Jan 27, 2015

யாரு தைச்ச சட்டை?

நேற்றிலிருந்து மோடியின் சட்டையில் பெயர் எழுதியிருந்தது, ஒபாமாவின் மனைவிக்கு புடவைகள் பரிசளிக்கப்பட்டது, ஒபாமா சூயிங்கத்தை மென்று கையில் எடுத்தது ஆகிய செய்திகளால்தான் சமூக வலைத்தளங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. குறிப்பாக ஃபேஸ்புக். இவையெல்லாம் அவ்வளவு பெரிய விஷயங்களா என்று புரியவில்லை. 

நாம் விவாதிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.

ஒபாமாதான் பதவிக்காலத்தில் இந்தியாவுக்கு இரண்டு முறை பயணிக்கும் முதல் அமெரிக்க அதிபர். அப்படியென்ன அவருக்கு வெகு தேவை? வெகுகாலமாக இழுத்துக் கொண்டு கிடந்த அணு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. ஏன் இவ்வளவு நாட்களாக நிறைவேறாத ஒப்பந்தம் இப்பொழுது நிறைவேறுகிறது? அமெரிக்காவின் பிடிவாதம் தளர்ந்திருக்கிறதா? இந்தியா வளைந்து கொடுத்திருக்கிறதா? அல்லது இரண்டு பேருமே நெருங்கி வந்திருக்கிறார்களா? என்ன சாதக பாதகங்கள்? நிறையப் பேச முடியும்.

2030 ஆம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட 60,000 மெகாவாட் மின்சாரத்தை அணு உலைகளின் மூலம் தயாரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இதற்கு நிச்சயமாக அமெரிக்க நிறுவனங்களின் உதவி தேவைப்படும். ஆனால் வாங்கப்படும் அணு உலைகளினால் ஏதாவது விபத்துக்கள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அந்தந்த நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்தியா கோரியது. அதை அமெரிக்கா மறுத்து வந்தது. அமெரிக்கா மறுத்தது என்பதைக் காட்டிலும் அமெரிக்க நிறுவனங்கள் மறுத்தன. தனது தேசத்தின் நிறுவனங்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் மறுத்தது. அதேசமயம் இந்தியாவில் அணு உலைகளை நிர்மாணிக்க ரஷ்யா, ப்ரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகள் வெறியோடு தயாராக இருக்கின்றன. இப்படி பிற நாடுகள் இந்தியாவுக்குள் கால் வைத்தால் தாங்கள் குறி வைத்திருந்த பிஸினஸ் போய்விடுமே- அதனால் அமெரிக்க அதிபருக்கும் நிச்சயமாக தனது நாட்டு நிறுவனங்களினால் நிர்பந்தம் வலுத்திருக்கும். இந்தியாவில் இருக்கும் மார்கெட்டை கோட்டைவிட்டுவிடுவோம் என்று புலம்பியிருப்பார்கள். பில்லியன் டாலர் பிஸினஸ் அல்லவா? 

ஒப்பந்தத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.

இனி காப்பீட்டுச் சேர்மம்(Insurance Pool) ஒன்றை உருவாக்கவிருக்கிறார்கள். ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்போரேஷன் உள்ளிட்ட சில காப்பீட்டு நிறுவனங்கள் இதில் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் பணத்தைப் போட்டு வைப்பார்கள். அமெரிக்க நிறுவனங்கள் வழங்கவிருக்கும் அணு உலைகளினால் பிரச்சினை ஏதாவது வருமானால் பொறுப்பை அந்த நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. இந்தத் தொகையிலிருந்து இழப்பீடு வழங்கிவிடுவார்கள் போலிருக்கிறது. அப்படியானால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரிய பிரச்சினை இல்லை. பல்லாயிரம் கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தால் கூடுதல் சிரத்தையுடன் வடிவமைப்பார்கள். எதனால் இப்படி தப்பிக்கவிடுகிறார்கள் என்று தெரியவில்லை.

இன்னமும் ஒப்பந்தம் பற்றிய தெளிவான தகவல்கள் தெரியவில்லை என்றாலும் செய்திகளின் வழியாக இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதே பா.ஜ.கதான் இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தை மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தில் எதிர்த்தது. இப்பொழுது ஆட்சியில் இருக்கும் போது எதனால் நிறைவேற்றுகிறது என விளக்கம் சொல்வார்களா என்று தெரியவில்லை.

அமெரிக்கா ஒதுக்கும் இரண்டு பில்லியன் டாலர்களானது சூரிய மின்சக்தி உள்ளிட்ட மாற்று வகை ஆற்றல்களுக்கு(Alternate energy sources) பயன்படப் போகிறது என்றாலும் அணு மின்சாரம் சம்பந்தமாக இந்தியா- அமெரிக்க வர்த்தகம் பல பில்லியன் டாலர்களில் இருக்கப் போகிறது என்பதுதான் உண்மை. அதனால் அமெரிக்கா நான்கு பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்போகிறதாம் என்பதெல்லாம் சுண்டைக்காய் சமாச்சாரம்.

இந்த ஒப்பந்தம் இரண்டாம்பட்சம்.

இவ்வளவு அணு உலைகள் இந்தியாவுக்குத் தேவையா என்கிற விவாதம் முதலில் தேவையாகிறது. இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் கூடுதலாக நாற்பது அணு உலைகளை அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியா அமைக்கவிருக்கிறது. இப்போதைய அணு மின்சாரத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட பதினான்கு மடங்கு மின்சாரத்தை அணு உலைகளின் வழியாக இந்தியா தயாரிக்கவிருக்கிறது. இவ்வளவு வேகமாக அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன? ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் சமாளிக்கும் திறன் நம்மிடம் இருக்கிறதா? ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்து பற்றியும் செர்னோபில் அணு உலை விபத்து பற்றியும் படிக்கும் போது பயமாகத்தான் இருக்கிறது. 

அணு விவகாரம் இருக்கட்டும்.

ஜப்பானுடன் சேர்ந்து அமெரிக்காவும், இந்தியாவும் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவிருக்கின்றன என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவுக்கு ‘செக்’ வைக்கும் செயல்பாடு இது. சீனாவுக்கு சுருக்கென்றாகியிருக்கிறது. ‘வலையில்’ சிக்கிக் கூடாது என்று இந்தியாவுக்கு சீனா அவசர அவசரமாக அறைகூவல் விடுக்கிறது.  Nuclear Supplier Group(NSG) எனப்படும் அணு வழங்குநர் குழுமத்தில் இந்தியாவைச் சேர்ப்பதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறது. ஆனால் சீனா முட்டுக்கட்டை போடுவதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. அதே சமயம் பாகிஸ்தானைச் சேர்த்துக் கொள்வதற்கு தனது முழு ஆதரவையும் வழங்கப் போகிறதாம். இந்தியா-சீனாவின் விரிசல் தெளிவாகிக் கொண்டிருக்கிறது.

ஒபாமா- மோடியிடையே அறிவியல், தொழில்நுட்பம், வர்த்தகம் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்ததாக செய்திகள் வருகின்றன. இரு நாடுகளும் சேர்ந்து ஆயுதங்கள் தயாரிப்பது பற்றியும், இருநாட்டு ராணுவங்களின் கூட்டுப் பயிற்சி உள்ளிட்ட ராணுவ ஒத்துழைப்புகள் பற்றி பேசியிருக்கிறார்கள். காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இன்னமும் நீடிக்கும் வறுமையை ஒழிப்பது பற்றியும், மருத்துவ வசதிகளை எளியவர்களுக்கு விரிவாக்குவது குறித்தும் இருபெரும் தலைவர்கள் ஏதேனும் பேசினார்களா என்று தெரியவில்லை.

தொழிலதிபர்களின் பிரச்சினைகளைப் பற்றி விரிவாகப் பேசுவதற்கு அம்பானிகளும், பஜாஜ்களும் வரிசையில் நின்றார்கள். நல்ல விஷயம்தான். கார்போரேட் ஊழியர்களுக்கு வழங்கப்படும் H1B விசா வழங்கும் முறைகளில் இருக்கும் பிரச்சினைகள் குறித்துக் கூட ஒபாமா சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆனால் இந்தியாவின் கல்வித்தர மேம்பாட்டில் அமெரிக்காவின் பங்களிப்பு பற்றியெல்லாம் எந்தச் செய்தியையும் என்னால் படிக்க முடியவில்லை.

இப்படி நிறையக் கேள்விகள் இருக்கின்றன. இருநாட்டுத் தலைவர்கள் விவாதிக்கும் அறிவியல், தொழில்நுட்பம், வர்த்தம் போன்ற விவகாரங்கள் இறுதியில் எளிய மனிதர்களுக்குத்தான் பயன்படும் என்று யாராவது சொல்லமாட்டார்கள் என நம்புவோம். எளிய மனிதர்களுக்கு பயன்படுவதைக் காட்டிலும் இதன் விளைவுகள் கார்போரேட் பெருமுதலாளிகளுக்கும், ராணுவத்திற்கும்தான் அதிகமும் பயன்படும் என்று தாராளமாக நம்பலாம்.

ஒபாமாவின் வருகை குறித்து விமர்சனம் செய்ய வேண்டும் என்பது நோக்கமில்லை. சர்வதேச அரங்கில் இந்தியாவுக்குக் கிடைக்கும் மரியாதை இது என்று முழுமையாக வரவேற்கலாம். ஆனால் அதே சமயம், ஒபாமாவின் இந்த மூன்று நாள் வருகையில் எளிய மனிதர்களின் தேவைகளைக் காட்டிலும் கார்போரேட்களின் பிரச்சினைகள், தங்களை வல்லரசுகளாக்கிக் நிலை நிறுத்திக் கொள்ள விரும்பும் தேசங்களின் அபிலாஷைகள்தான் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சீனா தன்னை வல்லரசாக உருவகித்துக் கொண்டு இந்தியாவைச் சுற்றிலும் விளையாடுகிறது. தனது இடத்தைத் தட்டிப்பறிக்க நினைக்கும் சீனாவைத் தடுக்க அமெரிக்கா இந்தியாவின் தோளை நாடுகிறது. இந்தியாவை மிரட்ட பாகிஸ்தானின் கைவிரலை சீனா பிடித்துக் கொள்கிறது. சீனாவை திகிலூட்ட இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து ஜப்பானின் கதவைத் தட்டுகின்றன. இப்படியான அரசுகளின் வல்லாதிக்கக் கனவு விளையாட்டில் ஏதேனும் விபரீதம் நிகழ்ந்தால் முதல் குண்டு நம் தலைமீதுதான் விழும் என்பதைப் புரிந்து கொண்டுதான் மோடியின் சட்டையப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோமா என்ன?