Apr 21, 2015

குரூரத்தின் வர்ணங்கள்

அறக்கட்டளை ஆரம்பித்த பிறகு சந்திக்கிற மனிதர்களும் அவர்களது சிரமங்களும் உருவாக்கும் மனக் கொந்தளிப்புகளை அவ்வளவு சுலபமான வார்த்தைகளால் விவரிக்க முடிவதில்லை. நினைத்துப் பார்க்கவே முடியாத பிரச்சினைகள் மனிதர்களை நசுக்கிக் கொண்டிருக்கின்றன. எப்படி இவற்றையெல்லாம் எதிர்கொள்கிறார்கள்? எதற்காகப் போராடுகிறார்கள்? எந்த ஈர்ப்பு இந்த மனிதர்களை வாழச் செய்கிறது? யோசித்துக் கூட பார்க்க முடிவதில்லை.

மிகச் சாதாரணமான பிரச்சினைகளையெல்லாம் சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய ஜனத்திரளின் நடுவில்தான் இவ்வளவு பெரிய சுமைகளைத் தாங்கித் திரியும் மனிதர்களும் அலைகிறார்கள். அற்பக்காரணங்களுக்காக வாழ்வின் விளிம்பை நோக்கி ஓடுபவர்களிடையேதான் இவர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாழ்க்கையின் விசித்திரங்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒவ்வொரு கணமும் வர்ணங்களைப் புரட்டிப் புரட்டி நம் மீது பூசிக் கொண்டேயிருக்கிறது. சில நேரங்களில் இன்பத்தின் வர்ணங்கள். சில நேரங்களில் குரூரத்தின் வர்ணங்கள்.


அப்படி குரூரத்தின் வர்ணம் பூசப்பட்ட இந்தக் குழந்தையின் பெயர் கிருஷ்ணா. ஒன்பது வயதாகிறது. நடப்பதற்கும் பேசுவதற்கும் இயலாத குழந்தை. ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட மருத்துவர்களை பார்த்துவிட்டார்கள். 2010இல் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் அவனுக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்த இயலாது என உறுதியாகத் தெரிவித்துவிட்ட பிறகு ஓமியோபதியிலிருந்து சித்தா வரைக்கும் மாற்று மருந்துகளையும் முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். எதுவுமே பலனளிக்கவில்லை. இனி சிகிச்சை எதுவும் சாத்தியமில்லை என்று தெரிந்தாகிவிட்டது. அவன் உயிரோடு இருக்கும் வரை பராமரிப்பது தவிர வேறு வழியில்லை என்கிற சூழலுக்கு வந்துவிட்டார்கள். இப்பொழுது மருந்து மாத்திரைகளோடு நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறான். 

எங்கேயாவது செல்ல வேண்டுமென்றால் தூக்கித்தான் செல்ல வேண்டும். உணவை யாராவது ஊட்டிவிட வேண்டியிருக்கிறது. அவனால் தனது தேவைகளைச் சொல்லவும் முடியாது. இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படியே சிரமப்படுவான் என்று தெரியவில்லை. இறைவனின் படைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிரமம். கிருஷ்ணாவுக்கு பிறப்பே சிரமம்.

பிரச்சினை என்னவென்றால் இந்தக் குழந்தையை அவனது தாயும் தந்தையும் பார்த்துக் கொள்வதில்லை. தந்தை எப்பொழுதோ குடும்பத்தை விட்டுவிட்டு போய்விட்டார். தாயும் இப்பொழுது குழந்தையுடன் இல்லை. தாய்வழிப் பாட்டிதான் பார்த்துக் கொள்கிறார். நிரந்தர வேலையோ அல்லது சொத்துக்களோ இல்லாத பாட்டியும் தாத்தாவும் அவர்கள். சிரமத்தில் இருக்கிறார்கள். மருந்து மாத்திரை உள்ளிட்ட சிகிச்சைச் செலவுகள் மாதம் மூன்றாயிரம் ரூபாய் வரைக்கும் ஆகிறது. இடையில் கிருஷ்ணாவுக்கு ஏதாவது உடல் உபாதை ஏற்பட்டால் அதற்கு தனியாகச் செலவு. 

காங்கேயம் அருகில் நத்தக்காடையூரில் இந்தக் குடும்பம் வசிக்கிறது. உதவ முடியுமா என்று விசாரித்தார்கள். கண்டிப்பாக உதவ வேண்டிய நிலைமையில்தான் இருக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணாவுக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லை. யோசித்துப் பார்த்த பிறகு முன் தேதியிட்ட பன்னிரெண்டு காசோலைகளைக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று தோன்றியது. தலா இரண்டாயிரம் ரூபாய் நிரப்பப்பட்ட காசோலைகள். ஒவ்வொரு மாதமும் அவர்கள் அதை வங்கியில் கொடுத்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். முதலில் நிசப்தம் அறக்கட்டளையின் பன்னிரெண்டு காசோலைகளைக் கொடுத்துவிடலாம். ஒரு வருடத்திற்கான செலவுகளைச் சமாளித்துக் கொள்வார்கள். பன்னிரெண்டு மாதங்களுக்குப் பிறகு நிலைமையை அனுசரித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் உதவலாம் என்பதுதான் திட்டம். ஒரே தொகையாக இருபத்தைந்தாயிரம் ரூபாயைக் கொடுப்பதைவிடவும் அந்தந்த மாதத் தேவைக்கு அந்தந்த மாதத்தின் தேதியிட்ட காசோலையைக் கொடுத்துவிடுவதுதான் சரியானதாக இருக்கும் என்று தோன்றியது. இந்த வார இறுதியில் பன்னிரெண்டு காசோலைகளையும் கிருஷ்ணாவின் குடும்பத்தை நேரில் சந்தித்துக் கொடுத்துவிடுகிறேன். அந்தப் பகுதியில் யாராவது இருந்தால் தெரிவிக்கவும். சேர்ந்து செல்லலாம்.