Apr 22, 2015

ஜெய் கிஸான் எல்லாம் வாய் வரைக்கும்தான்

ஆண்ட்ரியா பலியானியை நான்கைந்து வருடங்களாகத் தெரியும். நல்ல உயரம். இத்தாலிய ரத்தம். முந்தைய நிறுவனத்தில் இருக்கும் போது வெகு பழக்கம். ஜப்பானில் இரண்டு பேரும் ஒன்றாகச் சுற்றியிருக்கிறோம் - இப்படியெல்லாம் நான் சொல்லிக் கொண்டே போகும் போது முக்கியமான விஷயத்தையும் சொல்லிவிட வேண்டும்- ஆண்ட்ரியா என்றவுடன் நம்மூர் அழகான தேவதையை நினைத்துப் பார்க்கக் கூடாது. நாற்பதைத் தாண்டிய சொட்டைத் தலையர். அவர் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தவுடன் ‘ஆண்ட்ரியாவிடம் கேட்டுப் பார்’ ‘ஆண்ட்ரியாவிடம் விசாரி’ என்று என் மேலாளர் திரும்பத் திரும்பச் சொன்ன போது என்னை கார்த்தியாக நினைத்துக் கொண்டு அரை டிரவுசர் போட்ட ஆண்ட்ரியாவுடன்  ‘உன் மேல ஆசதான்’ என்று ஆட்டம் போடுவதாகவெல்லாம் கனவு கண்டது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால் ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்துதான் வைப்பான்.  ‘யெஸ் டெல் மீ’ என்று தகர டப்பாக் குரலில் ஃபோனின் அந்த முனையிலிருந்து முதன்முறையாக அவர் பேசிய போது உள்ளங்காலில் கிளம்பிய சில்லிட்ட ரத்தம் உச்சந்தலையில் பாய்ந்துதான் அடங்கியது. 

ஆண்ட்ரியாவிடம் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. அவசரமில்லாத மனிதர். தெரியாத்தனமாக உறுதி வார்த்தையைக் கொடுத்துவிட்டு பிறகு பிதுங்கப் பிதுங்க விழிக்கமாட்டார். முடியும் என்றால் முடியும். இல்லையென்றால் சிரித்துக் கொண்டே முடியாது என்று சொல்லிவிடுவார். இது மிகப்பெரிய வரப்பிரசாதம். எனக்கு அது சுட்டுப்போட்டாலும் வருவதில்லை. அவர் தவறாக நினைத்துக் கொள்வாரோ, இவர் ஏதேனும் நினைத்துக் கொள்வாரோ என்று அடுத்தவர்களுக்காக யோசித்து யோசித்து நம் தலையில் சுமையை இறக்கி வைத்துக் கொள்வதுதான் வாடிக்கையாகியிருக்கிறது. அப்படித்தான் ஒரு சீனாக்காரனிடம் சிக்கிக் கொண்டேன். அவன் கேட்டவுடன் சரி என்று சொல்லியிருந்தேன். ஆனால் சொன்ன தேதிக்கு வேலையை முடித்துத் தர முடியவில்லை. அந்தச் சீனாக்காரனிடம் ஒரு சில்லரைத்தனம் உண்டு. போட்டுக் கொடுத்துவிடுவான். அதுவும் என்னைப் போன்ற குள்ளக்கத்திரிக்காய் இந்தியன் என்றால் அவனுக்கு இன்னமும் இளக்காரம். என்னிடம் நேரடியாக கேட்காமல் மேனேஜருக்கும் இயக்குநருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைத்துவிட்டான். மேனஜர் பிரச்சினையில்லை. சமாளித்துவிடலாம். ஆனால் இயக்குநரிடம் அதுவரை பேசியது கூட இல்லை. ‘என்ன காரணம்?’ என்று கேட்டு மின்னஞசல் அனுப்பியிருந்தார். என்ன சொல்வது என்று தெரியவில்லை. அப்பொழுதிருந்த ஒரே ஆபத்பாந்தவன் ஆண்ட்ரியாதான்.

‘வேலையை முடித்துவிட்டதாகவும் மின்னஞ்சல்தான் அனுப்பவில்லை’ என்றும் சொல்லச் சொன்னார். அப்படி எப்படிச் சொல்ல முடியும்? சிக்கினால் கதையை முடித்துவிடுவார்கள். ‘அதெல்லாம் பார்த்துக்கலாம் சொல்லு’ என்றார். அப்படியே சொன்னேன். ‘வேலை முடிந்துவிட்டது...சரி பார்க்கவும்’ என்று சீனாக்காரனுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அப்பொழுது மணி மாலை ஆறு ஆகியிருந்தது. சீனர்கள் நம்மைவிட இரண்டரை மணி நேரம் முன்னாடி இருப்பதால் அப்பொழுது அவன் வீட்டுக்குக் கிளம்பியிருப்பான். அடுத்த நாள் காலையில்தான் சரி பார்ப்பான். ஆண்ட்ரியா ப்ரான்ஸிலிருந்தார். நமக்கு மாலை நேரம் என்றால் அவர்களுக்கு மதியம். தனது அத்தனை வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு எனக்கு வேலையைச் செய்து கொடுத்தார். அவர் அவ்வளவு மெனக்கெட வேண்டியதில்லை. ஆனால் செய்து கொடுத்தார். அதிகாலை இரண்டு மணிக்கு வேலை முடிந்தது. சந்தோஷமாக வீட்டுக்குக் கிளம்பினேன்.

அது உண்மையிலேயே சிக்கலான வேலைதான். தனியாளாக நிச்சயமாக முடித்திருக்க முடியாது. ஆனால் வேலையைப் பொறுத்தவரையில் ஆண்ட்ரியா கில்லி. அலுவலகத்திலும் அவருக்கு மரியாதை அதிகம். இதிலேயேதான் குப்பை கொட்டுவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஆண்ட்ரியாவுக்கு விவசாயத்தில் நாட்டம் அதிகம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு விவசாயத்திற்குச் செல்லப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். விவசாயத்தைப் பொறுத்தவரையில் ஐரோப்பிய நாடுகளில் நிலைமை எப்படியென்று தெரியவில்லை. ஆனால் நம் ஊரில் விவசாயம் என்றாலே பதறுகிறார்கள். எங்கள் தாத்தா காலத்தில் எங்களுக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. அவர் காலத்திலேயே விற்றுவிட்டார்கள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அரசாங்க வேலை இருந்ததால் தப்பித்துவிட்டார்கள். வேலைக்குச் சென்று எங்களைப் படிக்க வைத்து ஒரு வீடு கட்டினார்கள். ஆனால் தோட்டங்காடு எதுவும் சேர்க்க முடியவில்லை. இப்பொழுது அப்பாவுக்கு கொஞ்சம் ஆசை. நிலபுலன்களைப் பார்த்துவிட வேண்டும் என்று. வாங்கலாம்தான். ஆனால் ஒரு ஏக்கர் வயல் பதினெட்டு லட்ச ரூபாய்க்கு விற்கிறது. எப்படி வாங்க முடியும்? அப்படியே வாங்கினாலும் கூட நஷ்டத்தில்தான் ஓட்ட வேண்டும் என்கிறார்கள். 

விவசாயம் செய்யச் சொல்லிப் பரிந்துரைக்கும் ஒரு விவசாயியைக் கூட பார்க்க முடிவதில்லை. ‘நாங்க படற கஷ்டம் போதாதா?’ என்றுதான் கேட்கிறார்கள். காசு இருந்தால் இடம் வாங்கி வாடகை வருகிற மாதிரி வீடு கட்டி விடச் சொல்கிறார்களே தவிர விவசாய பூமி பற்றி நினைத்துப் பார்க்கவே வேண்டாம் என்கிறார்கள். ‘இக்கரைக்கு அக்கரை பச்சை..அதனால்தான் அப்படிச் சொல்கிறார்கள்’ என்று எளிதாகச் சொல்லிவிடலாம்தான். ஆனால் அப்படியில்லை. திணறுகிறார்கள். வேலை செய்ய ஆட்களே கிடைப்பதில்லை. எவ்வளவு கூலி கொடுத்தாலும் தோட்டத்தில் இறங்கி வேலை செய்வதற்கு ஆட்கள் வருவதில்லை. முன்பு மாதிரியெல்லாம் நாமே வேலையைச் செய்வதும் சாத்தியமில்லை. எருவைப் போட்டு பயிரை நட்டால் அடுத்து களை வெட்டினால் போதும் என்றெல்லாம் விட முடியாது. நிலத்தை பாழ் படுத்தி வைத்திருக்கிறோம். விதையை ஊற வைப்பதிலிருந்து காயையும் கனியையும் ஊற வைப்பது வரை அத்தனையும் வேதிப் பொருட்கள்தான். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு வேதிப்பொருளைக் கொட்டிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. எதையாவது அடிக்காமல் விட்டால் வெள்ளாமை படுத்துவிடும். முன்பெல்லாம் மண்வெட்டியை வைத்து களையை வெட்டி அதை மண்ணுக்குள் போட்டு எருவாக்குவார்கள். இப்பொழுது களைக்கும் வேதிப் பொருள்தான். அடித்துவிட்டால் அப்படியே கருகிவிடும். மருந்தடிப்பதற்கும் ஆள் கிடைப்பதில்லை. மருந்தடிக்கவென ஒரு ஆள் காட்டுக்குள் இறங்கினால் ஒரு நாள் கூலி எழுநூறு ரூபாய் வரைக்கும் கொடுக்க வேண்டியிருக்கிறது. உண்மையிலேயே வெகு கஷ்டமான தொழிலாகத்தான் விவசாயம் இருக்கிறது.

நகரங்களில் வாழ்பவர்களில் பத்துக்கு ஆறு பேராவது ‘அடுத்தது விவசாயம்தான் மிகப்பெரிய தொழிலாக மாறப் போகிறது’ என்கிறார்கள். ஆனால் அந்த ஆறு பேரில் ஒருவர் கூட விவசாயம் செய்யத் தயாரில்லை. நாட்டில் இருக்கும் நிலைமையை வைத்துப் பார்த்தால் இப்போதைக்கு விவசாயம் பிழைக்காது என்றுதான் தோன்றுகிறது. பெரும்பாலான கொள்கைகள் ஆலைகளின் நலம் சார்ந்த கொள்கைகள்தான். உரத் தொழிற்சாலைகள் லாபம் கொழிக்க வேண்டும், கரும்பு முதலாளிகள் காசு சம்பாதிக்க வேண்டும், அரிசி ஆலைகள் கொடி கட்ட வேண்டும் என்கிற கொள்கைகளின் அடிப்படையில்தான் பெரும்பாலான முடிவுகள் இருக்கின்றன. நம்மாழ்வாரின் இயற்கை வழி விவசாயம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். அரசு சொல்லும் வழிமுறைகளில், அரசு காட்டும் உரங்களையும் மருந்துகளையும் அடித்து பிழைப்பை ஓட்டும் விவசாயிகளில் எத்தனை பேர் லாபம் சம்பாதிக்கிறார்கள்? வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாக இருந்தாலே பெரிய விஷயம்.

விவசாயம்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று பேசுகிறோம். விவசாயம் பற்றிய விரிவான விவாதம் எத்தனை இடங்களில் நடக்கிறது? இந்தத் தலைமுறையில் எத்தனை பேருக்கு விவசாயத்தின் சூட்சமங்கள் தெரியும்? நாற்பது அல்லது ஐம்பது ஏக்கர் வைத்திருப்பவன் விவசாயி அல்ல. அரை ஏக்கரும் முக்கால் ஏக்கரும் வைத்திருக்கிறான் அல்லவா? அவன் தான் விவசாயி. அவன் வாழ்வதற்கான சாத்தியங்களை சுருக்கிக் கொண்டுதானே வருகிறோம்? ஒவ்வொரு குறுவிவசாயிக்கும் இதை விட்டுப் போனால் போதும் என்கிற சூழல் உருவாகிக் கொண்டேயிருக்கிறது. நிலத்தின் விலையும் கூடிக் கொண்டே போகிறது. கிடைக்கிற பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு கடை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்றோ அல்லது வங்கியில் போட்டு வட்டியை வாங்கிக் கொள்ளலாம் என்கிற விவசாயிகளின் எண்ணிக்கைதான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

இன்று ஆண்ட்ரியா இந்தியா வந்திருக்கிறார். வேலையை ராஜினாமா செய்துவிட்டார். கொஞ்ச நாட்கள் காசியையும் ராமேஸ்வரத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு தனது ஊரில் பண்ணையை கவனித்துக் கொள்ளப் போகிறாராம். ஜெய்ப்பூரில் இருந்து அழைத்திருந்தார். அவருடைய அப்பாவுக்கு வெகு சந்தோஷம் என்றார். செந்தில்குமார் என்றொருவர் இங்கிலாந்தில் இருக்கிறார். சொந்தக்காரர்தான். ஃபோனில் பேசும் போதெல்லாம் இந்தியா வந்து விவசாயம் செய்ய வேண்டும் என்று சொல்வார். அவருடைய அம்மாவும் அப்பாவும் விவசாயிகள். ‘நீ அங்கேயே இருந்தாலும் போச்சாது...இங்க வந்து தோட்டங்காட்டுல கால வெச்சுடாத..அப்புறம் நடக்கிறதே வேற’ என்று மிரட்டுகிறார்களாம்.