Mar 17, 2015

சிக்காமல் தப்பு செய்ய முடியுமா?

“எங்க பார்த்தாலும் Trap செய்யறாங்க மச்சி”

“என்னடா சொல்லுற? எங்கேயாச்சும் வசமா சிக்கிட்டியா”

“நான் இல்ல....அந்த கடலை போட்டு சிக்கின ஏ.சியை பாரு நாறிட்டு இருக்காப்டி”

“சும்மாவா சொன்னாங்க பெரியவங்க”

“என்னன்னு?”

“நாமதான் நினைச்சுக்குறோம்...நாம ரொம்ப safe ன்னு...ஆனா இங்க யாருமே safe இல்ல”

“எந்த பெரியவரு சொன்னாரு?”

“யாருன்னு சொன்னாத்தான் நம்புவியா? நாம சொன்னா இந்த உலகம் கேட்குமா? அதான் பெரியவங்க சொன்னாங்கன்னு சொல்லி நம்மை கருத்தை அடிச்சு விட்டுடணும்”

“அப்படியா சொல்லுற?”

“பின்ன...எங்கேயாச்சும் ரெண்டு கண்ணு நம்மை நோட்டம் விட்டுட்டேதான் இருக்கும்...எங்கேயாச்சும் ரெண்டு கால்கள் நம்மை துரத்திட்டேதான் இருக்கும்”

“இந்தக் காலத்துல தப்பு செய்யறது பெரிய மேட்டரே இல்லை...ஆனா சிக்காம தப்பு செய்யறது ரொம்ப ரொம்ப பெரிய மேட்டர்”

“தப்பு செய்யறவன் கூட தப்பிச்சுடறான்...ஆனா தப்பு செய்யாதவங்களைத்தான் சாவடிச்சுடுறாங்க...”

“அது சரிதான்....”

“முத்துக்குமாரசாமி! ட்ரெயின்ல விழுந்து செத்தாரே....அநியாயம்...சிதறிப் போய்ட்டாரு....சம்சாரத்துக்கும் புள்ளைக்கும் எவ்வளவு வேதனையா இருந்திருக்கும்?”

“அதுக்குத்தான் அமைச்சர் பதவியை காலி செஞ்சுட்டாங்களே”

“போதுமா? அமைச்சர் பதவியை பிடுங்கிட்டா போன உசுரு திரும்பி வந்துடுமா?”

“அதுக்கு? அடிச்சே கொல்லணுமா என்ன?”

“அடிச்சு எல்லாம் கொல்ல வேண்டியதில்லை...இன்னும் ஒருத்தனைக் கூட கைது பண்ணல...இப்படியே இழுத்துட்டு இருப்பாங்க...அப்புறம் நாம எல்லாம் மறந்துடுவோம்...தற்கொலைன்னு கேஸை மூடிடுவாங்க”

“ச்சே..ச்சே..அப்படியெல்லாம் நடக்காது”

“சரிப்பா...தா.கிருட்டிணன் கொலை வழக்கு என்னாச்சுன்னு தெரியுமா? ராமஜெயத்தைக் கொன்னவங்கள கைது செஞ்சாங்களா?”

“நமக்கு எதுக்கு அரசியல்? வீண் வம்பு”

“என்ன வம்பு? 72 வயசு கன்னியாஸ்திரியை நாலு பேரு ரேப் செஞ்சிருக்காங்க....”

“ஆமா பெங்கால்ல”

“ம்ம்ம்...இன்னமும் ஒருத்தனையும் கைது செய்யலைன்னு மம்தா பானர்ஜி காரைச் சுத்தி மறியல் செஞ்சிருக்காங்க...தெரியுமா? நம்ம ஆளுங்க போயஸ் கார்டனுக்கு போவாங்களா என்ன?”

“அங்க எதுக்கு போகணும்? முதலமைச்சர் அங்கேயா இருக்காரு?”

“சரியா போச்சு போ....”

“ஆமா...நீ என்ன சுத்திச் சுத்தி அரசியலுக்கே வந்து நிக்குற?”

“என்னடா பண்ணுறது.....திரும்புற பக்கமெல்லாம் அதானே இருக்குது?அரசியல்...இன்னைக்கு பாரு...பெங்களூர்ல ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி சுருக்குல தொங்கிட்டாரு...நேர்மையான ஆளுன்னு சொல்லுறாங்க...கோலார் மாவட்டத்துல இருந்த போது அனுமதியில்லாத ஒரு குவாரியைக் கூட விடலையாமா...இழுத்து மூடிட்டாரு”

“ஆமா....மூணு மாசத்துக்கு முன்னாடிதான் பெங்களூருக்கு வணிகவரித்துறையில் மாத்தியிருக்காங்க”

“அவரேதான்..இங்கேயும் பல கோடி ரூபா வசூல் செஞ்சிருக்காரு....இப்படி போற பக்கமெல்லாம் நேர்மையா இருந்தா என்ன ஆகும்? ஏகப்பட்ட எதிரிங்க சேர்ந்திருக்காங்க...நேத்து மூணு பேர் வீட்டுக்கு வந்தாங்களாம்.....அவங்க போன அரை மணி நேரத்துல தூக்குல தொங்கிட்டாரு”

“இன்னும் ரெண்டு நாளைக்கு இதைப் பத்தி பேசிட்டு இருப்பாங்க...அப்புறம் அதோட முடிஞ்சுடும்”

“போன்லயும் வாட்ஸப்லையும்தான் ட்ராப் செய்யணும்ன்னு இல்லை...எப்படி வேணும்ன்னாலும் சிக்க வெச்சுடுறாங்க...சும்மா மிரட்டினா மட்டும் செத்துடுவாங்களா? அதெல்லாம் இல்ல....குடும்பத்தைக் காட்டி, குழந்தையைக் காட்டி, பொண்டாட்டியைக் காட்டி...ஏதாவது ஒரு வகையில் வசமா மாட்டும் போது வேற வழியே இல்லாம செத்தே போய்டுறாங்க..”

“இந்த ஏ.சியும் முத்துக்குமாரசாமியும் ஒண்ணா?”

“ச்சே..ச்சே...ரெண்டும் வேற வேற....ஆனா பிரச்சினை Trapping...நல்லவனா இருந்தாலும் சிக்க வைக்கிறாங்க...பொறுக்கியா இருந்தாலும் சிக்க வைக்கிறாங்க...”

“அன்னைக்கு ஒரு நாள் சொல்லிட்டு இருந்தியே....ஃபேஸ்புக் கூட நம்மை ட்ராப் செய்யுதுன்னு....”

“ஆமா...நாற்பது லைக் வாங்கிட்டிருக்கிறவனுக்கு திடீர்ன்னு இருபத்தஞ்சுதான் விழும்.....இவன் பதறிப் போய் மறுபடியும் எப்படி லைக் அதிகம் பண்ணுறதுன்னு மண்டை காய்வான்...ஒரு மணி நேரம் ஃபேஸ்புக்ல இருந்தவன் இரண்டு மணி நேரமாக்குவான்...அப்புறம் மூணு மணி நேரம் ஆக்குவான்...லைக், ஃபாலோயர்ஸ் அது இது....செலிபிரிட்டி ஆகுறோம், பிரபலம் ஆகுறோம்ன்னு மனப்பால் குடிச்சு மணல் கோட்டை கட்டுவான்...ஆனால் பேக்ரவுண்ட்ல ஃபேஸ்புக்கோட கைங்கர்யம் இருக்கும்...”

“எப்படி?”

“குழந்தைக்கு சாக்லெட்டைக் கண்ணுல காட்டிட்டு தராம ஏமாத்துனா அது என்ன பண்ணும்? அதை வாங்குறதுக்கு என்ன வேணும்ன்னாலும் செய்யும்...அப்படித்தான்..லைக் ஆசையைக் காட்டி திடீர்ன்னு ஒரு போஸ்ட்டை அடுத்தவங்க கண்ணுல காட்டாம மறைக்க வேண்டியது... அதைத்தான் ஃபேஸ்புக் செய்யுதுன்னு சொல்லுறாங்க....நம்மாளுக்கு பதற்றம் வரத்தானே செய்யும்? வலையில் சிக்கத்தானே செய்வான்”

“அடிச்சு விடாத”

“அட நிஜமாத்தான்...இந்த ஃபேஸ்புக் மாதிரியான கம்பெனிங்க மனோத்தத்துவ நிபுணர்களைக் கொண்ட பெரிய டீமை வேலைக்கு வெச்சிருக்காங்க....தெரியுமா? அவங்க வேலையே இப்படியெல்லாம் நம்மை வெச்சு ஆராய்ச்சி பண்ணுறதுதான்”

“நிஜமாவா?”

“துல்லியமா இதுதான் நடக்குதுன்னு சொல்ல முடியாது..ஆனால் இப்படியான பல தகிடுதத்தங்கள் நடக்குதுன்னுதான் சொல்லுறாங்க..அது அவனோட தொழில்...ஃபேஸ்புக்தான் நெம்பர் 1 சைட். அந்த இடத்தை கைவிடாம இருக்க அவன் என்ன வேணும்ன்னா செய்வான்..நாமதான் தப்பிச்சுக்கணும்”

“எப்படி தப்பிக்கிறது?”

“ஃபேஸ்புக் யூஸ் செய்யாத”

“சாப்பிடாம இருன்னு கூட சொல்லு.. கேட்டுக்கிறேன்...”

“அப்படின்னா ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல social media தளங்களுக்குள் போகாத”

“தண்ணி குடிக்காம இருன்னு கூட சொல்லு..கேட்டுக்கிறேன்”

“ம்ம்ம்ம்”

“வேற ஏதாச்சும் ஐடியா இருக்கா?”

“ஐடியாவெல்லாம் இல்ல...நாசமா போ”