Apr 14, 2015

ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

எங்கள் கல்லூரியில் வருடம் தவறாமல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்கிறார்கள். முதல் வருடத்தில் பத்து பேர் வந்தார்கள். அறுபத்து சொச்சம் பேர் படித்த வகுப்பிலிருந்து பத்து பேர் மட்டும். வருடம் கூடக் கூட ஆட்களின் எண்ணிக்கை குறைந்தது. கடந்த வருடம் என்னையும் சேர்த்து நான்கு பேர் கலந்து கொண்டோம். அதில் இரண்டு பேர் அங்கேயே வாத்தியார் ஆகிவிட்டதால் பெரிய மனது வைத்து வந்தவர்கள். இன்னொருவனுக்கு சேலம் சொந்த ஊர். அம்மா அப்பாவை பார்க்க வந்தவன் தலையைக் காட்டினான். சலித்துப் போய்விட்டது. உங்கள் சங்காத்தமே வேண்டாம் என்று இந்த வருடம் எட்டிக் கூட பார்க்கவில்லை. யாருமே வரவில்லை என்று அடுத்த நாள் சொன்னார்கள். சோலி சுத்தம்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு எப்பொழுதும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் ஒரு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். அந்தப் பள்ளியில் நான் படித்ததில்லை. சிறப்புரை ஆற்றச் சொல்லியிருந்தார்கள். எவ்வளவு முறை டீ, காபி ஆற்றியிருப்பேன்? சிறப்புரைதானே? பேஷாக ஆற்றிவிடலாம் என்று ஒத்துக் கொண்டேன். பத்து பதினைந்து பேர் வந்திருப்பார்கள் என்று நினைத்தபடி சென்றிருந்தேன். தாத்தா வயது ஆட்கள் எல்லாம் முன்னாள் மாணவர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்திருந்தார்கள். நம்மைப் போலவே கூட்டத்துக்கு ஆள் சேர்த்து வைத்திருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருந்தது. அந்தப் பள்ளிக்கு இது எழுபத்தைந்தாவது ஆண்டு விழா. தொடக்கத்தில் இருந்தே ஆரம்பப்பள்ளியாகத்தான் இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சர்ச்சில் நடந்திருக்கும் போலிருக்கிறது. இப்பொழுது ஊர்க்காரர்கள் கொடுத்த இடத்தில் கட்டடம் கட்டி செயல்படுகிறது.

திரேசாள் ஆரம்பப்பள்ளி. ஈரோடு மாவட்டம் கோபிப்பாளையத்தில் இருக்கிறது. இதில் இன்னொரு ஆச்சரியம் அந்தத் தாத்தா காலத்து ஆட்களிலிருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் முடித்துச் சென்ற மாணவர்கள் வரை ஒவ்வொருவர் பெயரையும் தலைமையாசிரியர் ஞாபகத்தில் வைத்து அழைத்தார். ஏதாவது பிட் ஒளித்து வைத்திருக்கிறாரோ என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அத்தனை பேருடனும் தொடர்பில் இருக்கிறார். வந்திருந்த மாணவர்களும் அய்யா, அய்யா என்று உருகுகிறார்கள். அதனால் பள்ளியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி என்றால் திரண்டுவிடுகிறார்கள். முன்னாள் மாணவர்கள்தான் பள்ளியைத் தாங்கிப் பிடிக்கிறார்கள்.

இத்தகையதொரு சிறப்பு வாய்ந்த பள்ளியில் எந்த நம்பிக்கையில் என்னை அழைத்திருந்தார்கள் என்று புரியவில்லை. ஆனால் உள்ளூரில் நம்மையும் மதிக்கக் கூடிய ஆட்கள் இருப்பது சந்தோஷமான விஷயம். வாய்ப்புக் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிடைக்கிற சந்தர்பத்தில் நம்மை நிரூபித்து விட வேண்டும். சற்றே அசிரத்தையாக இருந்தாலும் அடுத்த முறை வாய்ப்பு நம் கதவைத் தட்டும் என்று சொல்ல முடியாது. எதைப் பேச வேண்டும் என்று இரண்டு மூன்று நாட்களாக மனதுக்குள் ஓட்டி வைத்திருந்தேன். மேடையில் பேசியவர்களிலேயே நான்தான் பொடியன். ‘இவன் யாரு?’ என்கிற ரீதியிலேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள். விழாத் தலைவர் அவர்களே, முன்னிலை வகிக்கும் முக்கியப் பிரமுகர் அவர்களே என்று இழுத்த போது கூட பெரும்பாலானவர்கள் என்னைத் தவிர்த்த போது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் உள்ளூர் பிரமுகர் கூட இல்லை- நம்மை எதற்கு இவர்கள் விளிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். 

இதே கூட்டத்தில்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் பேசுவார் என்று அறிவித்திருந்தார்கள். அதற்கு ஏற்றபடி பேசுவதற்கு தயார் செய்து வைத்திருந்தேன். ‘பேரு பெத்த பேரு தாக நீலு லேது’ என்பார்கள். அப்படித்தான் கோபிச்செட்டிபாளையமும். வெகு காலமாக நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தது. ஆனால் ஒரு அரசுக் கலைக்கல்லூரி இல்லை. தனியார் கல்லூரிகளும், தன்னாட்சிக் கல்லூரிகளும் இருக்கின்றனதான். ஆனால் அரசு நடத்தும் கலை அறிவியல் கல்லூரி இல்லை. ஒரு தொழிற்சாலை கிடையாது. ஈரோடு மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி கிடையாது. IRTT சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின் கல்லூரி- அதை அரசுக் கல்லூரி என்று சொல்ல முடியாது அரசு மருத்துவக் கல்லூரி கிடையாது. நம்பியூருக்கு அந்தப் பக்கம் குடிக்க தண்ணீர் கிடைப்பதில்லை. வற்றாத ஜீவநதி பவானி ஆறு தொகுதியையும் மாவட்டத்தையும் கிழித்துக் கொண்டு ஓடுகிறது. மாவட்டத்தின் ஒரு பக்கம் கொழித்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் வறண்டு கிடக்கிறது. இதையெல்லாம் பேச வேண்டும் என்று குறிப்பெடுத்து வைத்திருந்தேன்.

எங்கள் பகுதியில் கரும்பு விளைச்சல் அதிகம். இரண்டு கரும்பு ஆலைகள் இருக்கின்றன. ஆனால் இரண்டுமே பொள்ளாச்சி மகாலிங்கத்தின் வகையறா. நெல் விளைச்சலும் அதிகம். அதைச் சார்ந்த தொழிற்சாலைகள் அத்தனையும் தனியார் வசம். மஞ்சள் விளைகிறது. அது குறித்தான சிறு ஆராய்ச்சிக் கூடமாவது கொண்டு வந்திருக்கலாம். எதுவும் இல்லை. கோபிச்செட்டிபாளையத்தில் ரயில்வே தண்டவாளம் கூட கிடையாது. மோடியின் அரசாங்கம் அமைந்த பிறகு சிவசேனா உறுப்பினர் ஒருவர் கிட்டத்தட்ட இருநூற்றைம்பதுக்கும் அதிகமான கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். அவர்தான் நெம்பர் 1. எங்கள் உறுப்பினர் இதுவரை நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விகள் வெறும் இருபத்து நான்குதான். திருவண்ணாமலை உறுப்பினர் வனரோஜா, சேலம் உறுப்பினர் பன்னீர்செல்வம் போன்றவர்கள் எல்லாம் இதுவரைக்கும் கேள்வியே கேட்டதில்லை என்கிற நிலைமையில் இது எவ்வளவோ தேவலாம். ஆனால் அவர் கேட்டிருக்கும் இருபத்து நான்கு கேள்விகளில் இவை குறித்தான கேள்விகள் ஏதாவது இருக்கின்றனவா என்று தெளிவுப்படுத்திக் கொள்ள விரும்பியிருந்தேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா வாசுவை எனக்குத் தெரியும். எப்படித் தெரியும் என்றால் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் தினமும் நேருக்கு நேர் ஒரு முறையாவது பார்த்துவிடுவேன். அம்மா உள்ளுக்குள் இருந்த போது Fortuner காரில் நான்கைந்து பேர்களைத் திணித்துக் கொண்டு தினமும் வந்துவிடுவார். அதிமுகவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண் மேயர்கள், பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவாகத் தரையில் அமர்ந்து தள்ளுவண்டிக்காரனிடமிருந்து நெல்லிக்காயும் கொய்யாக்காயும் வாங்கித் தின்றபடியே ஊர் நியாயம் உலக நியாயம் பேசிக் கொண்டிருப்பார்கள். எப்பொழுதாவது இந்த அம்மையார் எழுந்து வரும் போது மெலிதாக புன்னகைத்து வணக்கம் சொல்வேன். அவரும் என்னைவிட ஒரு மி.மீ கூட அதிகமில்லாமல் சிரித்து ஒரு வணக்கம் வைப்பார். பெரும்பாலான நாட்கள் இப்படி வணக்கம் வைத்திருந்தேன்.

எனக்கு நல்ல நேரம் போலிருக்கிறது. அவர் கூட்டத்துக்கு வரவில்லை. அவர் வந்திருந்து நான் இதையெல்லாம் பேசியிருந்தால் பள்ளி நிர்வாகத்தினருக்கு தர்மசங்கடமாகியிருக்கக் கூடும். ஆனால் இதெல்லாம்தானே வாய்ப்புகள்? வேறு எப்பொழுது நம்மால் பேச முடியும்? சாலைகளை அகலப்படுத்துவதும் இருபக்கமும் சோடியம் விளக்குகளை போட்டு வைப்பதும்தான் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்று நினைத்தால் அது நம் தவறு. இந்த வேலைகளில்தான் அவர்களுக்கு வருமானம் அதிகம். தொலைநோக்குப் பார்வையோடு சமீபத்தில் பேசிய அமைச்சர்கள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தேடிப்பார்த்தால் நம் மக்கள் பிரதிநிதிகளின் லட்சணங்கள் தெரிந்துவிடும். 

சில வருடங்களுக்கு முன்பாக எனக்கு பயம் அதிகம். சென்னை சங்கமத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்த போது தன்னை மத்திய அரசு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் ‘அம்மாவும் அப்பாவும் அரசுப்பணிதானே?’ என்று முடித்தார். ஒடுங்கிப் போய்விட்டேன் என்றாலும் காட்டிக் கொள்ளவில்லை. ஏதாவது காரணத்தைக் காட்டி அவர்களைச் சிக்க வைத்தால் நொறுங்கிப் போய்விடுவார்கள். ஆனால் இப்பொழுது அப்படியெதுவும் இல்லை. Nothing to Lose. மனதில் தோன்றுவதை பட்டவர்த்தனமாகப் பேசிவிடலாம் என்றுதான் இருந்தேன்.

யாரையும் சங்கடப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை. பெரிய புரட்சிகாரனைப் போல இதையெல்லாம் பேச வேண்டியதில்லை. கலகக்காரனாகக் காட்டிக் கொண்டு அவர்களுக்கு கோபம் வர வைக்க வேண்டியதும் இல்லை. அவர் கலந்து கொண்டிருந்தால் மிக மிக இயல்பாக பேசியிருக்கலாம். அவர் சங்கடப்படுவது போலத் தெரிந்திருந்தால் பேச்சை மாற்றிவிடலாம் என்றுதான் இருந்தேன். நமது மக்கள் பிரதிநிதிகள் எது குறித்து விசனப்படுகிறார்கள் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுபற்றி பொதுவெளியில் யாராவது கேள்வி கேட்பார்கள் என்ற எண்ணமாவது அவர்களுக்கு உருவாக வேண்டும். நாம் எழுதுவதையெல்லாம் அவர்கள் வாசிக்கப் போவதில்லை. நேருக்கு நேர் பேச வாய்ப்புக் கிடைத்தால் நாசூக்காக பேசி விட வேண்டும். இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்?