May 2, 2015

துளிர்க்கும் கண்ணீர்

வைபவ் கிருஷ்ணா. இந்தக் குழந்தையின் பெயர். இரண்டரை வயது வரைக்கும் துடிப்பான குழந்தையாக இருந்திருக்கிறான். தவழ ஆரம்பிப்பதிலிருந்து குப்புற விழுவது, பேசுவது என அத்தனையையும் சராசரியான குழந்தைகளை விடவும் சற்று முன்பாகவே செய்திருக்கிறான். அதன் பிறகு விதி விளையாடியிருக்கிறது. ‘ஊரே கண் வைக்குது’ என்று நினைத்தபடிதான் ஆரம்பத்தில் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் இது திருஷ்டி இல்லை. கை, கால் என ஒவ்வொரு உறுப்பாக மெல்ல செயலிழக்கத் தொடங்கியிருக்கின்றன. தண்ணீர் வேண்டும் என்கிற உணர்வைக் கூழ இழந்துவிட்டான். நா வறண்டிருந்தால் கொஞ்சம் தண்ணீரை ஊற்றுகிறார்கள். இப்பொழுது பத்து வயதாகிவிட்டது. தள்ளுவண்டியில்தான் வைத்திருக்கிறார்கள். 


அவனால் பேச முடியாது. மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள முடியாது. நடப்பது மட்டுமில்லை- சிறு அசைவும் கூட சாத்தியமில்லை. எங்கேயோ பார்த்தபடி அமர்ந்திருக்கிறான். கன்னத்தை வருடினால் சிரிக்கிறான். அது மட்டும்தான் அவன் காட்டக் கூடிய ஒரே ரியாக்‌ஷன். அலோபதி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் என அத்தனை மருத்துவ முறைகளையும் முயன்று பார்த்திருக்கிறார்கள். கடைசியில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்தான் பிரச்சினையின் அடிவேரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மற்ற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதி திரவமாக மாறியிருக்கிறது. இனி இந்த நோயைக் குணப்படுத்துவது சாத்தியமேயில்லை என்று சொல்லிவிட்டார்கள். முகம் அகோரமாக மாறிவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதுவரை அவ்வளவு மோசமாகிவிடவில்லை. சளி, காய்ச்சல் உள்ளிட்ட வேறு எந்தச் சிக்கலும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது மட்டும்தான் அவனுக்கு குடும்பத்தார் செய்யக் கூடிய ஒரே காரியம்.

நத்தக்காடையூர் பக்கத்தில் புதுவெங்கடையாம்பாளையம் என்கிற ஊரில் குடியிருக்கிறார்கள். 

எங்கள் ஊரில் நேற்று மஞ்சள் நீர் விளையாட்டு. அதற்காகத்தான் ஊருக்கு வந்திருந்தோம். கிடைக்கிற சந்தர்ப்பத்தில் நத்தக்காடையூருக்குச் சென்று வந்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். தாமோதர் சந்துருவை ஐந்து மணிக்கு அழைத்து ‘இன்னைக்கு போய்ட்டு வந்துடலாங்களா?’ என்று கேட்டேன். ஈரோடு பேருந்து நிலையத்திற்கு மகிழ்வுந்தில் வந்து நின்றிருந்தார். சொன்ன நேரத்தைவிடவும் அரை மணி நேரம் கால தாமதமாகச் சென்றிருந்தேன். சந்துரு அண்ணனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. அவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் காத்திருந்தார். எங்களோடு பாரியும் சேர்ந்து கொண்டார். நத்தக்காடையூரில் எழுத்தாளர் தேவிபாரதியும் வந்து நின்றிருந்தார். அவர்தான் கிருஷ்ணா குறித்தான விவரங்களை அனுப்பி வைத்திருந்தார்.


வீட்டை அடையும் போது இரவு எட்டு மணிக்கு மேலாகிவிட்டது. அருகாமையில் வீடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் வேலிக்காத்தான் மரங்கள் புதராகிக் கிடந்தன. சரியான பேருந்து வசதி கூட இல்லாத ஊர் அது. கிருஷ்ணாவை ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது கூட சாத்தியமில்லாத காரியம். அவனுடைய பாட்டி தவமணிதான் கிருஷ்ணாவுக்கான அத்தனை வேலையையும் செய்கிறார். அவருடைய மகளின் குழந்தை கிருஷ்ணா. சிறுநீர், மலம் கழிப்பது என எதுவுமே கிருஷ்ணாவுக்குத் தெரியாது என்பதால் அவனுக்கான பணிவிடைகளைப் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும். ஒரே இரவில் இருபது முப்பது முறை கூட சிறுநீர் கழித்துவிடுகிறானாம். துணியை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். பகல் முழுவதும் மாற்றிய துணிகளைத் துவைக்க வேண்டும். தான் நன்றாகத் தூங்கியே பல வருடங்கள் ஆகிவிட்டதாக தவமணி சொன்னார். இவனை வீட்டில் தனியாக விட்டு வெளியில் எங்கேயும் செல்ல முடியாது என்பதால் அவருக்கும் கிட்டத்தட்ட வீட்டுச் சிறைதான். 

கிருஷ்ணாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக நகையெல்லாம் விற்று ஒரு பழைய கார் வாங்கியிருக்கிறார்கள். அதுதான் கிருஷ்ணாவுக்கான ஆம்புலன்ஸ். அதற்கு டீசல் ஊற்றுவதும், ஓட்டுநர் சம்பளம், மருந்து மாத்திரை என எப்படியும் மாதம் மூன்றாயிரம் வரைக்கும் கிருஷ்ணாவுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இரண்டரை ஆண்டுகள் வரைக்கும் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை இப்படி படுத்த படுக்கையாக அடுத்த பல ஆண்டுகளுக்கு பார்த்துக் கொண்டிருப்பது போன்ற கொடுமை வேறெதுவும் இருக்க முடியாது. அதுவும் பெற்றோர்கள் இல்லாத குழந்தை. ‘நான் உயிரோடிருக்கும் வரை எப்படியும் பார்த்துவிடுவேன்...அதற்கப்புறம் இவனை யார் பார்த்துக்குவாங்க?’ என்று கேட்டுவிட்டு அழத் தொடங்கிவிட்டார்.

அந்த வீட்டில் அரை மணி நேரம் இருந்திருப்போம். நிறைய பேசினோம் என்று சொல்ல முடியாது. அப்பொழுதே கிளம்பினாலும் வீட்டுக்குச் சென்று சேர நள்ளிரவு ஆகிவிடும். ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி பன்னிரெண்டு காசோலைகளை நிரப்பினேன். அமெரிக்க நண்பர் ஒருவர் கிருஷ்ணாவுக்காக அறக்கட்டளையின் வங்கிக் கணக்குக்கு இருபத்து நான்காயிரம் ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறார்.  இனி ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியன்று வங்கியில் செலுத்தி இரண்டாயிரம் ரூபாயை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த மாதத்திலிருந்து அதைச் செய்யும்படியாக அடுத்த ஏப்ரல் வரைக்கும் முன் தேதியிட்ட பனிரெண்டு காசோலைகள். அவைதவிர தாமோதர் சந்துரு தனது பங்களிப்பாக மூன்றாயிரம் ரூபாயைக் கொடுத்தார்.

கிளம்பும்போது மனம் பாரமாக இருந்தது. சந்துருவிடம் ‘இந்த அறக்கட்டளையை வேலையைச் செய்வதால் மனது இறுகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது’ என்று சொன்னேன். வாழ்க்கையின் குரூரமான பக்கங்களிலிருந்து வேண்டுகோள்கள் வந்து கொண்டிருக்கின்றன. விதவிதமான நோய்கள், கழுத்தை நெரிக்கும் வறுமை, நினைத்துக் கூட பார்க்க முடியாத குடும்பச் சிக்கல்கள் என ஏதாவதொன்றை எதிர்கொள்ள நேரிடுகிறது. குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு வரக் கூடிய வாழ்வியல் நெருக்கடிகளைப் பார்க்கும் போது நெஞ்சாங்கூட்டில் ஏதோ பாறாங்கல்லை இறக்கி வைத்தது போல அடைத்துக் கொள்கிறது. இதையெல்லாம் திரும்பத் திரும்பப் பார்க்கும் போது ‘இவ்வளவுதான் வாழ்க்கை’ என்று இறுகிப் போய்விடுவேனோ என்று திகிலாகத்தான் இருக்கிறது. 

ஈரோடு பேருந்து நிலையத்தில் பாரியிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பும் போது மணி பத்தாகிவிட்டது. மனைவி அழைத்து ‘நீங்க வந்து எழுப்புங்க...தோசை சுட்டுத்தர்றேன்’ என்று சொல்லியிருந்தார். ‘வேண்டாம்.... வரும் போது சாப்பிட்டுட்டு வந்துடுறேன்’ என்று சொல்லியிருந்தேன். ஆனால் பதினோரு மணிக்கு கோபியில் அத்தனை கடைகளையும் அடைத்துவிடுவார்கள் என்று தெரியவில்லை. மருத்துவர் சிவசங்கர் அழைத்து ‘நீங்க வந்துட்டு சொல்லுங்க...வீட்டில் நான் ட்ராப் செய்கிறேன்’ என்றார். அவர் அரசு மருத்துவர். மருத்துவர்கள் என்றால் எனக்கு வெகு மரியாதையுண்டு. அவரை அந்த நேரத்தில் தொந்தரவு செய்யக் கூடாது என்று ‘டவுன் பஸ் ஏறிட்டேன்..நாளைக்கு உங்களைப் பார்க்க வருகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். ஆனால் அநியாயம். ஒரு பேருந்து கூட இல்லை. நான்கு கிலோமீட்டர்கள்தான். வேக வேகமாக நடக்கத் தொடங்கினேன். பசிக்கத் தொடங்கியிருந்தது. கிருஷ்ணாவை நினைத்துக் கொண்டேன். வீட்டை அடையும் வரைக்கும் என்னையுமறியாமல் கண்ணீர்த் துளிகள் கசிந்து கொண்டேயிருந்தன.