Jan 26, 2015

கஞ்சிக்கு வழியில்லாதவனா?

‘நேரத்திலேயே வர முடியுமா?’ என்று தாமோதர் சந்துரு கேட்டிருந்தார். எனக்கு எதுவும் பிரச்சினையில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதுதான் யோசனையாக இருந்தது. இருந்தாலும் ஆறரை மணிக்கு குளித்துத் தயாராகிவிட்டேன். இப்படியான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது சுமாரான சட்டையை அணிந்து கொண்டால் போதும் என நினைத்துக் கொள்வேன். எளிய மனிதர்களைச் சந்திக்கும் போது எந்தவிதத்திலும் அவர்களைவிட உயர்ந்தவன் என்று காட்டிவிடக் கூடாது என்று மனம் விழிப்பாகவே இருக்கும். வேணிக்கு அது பிரச்சினையில்லை. ஆனால் அம்மாவுக்கு அது புரியாது. திரும்பி வந்த பிறகும் திட்டிக் கொண்டேயிருப்பார். நேற்றும் திட்டு வாங்கிக் கொண்டுதான் கிளம்பினேன். சட்டையின் காலர் கிழிந்திருக்கிறது என்பது அவரது பிரச்சினை.

கருங்கல்பாளையத்திற்குச் செல்ல வேண்டும். அங்குதான் அரவிந்தனின் வீடு இருக்கிறது. அரவிந்தன் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஆறு வயதுச் சிறுவன். பிறந்ததிலிருந்தே அவனது வலது கையில் எந்த அசைவும் இல்லை. தோள்பட்டையில் ஏதோவொரு பிரச்சினை. அறுவை சிகிச்சையின் வழியாகத்தான் சரி செய்ய முடியுமாம். ஏற்கனவே நான்கைந்து அறுவை சிகிச்சைகளைச் செய்திருக்கிறார்கள். அந்த பிஞ்சுக் கை தாங்கியிருக்கிறது. இன்னமும் சில அறுவை சிகிச்சைகள் பாக்கியிருக்கின்றன. இப்பொழுதும் கூட அவனது கையைத் தொடுவதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை. ‘வலிக்கிறது’ என்கிறான்.

அரவிந்தனின் குடும்பப் பொருளாதாரம் மிகச் சிரமமானது. ஏற்கனவே நடந்த சிகிக்சைகளுக்காக பணம் புரட்டுவதில் திணறியிருக்கிறார்கள். அவனது அப்பா தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சி நடத்துநர். குடும்பச் செலவுக்குச் சரியாக இருக்கும் சம்பளம். அரவிந்தனின் சிகிச்சைக்காக அறக்கட்டளை வழியாக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுப்பதாக அவரிடம் சொல்லியிருந்தேன். தாமோதர் சந்துரு ஏற்கனவே அரவிந்தனின் வீட்டிற்குச் சென்று விசாரித்திருந்தார். அவரை வைத்துக் காசோலையைக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும். பரசுராம் என்பவர்தான் அரவிந்தனின் குடும்பத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். அவர் நிசப்தம் தளத்தை வாசிப்பவர். அவரும் வந்திருந்தார்.

அரவிந்தனின் குடும்பத்திற்கு நேற்று காலை வரையிலும் தகவல் சொல்லவில்லை. உதவி பெறுபவர்கள் எதிர்பாராத சமயத்தில் சென்று கொடுத்துவிட்டு வந்துவிட வேண்டும் என நினைப்பேன். நமக்கென்று எந்த ஏற்பாடுகளையும் அவர்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்களது வீட்டில் பத்து நிமிடங்கள்தான் இருந்திருப்போம். காசோலையைக் வாங்கியவுடன் மகிழ்ச்சியடைந்தார்கள் என்று சொல்ல முடியாது. பிஞ்சுக் குழந்தையின் நிலைமை இப்படியிருக்கிறதே என்ற வருத்தம்தான் இழையோடிக் கொண்டிருந்தது. அரவிந்தனுக்கு அதெல்லாம் தெரியவில்லை. தலைவாரி விட்டிருந்தார்கள். அவனைப் பொறுத்தவரைக்கும் அவனது வீட்டிற்கு யாரோ சில உறவினர்கள் வந்திருக்கிறார்கள். உற்சாகமாகத் திரிந்தான்.

அரவிந்தனைப் பற்றி எழுதிய பிறகு நிறையப் பேர் பணம் அனுப்பியிருந்தார்கள். அவனுக்கென்று எவ்வளவு பணம் வந்திருந்தது என்று தெரியவில்லை. வந்த பணத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் அவனுக்கான தொகை. மிச்சமிருப்பதை வேறு தகுதியான ஒருவருக்குக் கொடுத்துவிடலாம். ‘கங்கா மருத்துவமனை’ என்ற பெயரில் காசோலை எழுதிக் கொடுத்தாகிவிட்டது. மார்ச் மாதத்தில் அறுவை சிகிச்சை நடக்கும் போலிருக்கிறது. அதற்கு முன்பாகவே காசோலையை மருத்துவமனையில் கட்டி அரவிந்தனின் கணக்கில் வரவு வைத்துக் கொள்வார்கள். சிகிச்சை முடிந்தவுடன் மிச்சப்பணத்தைக் கட்டினால் போதும். அதை அவனது குடும்பம் சமாளித்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஐம்பதாயிரம் ரூபாய் நிரப்பப் பட்ட காசோலையை தாமோதர் சந்துரு அரவிந்தனிடம் கொடுத்த போது அவனால் வாங்கிக் கொள்ள முடியவில்லை. கையை அசைப்பதற்கே மிகுந்த சிரமப்பட்டான். அவனது அப்பாதான் கையைப் பிடித்து வாங்கிக் கொள்ள உதவினார். ஆனாலும் அரவிந்தன் சிரித்துக் கொண்டிருந்தான். நான் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். இறைவனின் சிரிப்பு அது. 

சட்டையின் காலர் பற்றி எதற்குச் சொன்னேன் என்றால் இந்தக் குடும்பத்தைப் பார்த்துவிட்டு வந்த பிறகு துணி என்பது பெரிய விஷயமே இல்லை என்று தோன்றியது. அவ்வளவு எளிய குடும்பம் அது. இன்று காலை வரையிலும் ‘கஞ்சிக்கு வழியில்லாதவன் மாதிரி திரிகிறான்’ என்று அம்மா திட்டிக் கொண்டிருக்கிறார். எனக்கு அது பெரிய பிரச்சினையாகவே தெரியவில்லை. இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுக் கொண்டிருக்கிறேன். நமக்கு கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகளில் பத்து சதவீதம் கூட கிடைத்திடாத மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது இந்த உலகம் புரிய வைத்துக் கொண்டேயிருக்கிறது.

(பரசுராமன், தாமோதர் சந்துரு மற்றும் அரவிந்தனின் பெற்றோர்)

இந்த மாதிரி சமயங்களில் ‘செக்கைக் கொடுக்க நேராகச் செல்ல வேண்டுமா?’ என்றும் வீட்டில் கேட்கிறார்கள். கட்டாயம் சென்றே தீர வேண்டும் என்பதில்லைதான். ஆனால் அது ஒரு பொறுப்பு என்று நினைக்கிறேன். எத்தனையோ பேர் பணம் கொடுக்கிறார்கள். அலையக் கூடிய அளவில் உடலில் தெம்பு இருக்கிறது. சென்று வருவதற்கு வசதியிருக்கிறது. உதவி தேவைப்படும் குடும்பத்தினரின் கையில் நேரடியாகக் கொடுத்துவிட்டு வரும் போது ஒருவிதமான ஆன்ம திருப்தி கிடைப்பதாக உணர்கிறேன். இந்த அன்பின் இழையை நிசப்தம் வழியாக இன்னும் பலருக்குக் கடத்திவிட முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது. இந்த ஒரு நிழற்படம் போதும். மனித நேயம் அழிந்துவிட்டது என்பதெல்லாம் பொய் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். முகம் தெரியாத மனிதர்கள் நூற்றுகணக்கானவர்களின் உதவியினாலும் ஆசிர்வாதத்தினாலும் பிரார்த்தனையினாலும் இந்தப் பிஞ்சுக் குழந்தை தனது கையை அசைக்கப் போகிறான். அன்பும் மனிதமும் எல்லாவிடங்களிலும் விரவியிருக்கிறது. நாம்தான் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் தாண்டிச் சென்றுவிடுகிறோம்.