Mar 18, 2015

நமக்கு என்ன பிரச்சினை?

நேற்று ஒரு படத்தின் பெயரைக் குறிப்பிட்டு கட்டுரையை ஆரம்பித்திருந்தேன். Inglorious Basterds என்பது படத்தின் பெயர். தொடக்கம்தான் படத்தைப் பற்றி. ஆனால் கட்டுரைக்குள் கல்லூரியில் என்ன படிக்கலாம் என்பது பற்றியதான விஷயங்கள்தான் இருக்கும். இது ஒரு கொக்கி. இணையம் என்றில்லை பொதுவாகவே ஒரு கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் போது முதல் வரி அல்லது முதல் பத்தியில் ஒரு ஆர்வத்தை உண்டாக்கிவிட வேண்டும் என்பார்கள். அதுவும் ப்ளேடு சமாச்சாரமாக இருந்தால் இது மிக மிக அவசியம். படத்தின் பெயர் கோக்குமாக்காக இருந்தால் கடைசி வரைக்கும் வாசிப்பவர்களை கொக்கியில் சிக்க வைத்து இழுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கை சார்ந்த டெக்னிக் அது.

இதைப் படித்துவிட்டு தென்னை மரத்தில் மாட்டைக் கட்டியிருக்கிறான் என்று ஆசிப் மீரான் அண்ணாச்சி ஸ்மைலி போட்டுவிட்டார். மாடு பற்றி எழுதச் சொன்னால் தென்னை மரத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிவிட்டு கடைசியில் அந்தத் தென்னை மரத்தில் மாட்டைக் கட்டி வைப்பார்கள் என்று முடித்துவிட வேண்டும்.  ‘இவனும் அப்படிச் செய்திருக்கிறான்’ என்பதான ஸ்மைலி அது.

எனது குழந்தைப் பருவத்திலேயே அண்ணாச்சியுடன் அறிமுகம் உண்டு. அப்பொழுதே அவருக்கு ஓய்வு பெறும் வயதுதான். ஆனால் வெளியில் தெரியாது. எப்பொழுதும் முடிச்சாயத்துடன் இருப்பார் என்பதால் அவ்வளவு எளிதில் வயதைக் கண்டுபிடித்துவிட முடியாது. அவரது வயதை எடைபோடும் வெளியாட்களுக்கு பெருங்குழப்பமாகத்தான் இருக்கும். தாத்தாச்சி என்று விளிப்பதுதான் சரியாக இருக்கும் ஆனால் அண்ணாச்சி என்றுதான் அழைக்க வேண்டும் என்று மிரட்டுவார் என்பதால் அவரை அப்படி அழைத்தே பழகிப் போய்விட்டது. அவருக்காகவாவது இந்தப் படத்தைப் பற்றி எழுதிவிடலாம் என்று தோன்றியது.

Inglorious Basterds.

இரண்டாம் உலகப்போரின் பின்னணியுடனான கதைக் களம். தங்களைத் தேடி வரும் ஹிட்லரின் படைக்கு பயந்து சுஸானாவின் குடும்பம் ஒரு ப்ரெஞ்ச்க்காரரின் வீட்டில் பதுங்கியிருக்கிறது. லண்டா என்னும் அதிகாரி அந்த வீட்டில் விசாரணை நடத்துகிறார். ப்ரெஞ்ச்காரர் நாஜிக்களுக்கு பயந்து அந்தக் குடும்பத்தைக் காட்டிக் கொடுத்துவிடுகிறார். சுட்டுத் தள்ளுகிறார்கள். சுஸானா மட்டும் தப்பி ஓடி பாரிஸில் ஒரு திரையரங்கை நடத்திக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது ஒரு நாஜி படைவீரனைச் சந்திக்கிறாள். அவனுக்கு இவள் மீது ஆசை வருகிறது. அவன் ஒரு பராக்கிரமசாலி. ஒற்றை ஆளாக நிறைய அமெரிக்க வீரர்களைக் கொன்றிருக்கிறான் என்பதால் ஹிட்லரின் அமைச்சரான கோயபல்ஸின் துறை இவனது கதையை வைத்து ஒரு படம் தயாரிக்கிறது. அந்தப் படத்தின் முதல் திரையிடல் சுஸானாவின் திரையரங்கில் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஜெர்மானியர்களை பழிவாங்குவதற்காக சுஸானா இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறாள். திரையரங்கை பூட்டிவிட்டு கொளுத்திவிடலாம் என்று முடிவு செய்கிறாள். ஹிட்லரும் அந்தப் படத்தைக் காண வரப் போவதாக அமெரிக்க ராணுவத்துக்குத் தகவல் கிடைக்கிறது. அவர்களும் குண்டு வைத்துக் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டுகிறார்கள். முடிவு ஒரு புனைவாக இருக்கிறது.

வரலாறு சம்பந்தப்பட்ட படங்களைப் பார்க்கும் போது அவை உண்மையைச் சொல்வதான கதையாக இருக்க வேண்டும் என விரும்புவேன். வரலாற்றிலிருந்து உருவாக்கப்படும் புனைவுகள் படம் பார்க்கும் போது வேண்டுமானால் ஜாலியாக இருக்கிறது. பார்த்து முடித்த பிறகு பெரிய தாக்கத்தை உண்டாக்குவதில்லை. இந்தப் படத்தில் அமெரிக்கப்படையினர் நாஜிக்களைக் கொன்று அவர்களது மண்டையோட்டுத் தோலை அறுத்து எடுப்பது போன்ற குரூரமான காட்சிகளைப் பார்க்கும் போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் கடைசியில் ஹிட்லர் கோயபல்ஸ் உள்ளிட்டவர்களின் முடிவுகளை வேறு மாதிரியாகக் காட்டும் போது எவையெல்லாம் உண்மை என்பதும் எவையெல்லாம் பொய் என்பதும் குழப்பமாகிவிடுகிறது. 

ஒரு படம் பார்க்கும் போது நாமும் அந்தப் படத்தின் கதாபாத்திரமாக மாறிவிட வேண்டும் அல்லது அந்தக் கதாபாத்திரத்தின் பிரச்சினைகளை நம்முடைய பிரச்சினைகளாக எண்ணி பதறும்படி ஒன்றிப் போக வேண்டும். குயண்ட்டின் ட்ரான்டினா என்ற புகழ்பெற்ற இயக்குநரின் படம் என்றாலும் Inglorious Basterds பார்க்கும் போது அப்படியெல்லாம் எதுவும் தோன்றவில்லை. ஒருவேளை திரைக்கதையாசிரியர்களுக்கு இந்தப் படத்தின் நுட்பங்கள் முக்கியமானவையாக இருக்கக் கூடும். நாவலில் அத்தியாயம் பிரிப்பது போல திரைக்கதையில் அத்தியாயம் பிரித்திருக்கிறார்கள். 

இந்தப் படத்தைப் பார்த்த அதே சமயத்தில் இன்னொரு படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. Fateless. ஹங்கேரியப் படம். அது படம். நடுங்கச் செய்துவிட்டது. இந்தப் படத்திலும் இரண்டாம் உலகப்போர்தான் பின்னணி. ஹிட்லரின் படையிடம் ஒரு பதினான்கு வயது ஹங்கேரியச் சிறுவன் சிக்கிக் கொள்கிறான். அவனை ஜெர்மனியில் இருக்கும் Concentration camp க்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவன் அனுபவிக்கும் சித்ரவதைகள்தான் படம் நெடுகவும். படத்தின் தொடக்கத்தில் அவனது தந்தைக்கு ஹிட்லரின் அரசாங்கத்திடமிருந்து அழைப்பு வருகிறது. கட்டாயப்பணிக்கு அழைக்கிறார்கள். திரும்பி வந்தாலும்தான் வருவேன் என்கிற அரைகுறை நம்பிக்கையோடுதான் அவர் செல்கிறார். அப்பொழுது வரைக்கும் கூட க்யூர்க்கா என்னும் அந்தச் சிறுவன் விளையாட்டுப் பையனாகத்தான் இருக்கிறான். ஆனால் நாஜிக்களின் குரூர உலகம் அவனது குழந்தமையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கிறது. நான்கு நாட்கள் சோறு தண்ணீர் இல்லாமல் புகைவண்டியில் திணித்து ஜெர்மனிக்கு அழைத்துச் செல்வதிலிருந்தே நம்முடைய விரல்களில் நடுக்கம் பரவத் தொடங்கிவிடுகிறது.


இத்தகைய படங்களைப் பார்க்கும் போதுதான் நாம் எவ்வளவு அற்புதமான வாழ்க்கைய வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பிடிபடுகிறது. நமக்கிருக்கும் பிரச்சினைகள் எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அதனால்தானோ என்னவோ ஒன்றுமேயில்லாத பிரச்சினைகளைக் கூட ஊதிப் பெருக்கிக் கொண்டிருக்கிறோம்.

க்யூர்க்காவின் குடும்பம் சிதறுண்டு போகிறது. கேம்ப்பிலிருந்து தப்பிக்க முயன்றவர்களை மற்றவர்களின் பார்வையில் படும்படியே தூக்கில் போடுகிறார்கள். ஒழுங்கான உணவு இல்லை. உறங்குவதற்கான வசதி இல்லை. பனியிலேயே வெகுநேரம் நிற்க வைக்கிறார்கள். பக்கத்திலிருப்பவனுடன் பேசியதற்காக முகத்திலேயே குத்தி மூக்கை உடைக்கிறார்கள். எந்நேரமும் கடும் பணிச்சுமைதான். கைகள் கொப்புளித்துப் போகின்றன. மூட்டையைத் தூக்க முடியாமல் முழங்கால் வீங்கிப் போகிறது. மயக்க மருந்தே இல்லாமல் வீக்கத்தை அறுக்கிறார்கள். அறுத்த புண்ணில் பூச்சி உருவாகிறது. பக்கத்தில் கிடந்தவன் செத்துப் போகிறான். அதை வெளியில் வெளியில் சொன்னால் கூடுதல் உணவு கிடைக்காமல் போய்விடும் என்பதால் மற்றவர்களிடம் சொல்லாமல் இரண்டு நாட்களுக்கு அவனது உணவையும் இவனே வாங்கித் தின்கிறான். 

இந்தப் படத்தைத் தனியாக அமர்ந்து பார்க்க வேண்டும். அந்தப் பையன் இடத்தில் நம்மை நினைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு வேதனைகள்? எவ்வளவு வலிகள்? இப்படியெல்லாம் நடந்திருக்கிறதுதானே? ஹிட்லரும் அவரது படைகளும் அத்தனை அழிச்சாட்டியங்கள் செய்திருக்கிறார்கள். வழக்கமாக படம் பார்த்து முடித்த பிறகு தூங்கிவிடுவேன். இந்தப் படத்தை பார்த்துவிட்டு ‘பெரிய பிரச்சினையில்லாத இப்படியொரு வாழ்க்கையைக் கொடுத்தற்கு நன்றி’ என்று பிரார்த்தனையை முடித்துவிட்டுத் தூங்கினேன். அதுதான் உண்மையும் கூட.

(இரண்டு படங்களுமே இணையத்தில் இருக்கின்றன. திருட்டுப் பிரதிகளாகத்தான் இருக்கக் கூடும். இப்படியான பிரதிகளின் சுட்டிகளைக் கொடுக்கலாமா என்று தெரியவில்லை. முன்பு ஒரு படத்தின் சுட்டியைக் கொடுத்திருந்த போது  உங்களுக்கு சட்டப் பிரச்சினை வரக் கூடும் என்று ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். விமர்சனத்துக்கும் எனக்கும் ஒத்து வருவதேயில்லை. ஒரு புத்தக விமர்சனத்துக்காகவே வக்கீல் நோட்டீஸ் அனுப்புவேன் என்று ஒருவர் மிரட்டியிருந்தார். மிரட்டியவர் எழுத்தாளர். எழுத்தாளர்கள் என்றால் பிரச்சினையில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் டுபாக்கூர்கள். வாய்ச்சவடால்தான். சமாளித்துவிடலாம். சினிமாக்காரர்கள் கொஞ்சம் பிரச்சினையானவர்கள். அதனால் இந்த முறை சுட்டியைக் கொடுக்கவில்லை. பிரச்சினை வருமா என்ன?)