Aug 16, 2013

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி

‘விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்’ என்ற  டயலாக் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மையில் விவசாயிகள் கதறுகிறார்கள். ஒருபக்கம் ஒரே நாளில் ஆறு டி.எம்.சி தண்ணீரை கடலில் கலக்க விடுகிறோம். இன்னொரு பக்கம் சொட்டு மழையில்லாமல் கருகுகிறார்கள். பனியன் கம்பெனிக்காரர்களும், பட்டாசு கம்பெனிக்காரர்களும் வேன் வைத்து ஆட்களை அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். தோட்ட வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்பதில் ஆரம்பித்து விளைச்சலுக்கு ஏற்ற வருமானம் இல்லை என்பது வரை ஏகப்பட்ட புகார்கள் விவசாயிகளிடம் இருக்கின்றன. இன்றைய தேதிக்கு நவீனத் தொழில்நுட்பம் ஓரளவு விவசாயிக்கு உதவுகிறது என்றாலும் நாம் அடைய வேண்டிய தூரம் வெகு தூரம் இருக்கிறது.

ஒவ்வொரு துறையிலும் 'ஸ்பெஷலிஸ்ட்' ரோபோக்கள் கொடிபறக்கவிடுவதைப்போலவே விவசாயத்துறையிலும் ரோபோக்கள் காலடி வைத்திருக்கின்றன. உழவு, நடவு, களைவெட்டுதல், நீர் பாய்ச்சுதல் என சகலத்தையும் செய்வதற்காக அவற்றிற்கென வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் செய்யத் துவங்கியிருக்கின்றன. விவசாயப்பணிகளை செய்யும் ரோபோக்களை 'அக்ரிபோட்' என்கிறார்கள்.

அக்ரிபோட் வடிவமைப்பு கொஞ்சம் சிக்கலானது. உதாரணமாக களையெடுக்கும் ரோபோக்களை தயாரித்து தோட்டத்திற்குள் விட்டால் அது களைகளைவிட்டுவிட்டு பயிர்களையெல்லாம் ஒழித்த காமெடி வரலாறுகள் எல்லாம் உண்டு. அதனால்தான் அக்ரிபோட் வடிவமைப்பில் மிகுந்த கவனம் எடுக்கிறார்கள். அக்ரிபோட்டில் இன்னொரு சேலஞ்ச் இருக்கிறது- அது காசு, பணம், துட்டு, மணி, மணி. Hi-Fi, ஸூப்பர் டூப்பர் என்று லட்சக்கணக்கில் விலை சொன்னால் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளால் அக்ரிபோட்களை வாங்க முடியாது. அதனால் காஸ்ட்லியான டெக்னிக்கல் சமாச்சாரங்களைத் தவிர்த்துவிட்டு பெரும்பான்மையான விவசாயிகளின் பொருளாதார பின்னணியையும் அக்ரிபோட் வடிவமைப்பின் போது கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதால் குறைந்த செலவில் அக்ரிபோட்கள் களமிறங்கிக் கொண்டிருக்கின்றன.

நம் ஊரிலும் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி இருக்கிறார். பாலாஜி என்று பெயர். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் எம்.டெக் ரோபோ படித்துக் கொண்டிருக்கும் பாலாஜியோடு அவ்வப்போது பேசுவது வழக்கம். ஒரு கல்லூரி மாணவனால் இத்தனை உற்சாகமாகவும், இத்தனை வெறித்தனமாகவும் இருக்க முடியுமா என்று சந்தேகம் உருவாக்கக் கூடிய மனுஷன். ஆளில்லாமல் பறக்கும் ரோபோட், ஆளில்லாமல் எதிரியை அட்டாக் செய்யும் ஆர்மி ரோபோ என்று படம் காட்டிக் கொண்டிருக்கும் பாலாஜி அக்ரிபோட் ஒன்றையும் தயாரித்திருக்கிறார். அது தோட்டங்காடுகளில் மருந்து அடிக்கும் ரோபோட். ஏதோ விஷயமாக கல்லூரிக்கு வந்த ஆர்மி அலுவலர் ஒருவர் இதையெல்லாம் பார்த்துவிட்டு ‘எங்களுக்கும் ஒரு ரோபோ செஞ்சு கொடு தம்பி’ என்று பாலாஜிக்கு கொக்கி போட்டுவிட்டார். பாலாஜி இருக்கட்டும். இப்போதைக்கு அக்ரிபோட் பற்றி பார்க்கலாம்.

வெளிநாடுகளில் திராட்சை பறிப்பதற்கும், ஆரஞ்சு பறிப்பதற்கும் ரோபோக்களை பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். இந்த ரோபோக்களுக்கு பழங்களின் நிறத்தையும் அளவையும் கண்டறியும் சென்சார்கள் உண்டு. அதோடு சில கணிப்புகளையும் இந்த ரோபோக்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் பழமாக கனிந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதால் அவற்றை பறித்துவிட வேண்டும். நன்றாக கனிந்திருந்தாலும் கூட இலைகளுக்கு இடையில் பழங்கள் மறைந்திருக்கக் கூடும். எனவே இவற்றையெல்லாம் கணித்து சரியான பழங்களை கண்டறியும் படியான ப்ரொக்ராம்களை ப்ராசஸர்களில் எழுதப்பட வேண்டும். மேலும் இந்த ப்ரோகிராம்களை தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கு உதவும் கணினித்திரை, கீபோர்ட் போன்றவற்றையும் ரோபோக்களில் பொருத்துகிறார்கள்.

இவை மட்டுமில்லாது பழங்களை பறிப்பதற்கு தோதான கைகள் போன்ற அமைப்பும் இந்தக் கைகள் பல கோணங்களில் வளைவதாகவும் தேவைக்கு ஏற்ப நீள்வதாகவோ அல்லது குறுகுவதாகவோ அமைந்திருப்பதும் அவசியம். கைகளை மணிக்கட்டு, முழங்கை என ஒவ்வொரு பகுதியையும் சிறு சிறு மின் மோட்டர்கள் மூலமாக கட்டுப்படுத்துகிறார்கள். 

அக்ரிபோட்கள் பல நாடுகளிலும் தேவைப்படுகின்றன. இந்தியாவைப் போலவே அரிசியை விரும்பி உண்ணும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. ஜப்பானிய விவசாயிகளுக்கும் இந்திய விவசாயிகளைப் போலவே ஒரு பெரும் பிரச்சினை உண்டு. அது விவசாயத்திற்கு தேவையான பணியாளர்கள் கிடைப்பதில்லை என்பது. இந்தப் பிரச்சினையின் காரணமாக ஜப்பானில் அக்ரிபோட்களை மும்முரமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். 

நெல் நடவு செய்வதற்கான ரோபோதான் ஜப்பானிய விவசாயிகளின் முதல் தேவையாக இருந்தது. இதற்கான முயற்சியை கி.பி. 1800 களின் இறுதியிலேயே தொடங்கிவிட்டார்கள். ஆனால் அது அத்தனை பெரிய வெற்றி இல்லை. அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு வரைக்கும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அந்த ஆண்டு சைடாமா மாகாணத்தில் உள்ள தேசிய விவசாய ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அக்ரிபோட் ஒன்றை தயாரித்தார்கள். மனிதர்களின் எந்த உதவியும் இல்லாமல் நெல் நடவு செய்யும் ரோபோவை வயலில் இறக்கினார்கள். இந்த ரோபோவில் இடங்காணல் கருவி(Global Positioning System) பொருத்தப்பட்டது. இந்தக் கருவி செயற்கைக் கோளுடன் தொடர்பில் இருக்கும். உலகில் எந்த மூலையிலிருந்தும் ரோபோவை கண்காணிப்பதற்கான வசதியை இந்தக் கருவி உருவாக்கி தருகிறது. 

இந்த ரோபோவின் ப்ராசஸசர் மனித மூளையின் பிரதியைக் கொண்டிருக்கிறது. ரோபோவில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்களின் தகவலுக்கு ஏற்ப நடவு செய்ய வேண்டிய இடத்தை துல்லியமாக இந்த ப்ராசஸரால் கணிக்க முடிகிறது. நடவு முடிந்தவுடன் சுற்றிலும் நெல் நாற்றைச் சுற்றிலும் இருக்கும் மண்ணிலிருந்து நாற்று மண்ணுக்குள் எத்தனை மில்லி மீட்டர் பதிந்து இருக்கிறது என்பது வரை ஒரு ‘இன்ஸ்பெக்ஷனை’ முடித்துவிடும். எத்தனை நாற்றுக்கள் நட்டப்பட்டிருக்கின்றன என்ற கணக்கையும் குறித்துக் கொள்ளும். ரோபோ பாத்தியின் இறுதிக்குச் சென்றவுடன் தானாகவே 'U' வடிவில் திரும்பி அடுத்த வரிசை நடவைச் செய்யும்.

இத்தனை வசதிகளையும் கொண்டிருக்கும் இந்த ‘அக்ரிபோட்’டின் வேகமும் அசாத்தியமானது. 20 நிமிடங்களில் கிட்டத்தட்ட 1000 சதுர மீட்டருக்கு நடவு செய்யும் இந்த ரோபோ ஜப்பானின் விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இந்தியாவிலும் இந்த ‘அட்வான்ஸ்ட்’ நெல் நடவு செய்யும் ரோபோவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடக்கின்றன.

ஐ ரோபோ என்ற ஆங்கிலப் படத்தில் கதாநாயகனுக்கும் ரோபோவுக்கும் இடையில் ஒரு உரையாடல் நிகழும். ரோபோவிற்கும் கனவுகள் உண்டு என்பதை நாயகனால் ஏற்றுக் கொள்ள முடியாது. "மனிதர்களுக்கு கனவுகள் உண்டு. நாய்களுக்குக் கூட கனவுகள் உண்டு. ஆனால் உனக்கு கனவுகள் வராது. நீ வெறும் இயந்திரம். ரோபோவினால் சிம்பொனி இசையமைக்க முடியுமா? ஒரு நல்ல ஓவியத்தை வரைய முடியுமா?" என்று ரோபோவிடம் நேரடியாகக் கேட்பான். 

ரோபோ ஆழ்ந்த மெளனத்திற்குப் பிறகு நாயகனைப் பார்த்துக் கேட்கும் "என்னால் முடியாதுதான். ஆனால் உன்னால் முடியுமா?" என்று. கதாநாயகன் ‘பெப்ரப்பே’ என முழிப்பான்

இந்த உரையாடல் உணர்த்துவது எளிமையான கருத்து. ஒரு மனிதனால் எப்படி எல்லாவற்றையும் செய்ய முடியாதோ அதே மாதிரிதான் ஒரே ரோபோவால் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. அதே சமயம் எந்த அம்சத்திலும் ரோபோ மனிதனைவிட தாழ்ந்தது என்று சொல்லிவிட முடியாத காலகட்டத்தை மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அத்தனை திறமைவாய்ந்த ரோபோக்கள் கலக்கிக் கொண்டிருக்கின்றன. அனைத்து ரோபோக்களிலும் அடிப்படையான தொழில்நுட்பம் ஒன்றுதான். மற்றபடி ரோபோக்களை பயன்படுத்தும் துறைகள்தான் வேறுபடுகிறது. விண்வெளி, நீர்வளம், இராணுவம், விவசாயம் என அந்தந்த துறைகளின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்துவிடுகிறார்கள். அவ்வளவுதான்.

(கல்கியில் எழுதிய ‘ரோபோஜாலம்’ தொடரின் அனைத்து கட்டுரைகளையும் நிசப்தத்தில் பதிவு செய்தாகிவிட்டது)