Apr 29, 2015

சில்லரைப்பயலே

ஒருவனோடு சண்டை. இன்னோவா காரை சிக்னலில் நிறுத்தியிருந்தான். சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவனது வண்டிக்கு அருகில் துளி சந்து இருந்தது. கிடைக்கிற சந்தில் ஆட்டோ ஓட்டிவிட வேண்டும் என்கிற கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடியின் முதுமொழிக்கேற்ப வண்டியை நுழைத்து நிறுத்தினேன். அப்படி நுழைத்திருக்க வேண்டியதில்லைதான். ஆனால் இடைவெளி சரியானதாக இருந்தது. இன்னோவாக்காரன் கண்ணாடியை இறக்கினான். ‘அப்படியென்ன அவசரம்?’ என்றான். ஹிந்திக்காரன். ஹிந்தி புரிந்தாலும் பதில் சொல்கிற அளவுக்கு எனக்கு தெரியாது. 

‘அவசரம்தான்...ஒரு மீட்டிங் இருக்கு’ என்றேன். அதைச் சிரித்துக் கொண்டுதான் சொன்னேன். முகத்தை கரடு முரடாக வைத்துக் கொண்டு ‘Asshole' என்றான். எடுத்த உடனேயே இப்படித் திட்டுவார்களா? திட்டுகிறான். சென்ற வாரத்தில் ஊரில் பாரதிதாசனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியொன்று நடந்தது. போய் வந்ததிலிருந்து பாரதிதாசன் பாடல்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். ‘கற் பிளந்து மலை பிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை’ போன்ற முறுக்கேற்றும் பாடல்களை உருப்போட்டு வெறியேறிக் கிடக்கிறேன். போதாதா? அதே வேகத்தில் நானும் ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லிவிட்டேன். சொன்னது சொல்லியாகிவிட்டது. பாரதிதாசனா வந்து காப்பாற்றப் போகிறார்? நாம்தான் சமாளித்தாக வேண்டும்.

கையை வெளியே நீட்டி தோள் மீது வைத்தான். ‘கையை எடு’ என்றேன். ஜெயா டிவி நிருபரை விஜயகாந்த மிரட்டுவது போலவா மிரட்ட முடியும்? பூனைக்குட்டி பேசுவது போல அடிக் குரலிலிருந்துதான். தோளிலிருந்து கையை எடுக்காமல் ‘அப்படியே ஒரு அறை விட்டேன்னு வை’ - இது அவன். சிக்னலைப் பார்த்தேன். இன்னும் நூற்று முப்பது நொடிகள் மிச்சமிருந்தன. வசமாகச் சிக்கிக் கொண்டேன் போலிருக்கிறது. எதைச் சொல்லி பிரச்சினையை முடிப்பது என்று புரியவில்லை. இதற்காகவாவது பத்துக் கிலோ ஏற்ற வேண்டும். ஐம்பத்து நான்கு கிலோ யார் பயப்படுவார்கள்? சாலையில் எந்தப் பயலும் பயப்படுவதில்லை. பிச்சை எடுக்க வருபவன் கூட ‘தள்ளி நில்லுய்யா’ என்கிறான். இதுவே வாட்டசாட்டமாக தொண்ணூறு கிலோ இருந்தால் இவனெல்லாம் இப்படி பேசுவானா? 

இருக்கிறேன். பேசுகிறான். அதற்காக பயந்தபடி விட்டுவிட்டு வர முடியுமா? தமிழனின் மானத்தை மெட்ரோவில் ஏற்றுவதற்காகவா பெங்களூர் எனக்கு சோறு போடுகிறது? விடமாட்டேன். எதையாவது சொல்லி வைப்போம் என ‘எனக்கும் அறையத் தெரியும்’ என்றேன். அவன் நிச்சயமாக உள்ளுக்குள் சிரித்திருப்பான். ‘எங்க அடிச்சுப் பாரு’ என்கிறான். எவ்வளவு எகத்தாளம்? அவன் சொன்னதையே நாமும் திரும்பிச் சொல்லலாம்தான். ஆனால் அவன் கடுப்பாகி அறைந்து தொலைந்துவிட்டால் அவ்வளவுதான். 108 வந்துதான் நம்மை தூக்கிச் செல்ல வேண்டும் என்கிற பயத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டு ‘நீ ஏனய்யா வண்டியை கோணலா நிறுத்தியிருக்க?’ என்றேன். பேச்சை மாற்றிவிட்ட சந்தோஷம் எனக்கு. 

மீண்டும் ஏ டபுள் எஸ் என்றான். இவன் என்ன இதையே திரும்பத் திரும்பச் சொல்லுகிறான்? வேறு எதுவும் தெரியாது போலிருக்கிறது. நாம் புதியதாக எதையாவது சொல்ல வேண்டும் என்று மூளைக்குள் சிக்னல்கள் சிதறடித்தன. சில கணங்களில் அந்த வார்த்தையைக் கண்டுபிடித்துவிட்டேன்.  ‘பீப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்’- சொல்லி முடித்தவுடன் அவனுக்கு உச்சியில் நான்கு முடி நட்டிருக்க வேண்டும். கதவைத் திறந்து இறங்க முயற்சித்தான். அவன் இறங்க எத்தனிக்கிற வேகத்தைப் பார்த்தால் வீசிவிடுவான் போலிருக்கிறது.  அப்படி அவன் வீசினால் 108தான். அடி வாங்கி ஆஸ்பத்திரியில் சேர்வதற்கெல்லாம் அலுவலகத்தில் காப்பீடு தருவார்களா என்று தெரியவில்லை. சம்பளப் பணம் மொத்தத்தையும் தம்பியிடம் கொடுத்து வைத்திருக்கிறேன். அவன் என்னைவிடக் கஞ்சப்பயல். இப்படியெல்லாம் வெட்டிச் செலவைக் கொண்டு வந்தால் கண்டபடி திட்டுவான். தம்பியிடம் திட்டு வாங்குவதற்கு பதிலாக இந்த ஹிந்திக்காரனிடம் திட்டு வாங்குவதே மேல்.

‘அய்யனாரப்பா இந்த மூணு நிமிஷத்துக்கு மட்டும் அடி விழுந்துடாம பார்த்துக்க’ என்று வேண்டிக் கொண்டேன். அவனால் கார் கதவைத் திறக்க முடியவில்லை. திறந்தால் என் பைக் மீது இடிக்கிறது. மீண்டும் இருக்கையில் அமர்ந்தபடி ‘என்ன சொன்ன? என்ன சொன்ன?’ என்றான். 

‘நீ என்ன சொன்ன?’ என்றேன்.

அதற்குள் பின்னாலிருந்து ஒரு பைக்காரர் ஒலியெழுப்பி ‘வழியை விடுங்கய்யா..நான் U டர்ன் அடிக்கணும்’ என்றார். அவர் சொன்னது தெலுங்கில். எனக்குத்தான் தெலுங்கு தெரியுமே. 

‘இவாடு அலோ செய்யலேதண்டி....***********’ இந்த நட்சத்திரங்களில் ஒரு தெலுங்கு கெட்டவார்த்தை. ஹிந்திக்காரனுக்கு நிச்சயமாக அது கன்னடமா தெலுங்கா என்று புரிந்திருக்காது. கண்ணாடியை ஏற்றிக் கொண்டான். என்னை உள்ளூர்க்காரன் என்று நம்பிவிட்டான் போலிருக்கிறது. இப்பொழுதுதான் நமக்கு வாய்ப்பு. எதிரி பயப்படும்போது அவனுடைய பயத்தை இன்னமும் அதிகமாக்கி விட வேண்டும். கண்ணாடிக்கு வெளியிலிருந்தபடி திட்டினேன். அதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று கண்ணாடியைக் கீழே இறக்கி அவனும் திட்டினான். அவனுக்கும் மண்டைக்குள் பல்ப் எரிந்திருக்க வேண்டும். ‘நீ எந்த கம்பெனின்னு சொல்லு..அங்கேயே வர்றேன்’என்றான். சரியான கடன் காரனாக இருப்பான் போலிருக்கிறது - வந்தாலும் வந்துவிடுவான். ஐடி கார்டை வேறு வெளியில் தெரியும்படி தொங்க விட்டிருக்கிறேன். பார்த்துவிடுவானோ என்று திகிலாகத்தான் இருந்தது. 

இப்பொழுது பின்னாலிருந்த பைக்காரர் மீண்டும் சப்தம் எழுப்பினார். சிக்னல் விழுவதற்கு இன்னும் பதினைந்து வினாடிகள்தான் இருந்தன. எதையாவது செய்ய வேண்டும். அவன் கார் மீது எச்சிலைத் துப்பிவிட்டு வண்டியை ஒன்வேயில் விட்டுவிடலாம் என்பதுதான் ஆகச் சிறந்த திட்டமாகத் தெரிந்தது. என்னுடைய உடலுக்கும் பலத்துக்கும் இந்தச் சில்லரைத்தனம்தான் சரியாக இருக்கும். தயாராகிக் கொண்டிருந்தேன். ஹெல்மெட் அணிந்தபடி எச்சிலைத் துப்புவது ஒரு கலை. மல்லாந்து படுத்து விட்டத்தை நோக்கி துப்புவது போலத்தான். லாவகமாகச் செய்ய வேண்டும். சற்று ஏமாந்தாலும் ஹெல்மெட் நாசக்கேடாகி நம் சட்டை மீதே விழும். வண்டியை முறுக்கினேன். அவனும் மீண்டும் ஒரு முறை திட்டிவிட்டு கண்ணாடியை ஏற்றிக் கொண்டான். ‘இருடி...இரு’ என்று கறுவிக் கொண்டிருந்தேன். 

8..

7...

இன்னும் சில வினாடிகள்தான். இப்பொழுது ஆபரேஷனை ஆரம்பித்தால் சரியாக இருக்கும். வண்டியை திருப்பிக் கொண்டேன்.

4..

3..

டன்.

குறி தப்பவில்லை. பார்த்துவிட்டான். கண்டபடிக்கு கத்தினான். அவனால் தனது வண்டியை அவ்வளவு சீக்கிரமாகத் திருப்ப முடியாது என்று தெரியும். அப்படியே திருப்பி வந்தாலும் ஒன்வேயில் சிக்கிக் கொள்வான். முறுக்கிக் கொண்டு வந்துவிட்டேன். என்னவெல்லாம் திட்டினானோ தெரியவில்லை. வழிப்பிள்ளையார் கோவிலில் நிறுத்தி அவன் ஏதாவது சாபம் விட்டிருந்தால் அத்தனையும் காற்றோடு கலந்து போகட்டும் என்று வேண்டிக் கொண்டேன். ‘என் மீது துக்கினியூண்டு தப்புதான் பிள்ளையாரப்பா...அவன்தான் கெட்டவன்...கெட்ட கெட்ட வார்த்தையா பேசுறான்’ என்று வாத்தியாரிடம் புகார் வாசிப்பது போல வாசித்து வைத்திருக்கிறேன். சில்லரைப் பயலே என்று பிள்ளையார் என்னைத் திட்டியிருப்பார்தான் என்றாலும் காப்பாற்றிவிடுவார்.