Mar 10, 2016

கதவைத் திற!

ஐடி துறையில் வேலைக்குச் சேர்ந்திருக்கும் புதுப் பையன்களில் பலரிடமும் ஒரு குற்றச்சாட்டு இருக்கும். ‘எல்லா வேலையும் என்கிட்டவே தள்ளி விட்டுடுறாங்க’ என்பார்கள். இந்தத் துறைதான் என்றில்லை. எல்லா குட்டைகளிலும் இந்தப் பிரச்சினை உண்டு. மேனேஜரிடம் விசாரித்தால் ‘அவன்கிட்ட கொடுத்தால் வேலையே ஆகாது...ஆனா இவன் அப்படியில்லை...சிரமப்பட்டாவது முடிச்சுக் கொடுத்துடுவான்’ என்பார். அப்படியென்றால் பிரச்சினை யாரிடமிருக்கிறது? இந்தச் சிக்கலுக்கு ஏதாவதொரு ஏதாவது ஒரு பெயர் வைக்க வேண்டுமானால் Image Trap என்பது சரியாக இருக்கும். 

பெங்களூரில் ஒரு ஐடி பையன் புலம்பினான். வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் கூட முழுமையாக பூர்த்தியடையவில்லை. வேலையை விட்டுவிட விரும்புவதாகச் சொன்னான். அடுத்ததாக என்ன செய்யப் போவதாக உத்தேசம் என்று கேட்டதற்கு தெளிவான பதில் இல்லை. ஆற அமர விசாரித்த போது மேற்சொன்ன பிரச்சினைதான். உடனடியாகவெல்லாம் இதற்கு தீர்வு சொல்ல முடியவில்லை. அது சாத்தியமுமில்லை. இதெல்லாம் முட்டையில் படைத்தது. கட்டைக்குப் போகிற வரைக்கும் இந்த attitude ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். மெதுவாகத்தான் மாற்ற முடியும்.

Image trap என்பது தனக்கென ஒரு பிம்பத்தை உருவாக்கி அதில் சிக்கிக் கொள்வது. எம்.ஜி.ஆர் தன்னை எல்லாக் காலத்திலும் நல்லவனாகவே காட்டிக் கொண்டிருந்தது போல. ரஜினி எழுபதை நெருங்கினாலும் சூப்பர்மேனாகவே மாட்டிக் கொண்டிருப்பது போல. இப்படி அவரவர் தகுதிக்கும் உயரத்துக்குமேற்ப ஒரு பிம்பத்தில் சிக்கிக் கொண்டிருப்போம். வேலையிலும் அப்படித்தான்- மேலே இருக்கிறவன் சொல்லிவிட்டானே என்று எவ்வளவு சிரமமாக இருந்தாலும் ‘சரி’ சொல்வோம். அவர் தன்னைத் தவறாக நினைத்துவிடக் கூடாது என்றும் தான் ஒரு பொறுப்பான பணியாளர் என்ற பெயரிலிருந்து வழுவி விடக் கூடாது என்றும் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு தனது அத்தனை வலிகளையும் மறைத்துக் கொண்டால் இப்படித்தான் கொண்டு போய் நிறுத்தும். 

வேலையில் மட்டுமா இந்தப் பிரச்சினை? வீடு, வெளியிடங்கள், சமீபமாக சமூக வலைத்தளங்கள் என எல்லாவற்றிலும் தனக்கான ஒரு ‘இமேஜை’ உருவாக்கி அது சிதைந்துவிடாமல் தடுப்பதற்கு இல்லாததும் பொல்லாததுமாகச் செய்து கொண்டு அடிக்கடி பில்ட்-அப் செய்து நம்மையுமறியாமல் எந்நேரமும் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு- இருப்பதிலேயே கொடுமையான சிறை ‘இமேஜ்’தான். அடுத்தவர்களின் பார்வைகளுக்காகத்தான் நாம் வாழ்கிறோமா என்ன? அடுத்தவர்களுக்குத் தெரியாது என்கிற நினைப்பில் ஏதாவது தில்லாலங்கடியைச் செய்து மாட்டிக் கொண்டால் ‘வேற யாராச்சும் செஞ்சிருந்தா விட்டிருப்பேன்..ஆனா நீ இதைச் செய்வேன்னு எதிர்பார்க்கலயே’ என்று பொடனியிலேயே சாத்துவார்கள். அதுதான் சுள்ளென்று குத்தும். ‘உன்னை யாருய்யா என்னைப் பத்தி நல்லபடியா நினைக்கச் சொன்னது?’ என்று கேட்கவும் முடியாது. ‘இப்படி பேரைக் கெடுத்துட்டோமே’ நொந்து சாக வேண்டியதுதான்.

இந்தச் சமூகம் எல்லாவற்றிலும் ஒரு வரையறை வைத்திருக்கிறது. ஒன்றாம் வகுப்பில் படிக்கிற பையன் இப்படித்தான் தலை வார வேண்டும் என்பதில் ஆரம்பித்து அவன் கடைசி வரைக்கும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்கிற வரையறைகள். இந்த வரையறைகள் பால், இனம், மொழி, வர்க்கம் என்ற பாகுபாடுகளுக்கு ஏற்ப எல்லோருக்கும் உண்டு. ஏற்கனவே சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற இந்த வரையறைகளுக்குள் தம்மைப் பொருத்திக் கொண்டு மற்றவர்களிடம் தன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்வது ஒரு ரகம். வரையறைகளைத் தாண்டிய சில செயல்களைச் செய்து பார்க்க உள்ளுக்குள் ஆசையிருந்தாலும் கூட ‘நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்க?’ என்ற பயத்தினாலேயே அடக்கிக் கொள்வார்கள் அல்லது திருட்டுத்தனமாக மட்டும் செய்து பார்ப்பார்கள். இன்னொரு ரகம் நேர் எதிரானவர்கள். வரையறைகள் எல்லாவற்றையும் உடைத்து ‘நானும் ரவுடிதான்’ என்று காட்டிக் கொள்கிற வகையறா. உள்ளுக்குள் நடுங்கினாலும் கூட வெளியில் கெத்து காட்டுவார்கள். இந்த இரண்டுமே Image Trap தான். தனக்கான ஒரு பிம்பத்தை மற்றவர்களிடம் காட்டுவதற்காக தனக்கு ஒவ்வாததையும் விருப்பமில்லாதவற்றையும் செய்து கொண்டிருப்பதுதான் நம்முடைய பல பிரச்சினைகளுக்கும் மன அழுத்தங்களுக்குமான அடிப்படையான காரணம்.

வரையறைகள் தேவைதான். அவை சுய வரையறைகளாக இருந்தால் போதும். எல்லாவற்றிலும் அடுத்தவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. என்னைப் போன்ற சொட்டைத்தலையனை விட்டுவிடலாம். நிறைய முடி இருக்கிறவன் கூட எண்ணெய் பூசி படிய வாரிக் கொண்டு வந்து நிற்கும் போது சிரிப்பாக இருக்கும். சாதிக் ஒரு காலத்தில் தலையை தாறுமாறாகக் கலைத்துவிட்டுத் திரிவான். அதுதான் அவனுக்குப் பிடிக்கும். திருமணத்திற்குப் பிறகு ஒரு முடி கலைவதில்லை. ‘ஏண்டா இப்படி?’ என்றால் தலையைக் கலைத்துவிட்டால் மாமனார் வீட்டில் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்கிறான். எனக்கு மட்டும் முடி இருந்திருந்தால் வேறு மாதிரி ஆடியிருப்பேன். ஆனால் ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்து வைத்திருக்கிறான்.

ஒரு காரியத்தைச் செய்தால் ‘அவன் எப்படி நினைத்துக் கொள்வான்?’  ‘இவன் தவறாகப் பார்ப்பான்’ என எல்லாவற்றையும் அடுத்தவன் பார்வையில் இருந்து மட்டுமே யோசிப்பது குரூரம். ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அறக்கட்டளை ஆரம்பித்த பிறகு ‘சைட் அடித்தேன்’ என்ற வரியை எழுத முடிவதில்லை. ‘நீங்க இப்படி எழுதலாமா?’ என்று யாராவது வந்து திருநீறு பூசிவிடுகிறார்கள். என்ன பதிலைச் சொல்வது என்றே தெரியாமல் ‘அடுத்த தடவை சரி செஞ்சுக்கிறேன்’ என்று சொல்லிச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அடுத்த முறை காஜல் அகர்வால் என்று தட்டச்சு செய்துவிட்டு திரும்ப அழித்துவிடுகிறேன். இல்லையென்றால் அதற்கும் யாராவது தண்ணீர் தெளித்துவிடுவார்கள். அடுத்தவர்களுக்கு உதவுவதற்கும் சாலையில் போகிற பெண்களைப் பார்க்கக் கூடாது என்பதற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? விட்டால் பெங்களூரின் எலெக்ட்ரானிக் சிட்டியில் இடம் பார்த்து ஆசிரமம் அமைத்துக் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது. அப்படியே அமைத்துக் கொடுத்தாலும் நித்யானந்தா மாதிரிதான் இருப்பேன் என்று புரிய வைத்தே தீர வேண்டும். 

‘உனக்கு பர்சனெல்ன்னு ஒண்ணுமில்லையா’ என்று யாராவது கேட்கும் போது இதுதான் தோன்றும். இப்போதைக்கு எல்லாவற்றிலும் திறந்த புத்தகமாக இருக்க முடியாது. வயதும் வாழ்க்கை முறையும் அப்படி. ஆனால் போகப் போக எல்லாவற்றையும் வெளிப்படையாக முன் வைத்துவிட முடியும். ஐம்பது வயதில் அந்தவொரு இடத்தை அடைய முடிந்தால் அதுவொரு சுதந்திரம். சாத்தியமா என்று தெரியவில்லை ஆனால் அப்படியானதொரு இடத்தை அடையத்தான் மனம் விரும்புகிறது.

யோசித்துப் பார்த்தால் இந்த பிம்பங்கள் அவசியமற்றவை. இப்படி பிம்பத்தை உருவாக்கி அதற்குள் சிக்குவதற்காக நடித்து நடித்து எதைச் சாதிக்கப் போகிறோம்? அடுத்தவர்களுக்காக நம்முடைய ஆசைகளைக் கத்தரித்து என்ன பலனைக் காணப் போகிறோம்? இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும். என்னதான் நல்லவனாக நடித்தாலும் அந்தப் பக்கமாகப் போய் ஏதாவதொரு குறையை கிசுகிசுத்து விட்டு போகிறவர்கள்தான் திரும்பிய பக்கம் எல்லாம் இருக்கிறார்கள். யாரைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் நமக்குப் பிடித்தமான காரியங்களைச் செய்துவிட்டு நமக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு ‘இதுதான் நான்’ என்று தைரியமாகச் சொல்லிவிட்டு போகிற வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். சாமியார் மாதிரி பேசுகிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நித்யானந்தாவின் பெயரைச் சொன்னதன் விளைவு இது. கதவைத் திற!

14 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

கதவை திற!
நாற்றம் போகட்டும்.

viswa said...

சில நிதர்சனங்களை புட்டு புட்டு வைக்கிறீரகள்

Anonymous said...

கதவை திற... காஜல் வரட்டும்... :)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உண்மையான வார்த்தைகள். நல்லவன் என்பதை மெயிண்டயின் செய்ய எவ்வளவு கஷடப்படுகிறோம் என்பதைநான் ரொம்ப நல்லவன் சார் என்ற பதிவை எழுதி இருந்தேன். முடிந்தால் வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

இதுவரை நான் உங்கள் எல்லா பதிவுகளையும் வாசித்து போவதோடு சரி.. பின்னூட்டம் இட்டதில்லை.. ஆனால் இந்த பதிவு அதை செய்ய வைத்து விட்டது.. அப்படி என்ன இருக்கு என்று கேட்டு வெச்சுராதீங்க.. சொல்ல தெரியல.. கடந்த இரண்டு மூன்று நாட்களாக எனக்கு இருந்த சில புரியாத குழப்பங்களுக்கு கொஞ்சம் தெளிவு கிடைத்த மாதிரி இருக்கு.. நன்றி மணி அண்ணா.. :) :)

ADMIN said...

நீங்களா இப்படி எழுதியிருக்கீங்க..!

அக்காங்..நானுங்கேட்டுட்டேனோ..!?? ஹா..ஹா...!!!

சும்மா சொல்லக்கூடாது....அப்படியே விறுவிறுன்னு கடைசி வரி வரைக்கும் படிச்சு முடிச்சிட்டுதான் கமெண்ட்டே டைப் பன்றேன்...அந்தளவுக்கு "சரசர"ன்னு எழுதியிருக்கீங்க..!

commonman said...

நம்ம ஊரில் தான் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் ஒரு அடையாளம் வைத்திருக்கிறார்களே...

நல்லா படிக்காதவன் - கெட்டவன்
பஸ்ட் ரேங்க் வாங்குறவன் - நல்லவன்

சைட் அடிச்சா - கெட்டவன்
கடலை போடுறவன் - நல்லவன்

பட்டை (தண்ணி) அடிச்சா - கெட்டவன்
நெத்தீல பட்டை அடிச்சா - நல்லவன்

ஆனா பெரும்பாலான நேரங்களில் அப்படி இருப்பதில்லை என்பதுதான் வாழ்வின் முரண்.

Siva said...

Shall we see a place to start asiramam in Electronic city na :)

Vinoth Subramanian said...

Image trap? No one can escape from this.

Mahesh said...

விட்டால் பெங்களூரின் எலெக்ட்ரானிக் சிட்டியில் இடம் பார்த்து ஆசிரமம் அமைத்துக் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது. அப்படியே அமைத்துக் கொடுத்தாலும் நித்யானந்தா மாதிரிதான் இருப்பேன் என்று புரிய வைத்தே தீர வேண்டும்./// hahahahahahahahahaa

பாலு said...

சாரு தாண்ணே இந்த உலகில் இமேஜ் டிராப்ல மாட்டாதவரு! என்ன சொல்றீங்க?

Anonymous said...

யோகா பயின்றேன். கற்றும் கொடுக்கிறேன். எந்த பிரச்சனைக்கும் எங்கேயும் வாய் திறந்தா, யோகாவும் தியானமும் பண்ணிட்டு பேசறத பாரு என்கிறார்கள். தியானம் செய்பவர்கள், பக்கத்து வீட்டுக்காரணுடன் சண்டை போட உரிமயில்லயா? அநியாயம் செய்பவர்களை புன்னகையுடன் ஓம் ஷாந்தி என்று கடந்து போக முடியுமா? உங்கள் பதிவு உண்மையை உரக்க சொல்கிறது.

Aravind said...

இதுவரை நான் உங்கள் எல்லா பதிவுகளையும் வாசித்து போவதோடு சரி.. பின்னூட்டம் இட்டதில்லை.. ஆனால் இந்த பதிவு அதை செய்ய வைத்து விட்டது.. அப்படி என்ன இருக்கு என்று கேட்டு வெச்சுராதீங்க.. சொல்ல தெரியல.. என் வாழ்க்கையில் கொஞ்சம் தெளிவு கிடைத்த மாதிரி இருக்கு.. நன்றி மணி அண்ணா.. :) :)

Really super Anna,,,,, I have heard so many speeches,, advice's ,,,,no one is impact on me,,,,, This made me to thing very seriously...... Really Thanksssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss ...... I cannot express my words here now...........................................

Anonymous said...

‘நீங்க இப்படி எழுதலாமா?’ என்று யாராவது வந்து திருநீறு பூசிவிடுகிறார்கள்// :) :)