Mar 20, 2015

போலீஸிடம் அடி வாங்கியிருக்கிறீர்களா?

வேலூரில் எம்.டெக் படித்துக் கொண்டிருக்கும் போது அடிக்கடி குடியாத்தம் செல்வதுண்டு. குடியாத்தம் என்றால் குடியாத்தமே இல்லை. அதற்கு சற்று முன்பு வரை. வேலூரிலிருந்து செல்லும் இருப்புப் பாதையோரமாக நகரத்தின் எல்லையைத் தாண்டிச் சென்றால் ஒரு பாட்டி கடை நடத்திக் கொண்டிருப்பார். ஓலை வேய்ந்த கடை அது. ஆள் நடமாட்டமேயில்லாத அந்த வனாந்தரத்தில் மிக்சர், முறுக்கு தவிர சோடா பாட்டில்களையும் வைத்து விற்றுக் கொண்டிருப்பார். வழக்கமான வாடிக்கையாளர்கள் என்றால் அவருடைய உத்தரவின் பேரில் சிக்கன் வறுவல், ஆம்லெட் போன்றவை வந்து சேரும். ஒரு பொடியன் எங்கேயோ சென்று எடுத்து வந்து தருவான். எங்கேயிருந்து வருகிறது என்று தெரியாது. அது சிக்கன்தானா என்பதும் தெரியாது. அந்தச் சிறப்பு வாய்ந்த கடையை நோக்கித்தான் எங்களது யாத்திரை அடிக்கடி நடக்கும்.

எங்கள் வகுப்பில் மொத்தமே பதினேழு பேர்தான். அத்தனையும் காளை மாடுகள். இதில் ஐந்தாறு பேரைத் தவிர மற்றவர்கள் ஜலோற்சவத்தில் கலந்து கொள்வார்கள். வழக்கமாக இரண்டு பேர் சைட் டிஷ் விழுங்குவதற்காக அந்தக் குழுவில் இருப்போம். அன்று எனக்கு நேரம் சரியில்லை. நான் மட்டும்தான் இருந்தேன். குடிக்கக் கூடாது என்றெல்லாம் எதுவும் இல்லை. ஆரம்பத்திலேயே அந்தச் சுவை பிடிக்கவில்லை. பி.ஈ படிக்கும் போது குடித்திருக்கிறேன். கல்லூரி சுற்றுலாவுக்காக மங்களூர் சென்றிருந்த போது அது நடந்தது. குடித்துவிட்டு ‘எனக்கு போதையே ஏறவில்லை’ என்று உளறிக் கொண்டிருந்தேன். யாரும் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. ஆளாளுக்கு கிடை சாய்ந்துவிட்டார்கள். நான் மட்டும் வெளியில் சென்று வகுப்புத் தோழியிடம் என்னவோ பேசியிருக்கிறேன். என்ன பேசினேன் என்று அடுத்த நாள் காலையில் சுத்தமாக ஞாபகமில்லை. ஆனால் அதன் பிறகு அவள் என்னோடு எந்தக் காலத்திலும் பேசவேயில்லை. முகத்தைத் திருப்பிக் கொள்வாள். அன்றைய தினம் அப்படி என்ன ரகசியம் பேசினேன் என்று ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

அப்பொழுதிருந்து மது அருந்துவதில்லை. ஆனால் இவர்களோடு உற்சவத்திற்குச் சென்றுவிடுவது வாடிக்கையாகியிருந்தது. விவசாய உரங்களை மூட்டை கட்டும் நைலான் சாக்குப் பைகள் பத்து அல்லது பன்னிரெண்டை இணைத்து பாட்டி தைத்து வைத்திருப்பார். அதுதான் பாய். அதன் மீது வட்டமாக அமர்ந்து தீர்த்தவாரியை ஆரம்பித்தால் இரவு பத்து மணியைத் தாண்டும். கொசுக்கடி அதிகமாக இருந்தால் மட்டும்தான் கிளம்புவார்கள் இல்லையென்றால் தென்னை மரக் காற்றும் எங்கேயோ எரியும் ஒரு சோடியம் விளக்கின் மங்கிய வெளிச்சமும் நகரவே விடாது. பேசிக் கொண்டேயிருப்பார்கள். அதிலும் எங்கள் குழுவில் ஒருவர் உண்டு- எங்களையெல்லாம் விட வயது அதிகம். அண்ணா என்றுதான் அழைப்போம். வகுப்பறையில் பேசவே மாட்டார். ஆனால் அரை டம்ளர் உள்ளே போனால் போதும் ஷேக்ஸ்பியரின் சித்தப்பா மகன் மாதிரிதான். ஆங்கிலத்தைத் தவிர வேறு எந்த மொழியிலும் பேச மாட்டார். குடித்திருப்பவர்களுக்கு பிரச்சினையில்லை- அவர் பேசுவது புரிந்தாலும் புரியாவிட்டாலும் கண்டுகொள்ளமாட்டார்கள். குடிக்காமல் அமர்ந்திருப்பவர்கள் செத்தார்கள். I coming you dont coming என்கிற ரீதியில்தான் பேசுவார். செத்துச் சுண்ணாம்பு ஆக வேண்டியதுதான்.

போலீஸார் என் பின்பக்கத்தில் பறையடித்த அன்றைய தினம் எங்களிடம் காசு கொஞ்சம் கூடுதலாக புழங்கியது. எல்லோருக்கும் பிரியாணி பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், சிக்கன் வருவல், பெப்ஸி, மதுபாட்டில்கள் என எல்லாவற்றையும் எடுத்துச் சென்றிருந்தோம். ஆறு மணிக்கு ஆரம்பித்தவர்கள் மெதுமெதுவாக குடித்துக் கொண்டேயிருந்தார்கள். அண்ணனின் அலம்பல் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென்று என்னைக் கலாய்க்கத் தொடங்கிவிட்டார். அத்தனை பேரும் அண்ணனோடு சேர்ந்து கொண்டார்கள். நொந்து போயிருந்தேன். 

எட்டு மணி இருக்கும். பாட்டி கடையைப் பூட்டிவிட்டு கிளம்பிவிட்டார். நாங்கள் கிளம்பும் போது பாயைச் சுருட்டி கூரையில் செருகச் சொல்லியிருந்தார். இனி இவர்களிடமிருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று சிறுநீர் கழித்து வருவதற்காக எழுந்து சென்றிருந்தேன். வெறும் பெப்ஸியாலேயே வயிற்றை நிரபியதன் விளைவு அது. அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் ஆகுமா? ஆனால் உடனடியாகத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. அவர்களின் பேச்சு திசை மாறட்டும் என்று பத்து நிமிடங்களுக்கு மேலாக குழுவினரின் கண்ணிலிருந்து விலகி அமர்ந்து கொண்டேன். சில நிமிடங்களுக்குப் பிறகாக இனி பிரச்சினை இருக்காது என்ற நம்பிக்கையில் அவர்களை நோக்கிக் கிளம்பினேன்.

அநேகமாக இடது காலை முதலில் எடுத்து வைத்திருப்பேன் என்று நினைக்கிறேன். கெட்ட நேரம் அத்தனையும் ஒன்று சேர்ந்திருந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும் போதே அவர்கள் அந்த இடத்தில் இல்லை என்று தெரிந்தது. ஆனால் என்னை ஏமாற்றுவதற்காக விளையாடுகிறார்கள் என்றுதான் நினைத்துக் கொண்டேன். வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் கடையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன். பின்னாலிருந்து ‘தப்புரு குப்புரு’ என்று யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது. என்னவென்று சுதாரிப்பதற்குள் லத்தியை சுழற்றிவிட்டார். ஒரே அடிதான். பேண்ட்டுக்கு மேலாக வீங்கியிருக்கும். எங்கே ஓடுகிறேன் என்று தெரியாமல் ஓடுகிறேன். ஆனால் போலீஸ்காரர்கள் அல்லவா? எதிர்பக்கமாக ஒருவர் வந்து நின்றுவிட்டார். அவர் கையிலும் லத்தி இருந்தது. தப்பிக்க முயன்று இன்னொரு அடி வாங்க முடியாது. அசையாமல் நின்று கொண்டேன்.

பின்னால் வந்த போலீஸ்காரனுக்கு என்ன வெறியோ தெரியவில்லை இன்னொரு இழுப்பு. முந்தின அடியை விட இது பலமானதாக இருந்தது. வாயில் கண்ட கண்ட கெட்டவார்த்தையெல்லாம் வருகின்றன. ஆனால் அவர்களிடம் பேச முடியுமா? அப்படியே விழுங்கிக் கொண்டேன். இனி கோபத்திற்கு இடம் இல்லை. இயலாமைதான். இயலாமை கோபத்தை சுயபச்சாதாபமாக மாற்றிவிடும். உள்ளே சென்ற வார்த்தைகள் கண்ணீராக கசிகின்றன. இனி இவர்களிடம் தப்பிக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. 

‘குடிச்சிருக்கியாடா?’ என்றார்கள். ‘சத்தியமா இல்ல சார்’ என்றேன்.

ஊதச் சொன்னார்கள். ஊதிக் காட்டினேன். அவர்களுக்கே குழப்பமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ‘குடிக்கலைன்னா இங்க என்ன பண்ணுற?’

கல்லூரியின் பெயரையெல்லாம் சொல்லிவிட்டு ‘ஒண்ணுக்கு போலாம்ன்னு வந்தேன் சார்’ என்றேன்.

‘ஒண்ணுக்கு போறதுக்கு வேலூரிலிருந்து குடியாத்தம் வருவியாடா?’ என்று எதிரிலிருந்த போலீஸ்காரர் கேட்டார். Very logical question.

என்னவோ உளறினேன். ‘மத்தவனுக எங்க?’ என்பதுதான் அவர்களது முக்கியமான கேள்வி. அது எனக்கு எப்படித் தெரியும்? சிறுநீர் கழிக்க எழுவதற்கு முன்பாகக் கூட போதை உச்சந்தலையில் நிற்பது போல நடித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களை கைத்தாங்கலாகத்தான் அழைத்துப் போக வேண்டியிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். போலீஸை பார்த்தவுடன் ஒரே ஓட்டம்தான். திருட்டுப் பயல்கள். நண்பர்களை கண்டபடி திட்டினேன். போலீஸார் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. ‘ஸ்டேஷனுக்கு வா...அவனுக வந்த பிறகு போலாம்’ என்றார்கள். பேண்ட் வழுக்கி விழுந்துவிடுவது போலாகிவிட்டது. போலீஸ் ஸ்டேஷன், அது இது என்கிற விஷயம் எல்லாம் தெரிந்தால் வீட்டில் அவ்வளவுதான். 

என்னவெல்லாமோ சொல்லிக் கெஞ்சினேன். ‘நல்ல குடும்பத்திலிருந்து வந்திருக்கேன்..அம்மா அப்பா அரசு ஊழியர்கள்’ என்று பதறினேன். பரிதாபம் வந்த மாதிரி தெரியவில்லை. அரை மணி நேரமாவது போராடியிருப்பேன். எவனும் அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கக் கூட வரவில்லை.‘சட்டையில் எவ்வளவு இருக்கிறது என்றார்கள்’ அப்பொழுதிருந்த மனநிலைக்கு எவ்வளவு இருந்தாலும் கொடுத்திருப்பேன் ஆனால் ஐம்பது ரூபாய்தான் இருந்தது. பேருந்துக்குக் கூட காசில்லை. எடுத்துக் கொடுத்தேன். ‘அம்பதுதானா? நட ஸ்டேஷனுக்கு’ என்றார்கள். சத்தியமாகவே அதற்கு மேல் இல்லை. அழத் தொடங்கிவிட்டேன். மீசையெல்லாம் முளைத்திருந்தது. அந்த வயதில் வெளியாட்களிடம் அப்படி வெளிப்படையாக அழுவதற்கு சங்கோஜமாகத்தான் இருந்தது. ஆனால் அது மட்டும்தான் தப்பிக்கச் செய்யும் என்ற நம்பிக்கையிருந்தது. நம்பிக்கை பொய்க்கவில்லை. என்ன நினைத்தார்களோ தெரியவில்லை திரும்பி நிற்கச் சொன்னார்கள். நின்றேன். இன்னொரு அடி. எவன் அடித்தான் என்று தெரியவில்லை. அதற்கு மேல் தாங்க முடியாது. தலை தெறிக்க ஓடினேன். துரத்துவார்கள் என்றுதான் தோன்றியது. ஆனால் அவர்கள் அங்கேயே நின்று கொண்டார்கள். அடித்துத் துரத்துவது என்றால் இதுதான் போலிருக்கிறது.

சாலையைப் பார்த்த பிறகுதான் உயிர் வந்தது. எப்படியும் பல கிலோமீட்டர்கள் நடக்க வேண்டியிருக்கும். பின்புறமாக வலி பயங்கரமாக இருந்தது. சாலையில் தனியாக நடக்கும் போது அழுகை முட்டிக் கொண்டு வந்தது. யாரிடமோ லிப்ட் கேட்டு விடுதிக்கு வந்து சேர்ந்தேன். வழியெங்கும் பைக்காரர் பேசிக் கொண்டே வந்தார். நினைவை எங்கேயோ வைத்துக் கொண்டு அனிச்சையாக அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். பைக்கில் அமரவே முடியவில்லை. அத்தனை வலி. விடுதிக்கு வந்து பேண்ட்டைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் ரத்தம் கசிந்து வீங்கிப் போயிருந்தது. தேங்காய் எண்ணெய்யைப் பூசிவிட்டு குப்புறப்படுத்தவன் தான். மூன்று நாட்களுக்கு அப்படியேதான் கிடந்தேன். 

அடுத்த நாள் போதை தெளிந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்து  ‘ஸாரி’ சொன்னார்கள். போர்வையை மேலே போர்த்திக் கொண்டு குப்புறப் படுத்த படியே கேட்டுக் கொண்டேன். அம்மணமாகக் கிடக்கிறேன் என்று அவர்களுக்குக் கடைசி வரைக்கும் தெரியாது.