May 6, 2015

நம்பிக்கை- அதுதான் எல்லாம்

சில நாட்களுக்கு முன்பு கணவனும் மனைவியுமாக வந்திருந்தார்கள். கையோடு வழக்கறிஞர் அனுப்பியிருந்த நோட்டீஸ் ஒன்றையும் எடுத்து வந்திருந்தார்கள். படித்துப் பார்க்கச் சொன்னார்கள். அவர் தன்னுடைய வீட்டை விற்கும் முஸ்தீபுகளில் இருக்கிறார். அதை விற்றுவிட்டால் தனக்கு அவர் தர வேண்டிய பாக்கித் தொகை வந்து சேராது என்பதால் விற்பதற்கு அனுமதிக்க முடியாது கடன்காரர் அந்த நோட்டீஸில் சொல்லியிருந்தார். 

வந்திருந்தவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆரம்பப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட வெகு வசதியாக இருந்திருக்கிறார்கள். வீடு, வயல் என்று செளகரியமான வாழ்க்கைதான். முதலில் ஒரு லாரி வாங்கியிருக்கிறார். சில மாதங்களிலேயே இரண்டாவது லாரியும். அந்தத் தொழிலில் அவருக்கு அவ்வளவு அனுபவம் இல்லை போலிருக்கிறது. அகலக்கால் வைத்ததில் நட்டத்தின் மீது நட்டம். கடன் காரர்கள் கழுத்தை நெரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். முதலில் ஒவ்வொரு லாரியாக விற்றவர் பிறகு வயலையும், காட்டையும் விற்றிருக்கிறார். இப்படியே வீட்டைத் தவிர மொத்தச் சொத்தும் கரைந்துவிட்டது. அப்படியும் கடன் தீர்ந்தபாடில்லை. இன்னமும் கொஞ்சம் கடன் இருக்கிறது. ஒரு கடன்காரருக்கு வீட்டை கிரயம் செய்து வைக்கிறார். முதல் கடன்காரர் அமைதியாகிவிடுவார்தான். இன்னொரு கடன்காரர் இருக்கிறார். அவருக்கு இரண்டு லட்சம் தர வேண்டும். இந்த லாரிக்காரர் வீட்டையும் விற்றுவிட்டால் தனக்கு வர வேண்டிய இரண்டு லட்சம் வந்து சேராதே என்பது இரண்டாவது கடன்காரரின் கவலை. அவர் அனுப்பியிருந்த நோட்டீஸ்தான் அது.

‘அறக்கட்டளையிலிருந்து ரெண்டு லட்சம் கொடுத்தீங்கன்னா எப்படியாவது கஷ்டப்பட்டு சம்பாதித்து இதே இடத்தில் கொண்டு வந்து கொடுத்துடுறேன்....குழந்தைங்க மேல சத்தியம்’ என்றார். 

வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் மறுக்க வேண்டியதாகிவிட்டது. கடன் வாங்கியவர்களுக்கு கைகொடுப்பது என்று ஆரம்பித்தால் அறக்கட்டளையின் நோக்கம் சிதைந்துவிடும். இல்லை என்கிற பதிலால் அவருக்கும் வருத்தம்தான் ஆனால் முகத்தில் சிரிப்பை வர வைப்பதற்கு முயற்சி செய்தபடியே இருக்கையை விட்டு எழுந்தார். 

‘இனி என்ன செய்யப் போறீங்க?’ என்று கேட்டுவிட்டேன். 

அடுத்த வாரத்தில் ஒடிசா செல்வதாகச் சொன்னார். எங்கள் ஊர்க்காரர்கள் அங்கு ஒரு குவாரி பிடித்திருக்கிறார்கள். குவாரியில் வேலை தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். என்ன வேலை என்று அவருக்கும் தெரியவில்லை. லாரி ஓட்டச் சொல்லலாம், ஆபிஸ் பாயாக இருக்கலாம் அல்லது கல் உடைக்கும் வேலையாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் செய்கிற மனநிலையில் இருந்தார். நான்கைந்து நாட்களாக சவரம் செய்யப்படாத தாடியும், கசங்கிய சட்டையும், வீழ்ந்து போன சாம்ராஜ்யத்தின் நினைவுகளைத் தேங்கிய கண்களுமாக பரிதாபமாகத் தெரிந்தார். இந்தச் சந்திப்பு நடந்து சில வாரங்களாகிவிட்டன. அநேகமாக இப்பொழுது ஒடிசாவின் குவாரியில் கருமையேறிக் கிடக்கக் கூடும்.

இந்த மாதிரியான வாழ்ந்த கெட்ட மனிதர்களிடமிருந்து எதைக் கற்றுக் கொள்வது? 

வாழ்க்கை நம்மோடு நடத்தும் சடுகுடு ஆட்டத்தில் சுவாரஸியங்களுக்கு பஞ்சமே இல்லை. இரட்டை மாட்டு வண்டிச் சவாரியும், திரும்பிய பக்கமெல்லாம் பண்ணையாட்களுமாக இருந்த ஜமீன் குடும்பம் அடுத்த இருபது ஆண்டுகளில் சிதைந்து சின்னாபின்னமாகியதை நேரில் பார்த்திருக்கிறேன். அதே ஊரில் மிக மோசமான சூழலில் இருந்தவர்கள் இருபதே ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்துவிட்டதையும் பார்க்க முடிகிறது. எங்கே ஒளிந்திருக்கிறது வாழ்க்கையின் புதிரான சிக்கல்கள்? இவை அவிழ்க்கவே முடியாத முடிச்சுக்கள் அல்லவா? யாராலும் கணிக்க முடியாத பாம்பு ஏணி ஆட்டம் அது. எந்தப் பாம்பு எப்பொழுது கொத்தும் என்றும் எந்த ஏணி ஏற்றிவிடும் என்பதையும் தெரியாமலே ஓடிக் கொண்டிருக்கிறோம். ஒருவனை தூக்கி வீசும் அதே காலகட்டத்தில் இன்னொருவனைக் கொண்டாடித் தீர்த்துவிடுகிறது. ஒரு குடும்பத்தை நாறடிக்கும் அதே சமயத்தில்தான் இன்னொரு குடும்பத்தை ஓஹோவென்று மாற்றிவிடுகிறது. 

இதையெல்லாம் பார்த்தால் சற்று நடுக்கமாகத்தான் இருக்கிறது. பத்து வருடங்களே கூட அதிகம்தான். இந்த வாழ்க்கை நம்மோடு விளையாடிப் பார்க்கலாம் என்று நினைத்தால் வெகு சில வருடங்கள் போதும். சிதறிப் போய்விடுவோம். ஆனால் இதையெல்லாம் எத்தனை பேர் யோசிக்கிறார்கள்? இருக்கும் இடத்திலிருந்து ஒரு படி மேலே போய்விட்டால் ஆணவம் வந்து தலையில் ஏறிக் கொள்கிறது. எவ்வளவு ஆட்டங்கள்? எவ்வளவு ஏளனப் பேச்சுக்கள்? 

நேற்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. இரவு இரண்டு மணி இருக்கும். புத்தகம் ஒன்றை வாசித்துவிட்டு படுக்கப் போவதற்கு முன்பாக மின்னஞ்சலைத் திறந்து படித்துவிட்டு திணறிப் போய்விட்டேன். தன்னைப் பற்றிய அடையாளம் எதையுமே குறிப்பிடாமல் எழுதப்பட்டிருந்த மின்னஞ்சல் அது- 

உங்களுடைய புனிதத் திருடர்கள் கட்டுரையை இன்று படித்தேன்.  அதுவும் ராத்திரி ஒரு மணிக்கு ! படிக்க படிக்க 'ஒரு வேளை இந்த ஆளு என் கதையை தான் தெரிஞ்சு  எழுதியிருப்பாரோ' என்று தோன்றுமளவு ஒரு கசப்பு மனதில். உறுத்திக்கொண்டே இருந்தது, இருக்கிறது. ஏன் இதை, அதாவது இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன் என்று தெரியவில்லை.  ஒரு வேளை,   இந்த ராத்திரி ஒரு மணி என்கிற அசுரர் நேரமும் , தனிமையும் என் மனதை என்னவோ பிசைந்து செய்ததினால் இருக்க வேண்டும்.

நான் கோட்டுக்கு அந்த பக்கம் நிற்கும் ஆள். அதாவது பறிகொடுத்தவன் அல்ல. புனிதத் திருடன். ஒரு நாலைந்து பேரிடம் வியாபார தேவைக்கு, பணம் வாங்கி, அதை விருத்தி செய்யமுடியாமல், (அல்லது துப்பில்லாமல், கழிவில்லாமல், யோக்யதை இல்லாமல்) பணத்தையும் தொலைத்து, அவமானப்பட்டு, பெயர் இழந்து, கடன் சுமை ஏறி, வாங்கிய யாருக்குமே கொடுக்காமல், இதோ அதோ என்று சாக்கு சொல்லி நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இதில் சுயபரிதாபம் வேறு சேர்ந்து கொண்டு, இருக்கும் மூளையையும் வேலை செய்ய விடாமல் முழு தோல்வியின் எல்லையில் நிற்கும்பொழுது தான்....... உங்களுடைய புனித.............

ஜெயித்தவர்களுக்கு பின்னே உள்ள கதையை பற்றிய கேள்விகள் எப்பொழுதுமே கிடையாது. வெற்றி பெற்று பணம் சேர்த்து, அது நிறைய கையில் இருப்பதையும் மற்றவர் பார்க்கும் விதம் பகட்டையும் காட்டிவிட்டால் அது எல்லாவற்றையும் மறைத்து விடுகிறது. பின் கேட்பதெல்லாமே  காதுக்கு இனிமை தான்.(எனக்கு தெரியும்டா அவனை, பயங்கர அறிவாளி, அசாத்திய உழைப்பு,etc ,etc) என்னைப்போல்  தோற்று விட்டால் ? 'எனக்கு எப்பவோ தெரியும்டா இது இப்படி தான் போகும்னு.. இவனுக்கு வியாபாரமெல்லாம் வராது...எவ்வளவு பேர ஏமாத்தி இருக்கான் தெரியுமா ?' வகையறா சொற்பொழிவுகள்.

எதற்கு சொல்ல வந்தேன் என்றால், நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல எண்ணத்தில், பணம் கொடுத்தவர்களின்  முகத்தை நோக்கி தைரியமாக , கண்ணோடு பார்த்து பேசி, கேட்டு,  உயரவேண்டும் வேண்டும் என்கிற நோக்கில் வாங்கப்பட்ட பணம் தான். கொடுத்தவர்கள் நண்பர்களும் சில உறவினர்களும். முதலீடு செய்து, தொழிலுக்குள் என்னை தொலைத்து, ஒரு பத்து வருட காலம் புதிய உலகம், புதிய அனுபவங்கள்.

தோல்வி. பெரிய எழுத்தில் தோல்வி. 

என் குடும்பமும் என் கலாச்சாரமும் எனக்கு வளர்த்த அத்தனை குணங்களையும் ஒவ்வொன்றாக அழித்து, எங்கே ஆரம்பித்தேன், எங்கே போக நினைத்தேன், எங்கே தவறு செய்தேன் என்று யோசிக்க கூட முடியாமல், தோல்வி மேல் தோல்வி அமுக்க, இதோ இப்போ, இப்போ  சரியாகிவிடும் என்று முயன்று முயன்று, தவறுக்கு மேல் தவறு செய்து,  தோல்வியின் அடி கொடுத்த இயலாமை வளர்த்த அகங்காரமும் கோவமும் தலைக்கு ஏறி அடையாளம் தெரியாத புதியவனாக மாறி போனேன். புதியவன் என்றால்- முதலில் உண்மை என்னை விட்டு விலகியது. பிறகு அந்த இடத்தில் வந்தமர்ந்தது பயம். பயத்தில் முதல் பொய்... பொய் மட்டுமே வாயில் இருந்து வரும் என்கிற அளவுக்கு அது வந்து என்னை நிறுத்தி,பொய் சொல்லி பொய் சொல்லி, என்னை ஏமாற்றி, நம்பியவர்களை ஏமாற்றி, முதலில் அது உறுத்தி, பின் கொஞ்சம் கொஞ்சமாக எருமை தோலுக்கு பழகி விட்டேன். கொடுத்தவர்கள் கேட்டு கேட்டு சலித்து, - சனியன் தொலையட்டும் - தெரிந்தவன், (இருபது-முப்பது வருட நட்பின் காரணம் என்ன செய்ய ?)  என்னை மறந்து மறந்து அவரவர் உலகத்திற்கு திரும்பி விட்டார்கள்.  நான் மட்டும் தனியே. எப்படியும் குடுக்கணும், எப்படியும் எல்லாவற்றையும் சரி பண்ணனும், எப்படியும் ஜெயிக்கணும், இப்படி பல 'எப்படியும்' சபதங்களுடன், வாழ்க்கை இழந்து போராடிக்கொண்டிருக்கிறேன். 

என் பெற்றோர்களிடமோ, மனைவியிடமோ, மகனிடமோ கூட, என் வெளிப்பாடு வேஷம் மட்டுமே..

உண்மையில், நன்றாக  உழைத்து, நன்றாக விருத்தி செய்து, சந்தோஷமாக வாழ்க்கை அமைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எல்லாம் நல்ல எண்ணங்களுடன் தான் ஓட்டம் தொடங்கினேன். சறுக்கி விழுந்து விட்டேன், எழவே முடியவில்லை, அனால் அதன் பலன்களை மட்டும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் - கடன் சுமை, கெட்ட பெயர், தூக்கமின்மை, அமைதியின்மை, நாளைய போக்கு அறியாத பயம், இன்னும் எத்தனையோ. என்னவோ படிக்கும் பழக்கமும், இசை மேல் நாட்டமும் இன்னமும் என் பழைய, நானே மறந்து போன ஒரு வாழக்கை முறையை எனக்கு ஞாபக படுத்தி, பைத்தியம் பிடிக்காமல் இருக்க உதவுகிறது. எனக்கு நேர்ந்த பல வீழ்ச்சிகளுக்கு நான் மட்டுமே, என் தவறுகள், முட்டாள்தனம் மட்டுமே காரணம் என்று உணர்ந்து, வேறு ஒரு சப்பை கட்டும் கட்டாமல் இருக்கும் அறிவாவது இருப்பதனால் பைத்தியம் பிடிக்காமலோ, அல்லது வேறேதும் விபரீத செயல்களுக்கோ போகவில்லை. நான் பணம் கொடுக்க வேண்டியவர்களின் பட்டியல் மட்டும் அப்படியே என்னை பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறது, என்றாவது என் பாரத்தை குறைப்பாயா என்று கேட்பது போல். 

மனம்  அறிந்து, ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் செய்யவில்லை. என்னை மீறி போய் விட்டது. முற்றும் இழந்து, வாங்கிய பணத்தை கொடுக்க முடியாத அவல நிலைக்கு போய் விட்டதால் திருடன் என்கிற பட்டமா ? அல்லது பாவம் என்கிற பட்டமா ? அல்லது நான் கொடுக்காமல் ஏமாற்றியவர்கள் என்னை கேட்பதை நிறுத்தி விட்டதால், கணக்கு கழிந்ததாக அர்த்தமா ? எது பொருந்தும் எனக்கு ? 

என்னவோ நினைத்தேன், எழுதினேன்...அவ்வளவு தான். ஒன்றும் பதில் எதிர்பார்த்து எழுதியதல்ல. உரக்க தனியாக பேசிக்கொண்டிருந்த பொழுது நீங்கள் அங்கே இருந்ததாக   வைத்துக்கொள்ளுங்கள். 

ஏதோ ஒரு பெயர் - எதுவா இருந்தா என்ன ? 

சரி, பார்க்கலாம். வணக்கம்.

எவ்வளவு வலிகளை இந்தக் கடிதத்தின் வரிகள் சுமந்திருக்கின்றன என்று புரிந்து கொள்ளலாம். தனது இயலாமை, தவறுகள் என அத்தனையையும் உணர்ந்திருக்கிறார். ஆனால் எழவே முடியவில்லை என்கிறார். இத்தகைய கடிதங்களுக்கு ‘நம்பிக்கையோடு இருங்கள்’ என்று எழுதுவதும் கூட சம்பிரதாயமான பதிலாகத்தான் இருக்கும். ஆனால் அதைத் தவிர வேறு வழி இருக்கிறதா என்ன? 

மேலும் கீழுமாக நாம் புரட்டி வீசப்படும் இந்த உலகத்தில்தான் எவனோ எங்கேயோ கொடியேற்றிக் கொண்டிருக்கிறான். நம்மால் இனி எழ முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிற போதுதான் எவனோ ஒருவன் எவரெஸ்ட் மீது ஏறிக் கொண்டிருக்கிறான். 

விழுந்துதான் பார்க்கலாமே. விழுந்ததை தயக்கமேயில்லாமல் ஒத்துக் கொள்ளலாம். நாம் விழுந்துவிட்டோம் என்பதை ஒத்துக் கொள்ளத் தொடங்கும் போதே பல பிரச்சினைகளில் இருந்து தப்பித்துவிடலாம். எந்த வேஷமும் அவசியமில்லை. ‘ஆமாம் நான் தோற்றுவிட்டேன்’ என்று சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியத்தோடு அறிவித்துவிடலாம்.

அந்தப்பக்கமாகச் சென்று ஏளனமாகப் பேசுவார்கள்தான். பேசட்டும். என்ன குறைந்துவிடப் போகிறது? மறைத்தால் மட்டும் பேசமாட்டார்களா என்ன? உயர்ந்தாலும் ஏசுவார்கள். தாழ்ந்தாலும் ஏசுவார்கள்.

வெற்றியாளனை மட்டும்தான் இந்த உலகம் கொண்டாடும் என்கிற நினைப்புதான் அடுத்தவர்களிடம் நம்மை வெற்றியாளனாகவே பறைசாற்றச் செய்கிறது. அப்படியெல்லாம் அவசியம் இல்லை. வெற்றியாளனைவிடவும் நேர்மையாளனுக்கு இந்த உலகில் மரியாதை அதிகம். அந்த மரியாதை உடனடியாகத் தெரியாவிட்டாலும் போகப் போகத் தெரியும். கடைசி வரைக்கும் நம்மால் வெல்ல முடியாவிட்டாலும் கூட ‘பாவம்யா நல்ல மனுஷன்’ என்கிற பெயரையாவது சம்பாதித்து வைக்கலாம்.

‘இதுதான் நான்’ என்று சொல்லிக் கொள்வதில் ஒரு ஆசுவாசம் இருக்கிறது தெரியுமா? தோற்றவனாக இருந்தாலும் வென்றவனாக இருந்தாலும் நான் நானாக இருக்கிறேன் என்பதை எந்தத் தயக்கமும் இல்லாமல் அறிவித்துவிடுவதன் வழியாகவே நம் வலியின் பாதிச் சுமைகளை இறக்கி வைத்துவிடலாம்.

தோல்வியைச் சந்திக்காத மனிதர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்?   தோல்வியும் ஏமாற்றங்களும் தவறுகளும் நம் தோள்களின் மீது விழட்டும். ஒன்றும் பிரச்சினையில்லை. எப்படியும் எழுந்துவிடலாம் என்ற நினைப்பை மட்டும் விட்டுவிடாதீர்கள்.

காட்டாற்று வெள்ளம் நம்மை அடித்துச் செல்லும் போது நம்மால் எதுவுமே செய்ய முடியாதுதான். அந்த மாதிரியான சமயங்களில் நம்பிக்கை மட்டும்தான் காப்பாற்றும்- ஏதாவதொரு பற்றுக்கோல் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை. நம்பிக்கை பொய்த்து வெள்ளம் நம்மைக் கொண்டு போய்விடக் கூடும்தான். ஆனால் மூச்சை தண்ணீரோடு சேர்த்துக் இழுத்துக் கொள்கிற அந்தக் கடைசி விநாடி வரைக்கும் ‘எப்படியாவது தப்பித்துவிடுவோம்’ என்கிற உறுதியை மட்டும் இறுகிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். அது மட்டும்தான் நாம் செய்யக் கூடிய ஆகச் சிறந்த காரியம்.

வாழ்வில் தோற்றவனை இந்த உலகம் பேசுவதில்லைதான் ஆனால் குழிக்குள் கிடந்து எழுந்து வந்து தனது வெற்றியை நிலைநாட்டுகிறான் பாருங்கள்- அவனைக் கொண்டாடித் தீர்த்துவிடும்.

You never old to dream என்பார்கள். எவ்வளவு காலமானாலும் கனவுகளை மட்டும் கரைத்துவிடக் கூடாது.