது முறுக்கம் குறைந்துவிடாமல் இருப்பது அவசியம் என்பதால் மிளகாயைக் கடித்த மாதிரி கண்களைச் சிவப்பாக்கி மூக்கை விடைப்பாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்காக கம்யூனிஸத்திலிருந்து கன்பூசியஸ் வரைக்கும், கருணாநிதியிலிருந்து கூடங்குளம் வரைக்கும், மோடியிலிருந்து தமிழ்நாடு முஸ்லீம் லீக் வரைக்கும், ஜெயலலிதாவிலிருந்து காப்ரியோ வரைக்கும் எல்லாவற்றிலும் ஒரு ஸ்பூன் எப்பொழுது கைவசம் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. எப்போது எந்தப் பிரச்சினை சூடு பிடிக்கிறதோ அப்போது அந்தந்த சரக்கை அரை ஸ்பூனோ, கால் ஸ்பூனோ போட்டு வார்த்தைகளைக் கொதிக்க வைத்து எதிரில் வருபவன் முகத்தில் விசிறியடிக்கிற வித்தையைக் கண்டுபிடிக்க படாதபாடு பட வேண்டியிருக்கிறது.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ‘இது அடுக்குமா?’ ‘அது பொறுக்குமா?’ ‘ஓ சமூகமே!’ என்று காரஞ்சாரமாக எழுதி நான்கு பேரை நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பதிலேயே மொத்த கவனத்தையும் செலுத்துகிற சமயத்தில்தான் கவிதை எழுதுகிறேன் என்று திணறடிக்கும் கவிஞர்கள், கருத்துச் சொல்கிறேன் என்று தினமும் ஒரு பதிவு எழுதும் வலைப்பதிவர்கள், முக்காலே மூணு வீசம் தனது செல்பியைப் பதிவேற்றி லைக் விழுமா என்று காத்திருக்கும் முதிர் கண்ணன்/கன்னிகள், காலை வணக்கக் குழுக்கள் என ஆளாளுக்கு குறுக்கு சால் ஓட்டுகிறார்கள். சமஸ்கிருத குழு, திராவிட புரட்சி மணிகள், தமிழ் தேசியவாதிகள், சிவப்புச் சட்டைக் குழுக்கள் என்றெல்லாம் தீவிரமான 9 டூ 5 சண்டைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க அஜீத், விஜய் ரசிகர்கள் சண்டை மாதிரியான பெரும்புரட்சிகள் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கும். கட்சி அரசியலையும் கம்யூனிஸ சித்தாந்தத்தையும் பேசிக் கொண்டிருக்கும் நம்மைப் போன்ற புரட்சியாளர்கள் இடையில் புகுந்து அஜீத் பையனுக்கு ப்ளக்ஸ் கட்டுகிற உருப்படாத சமூகத்தையும், விஜய் மகனைக் கொண்டாடுகிற தறிகெட்டவர்களையும் ஓங்கி ஒரு குத்துவிட்டு நம் போர்க்குணத்தை சமூகத்தில் நிரூபிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது. 

இருபத்து நான்கு மணி நேரமும் புரட்சியாளர்களாகவே தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் மாபெரும் சமூகப் புரட்சியை சமூக இணையதளங்கள் உருவாக்கியிருக்கின்றன. லைக் விழுமா, கமெண்ட் வருமா என்று எதிர்பார்க்க வைக்கிற mass attention seeking என்னும் மிகப்பெரிய சமூக நோய் இது. இதிலிருந்து யாருமே தப்பிக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. தம்முடைய இயல்பான குணத்திலிருந்து முற்றிலும் வேறான ஆளுமையை வெர்ச்சுவல் உலகம் எனப்படும் இணையவெளியில் பிரஸ்தாபிக்கப் போராடுகிற மனநிலை ஒவ்வொருவருக்கும் வந்து ஒட்டிக் கொள்கிறது. நடிகைகளின் தொப்புள்களைத் தேடிக் கொண்டே ‘எனக்கு அத்தனை பெண்களும் அம்மா மாதிரி’ என்று விரல் கூசாமல் எழுதுகிற சூழல் இது. நானும் இப்படித்தான். அடுத்தவனும் அப்படித்தான்.

பாருங்கள்- ஒழுங்காக எழுதிக் கொண்டிருந்துவிட்டு முந்தைய பத்தியில் புரட்சித் தத்துவம் பேசியிருக்கிறேன். நம்மையுமறியாமல் இப்படி மாறிவிடுவோம் போலிருக்கிறது.

ஒவ்வொரு புரட்சிக்கும் ஒன்றேகால் நாள்தான் ஆயுள் என்பதுதான் பெரும்பலம். அந்த ஒன்றேகால் நாளில் நம்மால் எவ்வளவு கத்த முடியுமோ கத்திவிட்டு அடுத்த புரட்சியைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாடி, நரம்பு, ரத்தம், சதை என எல்லாவற்றிலும் புரட்சிவெறி ஏறிக் கிடக்கும் நம்மைப் போன்ற ஆயிரக்கணக்கான சக புரட்சியாளர்களையும் கலகவாதிகளையும் சமாளித்து, மாலை ஆறேழு மணி வரைக்கும் இணையத்தில் களமாடிவிட்டு வீட்டுக்குச் சென்றால் ‘நாம் போட்ட ஸ்டேட்டஸூக்கு லைக் வந்திருக்குமா என்றும் கமெண்ட் வந்திருக்குமா’ என்றும் கை அரிக்கும் பாருங்கள்- அங்கே ஜெயிக்கிறான் மார்க் ஜூகர்பெர்க்கும், ட்விட்டர்காரனும், கூகிள்காரனும்.

புரட்சி ஓங்குக!

9 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

something different post..thank you

Kavipriya said...

Your 'the best' post in recent times, Enjoyed reading every bit of it..

Anonymous said...

LMAO..... :)

நெய்தல் மதி said...

நகைச்சுவையில் பின்னுகிறீர்கள். உண்மையை இவ்வளவு அப்பட்டமாகவா போட்டுடைப்பது? புரட்சி ஓங்குக!

சேக்காளி said...

செமி,அரைப்பாதி,சரிபாதி
வெளங்கிரும்.

Unknown said...

இப்போது புரட்சி என்கிற வாசகத்துக்கு உண்மையில் அர்த்தம் இல்லை புரட்சி தலைவி,தளபதி,புயல்,நாயகன்,தலைவர்,யப்பா முடியல.
உண்மயில் புரட்சி செய்த யாரும் தான் புரட்சி தலைவர் என சொல்லிக்கொண்ட்தில்லை.

செல்வா said...

ஆமாங்க. யாரு எது சொன்னாலும் அது சரினே தோணுது. அதுக்கு ஆதரவு கொடுத்து கருத்து பதிவு செஞ்சிரனுந்தான் தோணுது. இப்ப பாருங்களேன் . நீங்க சொல்றதும் சரின்னுதான் தோணுது. .

RG said...

Manikandan sir,

Well said.. கலகிட்டிங்க போங்க.. இப்பவே பெங்களூர் வந்து கைகொடுக்கணும் போல இருக்கு. After long time, I read this article repeatedly

Unknown said...

"அங்கே ஜெயிக்கிறான் மார்க் ஜூகர்பெர்க்கும், ட்விட்டர்காரனும், கூகிள்காரனும்." this is the point.