Mar 20, 2015

விளக்கு

மகேஷ் பற்றி நேற்றுதான் தெரியும். கோயமுத்தூர் இளைஞர். இருபத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். கடந்த வருடம் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதைப் பெரிய நிறுவனம் என்று சொல்ல முடியாது ஆனால் மரியாதையான சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தார்களாம். மகேஷ் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் இல்லை. அப்பா தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். கஷ்ட ஜீவனம்தான். அப்படியிருந்தும் மகேஷை பி.ஈ படிக்க வைத்திருக்கிறார்கள். தனியார் கல்லூரியில் படித்திருக்கிறார்.

பி.ஈ இன்பர்மேஷன் டெக்னாலஜி.

படித்தவுடன் மகேஷூக்கு வேலை கிடைத்துவிடவில்லை. அலைந்து திரிந்துதான் வேலை வாங்கியிருக்கிறார். ஒன்றரை வருட அனுபவம் கிடைக்கும் வரைக்கும் எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்திருக்கிறது. ஒரு கணம்தான். வாழ்க்கை அத்தனை சந்தோஷங்களும் துண்டிக்கப்பட்டுவிட்டன. குரூரமான விபத்து அது. பெங்களூரிலிருந்து கோவைக்கு தொடரூர்தியில் சென்றிருக்கிறார். கோவை ரயில் நிலையத்தில் எப்படியோ தவறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டார். இப்பொழுது கேட்டால் எப்படி விழுந்தோம் என்று அவருக்கே தெரியவில்லை. விழுந்த அதிர்ச்சியில் நினைவு தப்பிப் போய்விட்டது. கால்கள் மீது தொடரூர்தியின் சக்கரங்கள் ஏறிவிட்டன. இப்பொழுது இரண்டு கால்களும் தொடைக்கு மேலாக இல்லை. துண்டிக்கப்பட்டுவிட்டன.

அந்தச் சமயத்தில் யாரோ சிலர் மகேஷை வாரியெடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இது நடந்து ஒன்பது மாதங்கள் ஓடிவிட்டன. மருத்துவர்கள் உயிரைக் காப்பாற்றிவிட்டார்கள். ஆனால் போன கால்கள் போனதுதான். ஏதாவது நோய் வந்து நடக்க முடியாமல் படுக்கையில் கிடந்து கால்கள் இயங்காமல் போயிருந்தால் எதுவும் தெரிந்திருக்காது. ஆனால் திடீரென கால்கள் துண்டிக்கப்பட்டதுதான் கொடுமை. படுக்கையில் படுத்திருக்கும் பெரும்பாலான சமயங்களில் தனக்கு கால்கள் இரண்டும் இருப்பது போன்ற நினைப்புதான் இருக்குமாம். எழுந்து நடக்கலாம் என்று கூடத் தோன்றும் என்கிறார். ஆனால் நடப்பதற்காக எழ எத்தனிக்கும் போதுதான் உறைக்குமாம். கண்கள் கசிய படுத்துக் கொள்வாராம். நினைத்துப் பார்க்கவே சங்கடமாகத்தான் இருக்கிறது.

சுந்தர்தான் மகேஷ் பற்றிச் சொன்னார். சுந்தருடன் அடிக்கடி பேசுவேன். ஆனால் இதற்கு முன்பு அவர் மகேஷ் பற்றிச் சொல்லவே இல்லை. மகேஷின் குடும்பம் சிகிச்சைக்கே சிரமப்பட்டிருக்கிறார்கள். சுந்தரிடம் ‘அப்பொழுதே சொல்லியிருக்கலாம் அல்லவா?’ என்று கேட்டதற்கு ‘உங்ககிட்ட பழகிட்டேன்....இதைச் சொன்னால் நட்பு இருப்பதற்காக அட்வாண்டேஜ் எடுத்த மாதிரி ஆகிடாதா?’ என்றார். என்ன லாஜிக்கோ தெரியவில்லை. இப்படியெல்லாம் யாராவது பேசும் போது வருத்தமாக இருக்கிறது. இயல்பாக இருந்தால் போதும். சக மனிதருக்குச் செய்யும் மரியாதை அதுதான். எவ்வளவுக்கு எவ்வளவு ஃபார்மாலிட்டி பார்க்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு விலகியிருக்கிறோம் என்று அர்த்தம். ஏதாவதொருவிதத்தில் அந்தக் குடும்பத்தின் சுமையைத் தாங்கியிருக்கலாம் அல்லவா?

எதிர்பாராத சமயங்களில் விழக் கூடிய அடியை எல்லோராலும் தாங்கிவிட முடிவதில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாத கையறுநிலை அது. அப்பொழுது ஒரு கையை நீட்டுவது எல்லாவிதத்திலும் ஆறுதலைத் தந்துவிடும். ஆனால் கையை நீட்டுவதற்கான வாய்ப்பும் நேரமும் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. மெளனமாகத் தாண்டிப் போய்விடுகிறோம். விதியின் மீது பழியைப் போட்டுவிடுகிறோம். ‘கடவுள் உங்களுக்கான ஆறுதலைத் தருவார்’என்று சுமையைக் கடவுள் மீது இறக்கி வைக்கிறோம். அப்படியில்லை. நம்மால் துரும்பையாவது கிள்ளிப் போட முடியும். 

மகேஷின் குடும்பத்துக்கு ஏதாவதொரு வகையில் உதவலாம். தாமதமாகிவிட்டதுதான். ஆனால் அந்தக் குடும்பம் முழுமையாக மீண்டுவிட்டது என்று சொல்ல முடியாது. 

மகேஷை அழைத்துப் பேச முடிந்தது. மருத்துவ உதவி, பண உதவியென்று எதுவும் தேவையில்லை. மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்துவிட்டார்கள். Mobility India என்றவொரு மையம் பெங்களூரிலிருந்து செயல்படுகிறது. அந்த அமைப்பினர் மகேஷூக்கு செயற்கைக்கால்ளை பொருத்துவதற்கு உதவியிருக்கிறார்கள். அவர்களே நடப்பதற்கான பயிற்சியும் அளித்திருக்கிறார்கள். இப்பொழுது ஊன்றுகோலின் உதவியுடன் சமதளத்தில் அவரால் மெதுவாக நடமாட முடிகிறது. ஆனால் மேடுபள்ளங்களில் நடக்க முடிவதில்லை. சொல்லிக் கொண்டிருந்தவர் தன்னை ஒரு சிறந்த கால்பந்து வீரர் என்று குறிப்பிட்டார். நினைவுகளைக் கிளறிவிடும் வேலையைச் செய்துவிடக் கூடாது என்று பேச்சை மாற்றிவிட்டேன். 

ஓரளவு குணமடைந்த பிறகு பழைய நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்வதற்காக முயற்சித்திருக்கிறார். ஆனால் நிறுவனத்தின் முதலாளி கனடா சென்றுவிட்டார். அது ஏற்கனவே சிறிய நிறுவனம். இப்பொழுது ஒரு ப்ராஜக்ட்தான் கைவசம் இருக்கும் போலிருக்கிறது. அதை நிர்வகிக்க ஒரேயொரு ஆளை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியேறச் சொல்லிவிட்டார்கள். அதனால் மகேஷூக்கும் வேறு வழியில்லை. வேலை தேடிக் கொண்டிருக்கிறார். ஜாவா மற்றும் Android தொழில்நுட்பத்தில் ஒன்றரை வருட அனுபவமிருக்கிறது. மகேஷின் தற்போதைய நிலைமை, குடும்பச் சூழல் என எல்லாமுமே ஏதாவதொரு வகையில் பற்றுக் கோலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இப்போதைக்கு அவருக்கு ஒரு வேலைக்கான ஏற்பாடைச் செய்து கொடுத்தால் போதும். ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் தங்கை, தாய், செக்யூரிட்டி வேலை பார்த்து குடும்பத்தைக் காக்கும் தந்தை என நீளும் குடும்பத்தின் பாரத்தை தனது தோள்களில் ஏந்திக் கொள்வார். யாராவது உதவ முடியுமெனில் தெரியப்படுத்தவும். Resume அனுப்பி வைக்கிறேன். இருளில் சிக்கியிருக்கும் அந்தக் குடும்பத்திற்காக ஒரு விளக்கைத் தூண்டிவிட்டதாக இருக்கும்.

vaamanikandan@gmail.com