Nov 11, 2012

துபாயில் சித்திக்சித்திக் செம கேரக்டர். எவனாக இருந்தாலும் கலாய்ப்பான். 'எவனாக' என்பதற்கு அர்த்தம் இருக்கிறது. பள்ளியில் படித்த காலத்தில் தலைமையாசிரியரில் இருந்து கூட படிப்பவர்கள் வரைக்கும் யாராக இருந்தாலும் டகால்ட்டிதான். இவனது அழிச்சாட்டியம் தாங்க முடியாமல் +2  லேப் எக்ஸாமில் குத்திவிட ப்ளான் செய்திருந்தார்கள். கடைசி நேரத்தில் தகவல் கசிந்து சித்திக்கின் அம்மாவின் முயற்சியால் ‘தொலைந்து போகட்டும்’ என்று பாஸ் செய்துவிட்டார்கள். பி.ஈ முடித்தான். அப்பவும் அப்படியேதான் இருந்தான். இடையில் ஒரு முறை சந்தித்தேன். பிறகு தொடர்பு அறுந்துபோனது.

கல்லூரி முடிந்த பிறகு சவூதியில் கொஞ்ச நாள் இருந்தான். அங்கு எதைச் செய்தாலும் அடிக்கிறார்கள் மிஞ்சினால் வெட்டுகிறார்கள் என்று பயந்து துபாய்க்கு வந்துவிட்டான். சில வருடங்களுப் பிறகாக இப்பொழுது சந்தித்துக் கொண்டோம். ஒரு கதையைச் சொல்வதைப் போல ஒரு சம்பவத்தைச் சொன்னான். 

துபாயில் சித்திக்கின் மேனேஜர் ராமகிருஷ்ணன். பக்கா வெஜிடேரியன். இருபது வருடங்களாக துபாயில் இருக்கிறாராம். ஒரு பையன், ஒரு பெண். பையன் பத்தாவது படிக்கிறான். எப்பவும் வீடியோகேம் விளையாடிக் கொண்டிருக்கும் சோடாபுட்டி கண்ணாடிவாலா. அவரது மகள் எட்டாம் வகுப்பு படிக்கிறாளாம்.

ராமகிருஷ்ணன் வீட்டில் சித்திக் 'ஆல் இன் ஆல்' எடுபிடி ஆகிவிட்டான். அவரது பிள்ளைகளை சினிமாவுக்கு அழைத்துப் போவதில் ஆரம்பித்து தூரத்திலிருக்கும் புத்தகக் கடையில் அவரது மனைவிக்கு மங்கையர் மலர் வாங்கித் தருவது வரை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தான். 

துபாயில் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் விடுமுறை என்பதால் வெள்ளியன்று குழந்தைகளை சினிமா, பார்க் என்று அழைத்துச் சென்றுவிட்டு இரவில் ராமகிருஷ்ணன் வீட்டிலேயே தங்கிக் கொள்வது சித்திக்கின் வழக்கமாகியிருக்கிறது. சனிக்கிழமை மதியம் பூஜை, புனஸ்காரத்திற்கு பிறகாக சித்திக்கிற்கு விருந்து உண்டு. இரண்டாவது சனிக்கிழமை என்றால் பொரி சாப்பாட்டில் ஸ்பெஷல் ஐட்டமாக இருக்கும். உணவை முடித்துவிட்டு தான் தங்கியிருக்கும் அறைக்கு போய்விடுவான். இப்படித்தான் இவனது வாரவிடுமுறைகள் கரைந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது சித்திக் அடுத்தவர்களை கலாய்ப்பதை நிறுத்திக் கொண்டான். ஆனால் உடன் இருப்பவர்கள் அவனை நக்கல் அடிப்பதற்கு ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு சனிக்கிழமை உணவுக்கும் முன்பாக “இவங்க உனக்கு அக்கா மாதிரி” என்று தன் மனைவியைக் காட்டி சுட்டிக்காட்ட ராமகிருஷ்ணன் தவறியதே இல்லை. அப்பொழுது மட்டும் செம டென்ஷனாகிவிடும் சித்திக் சாப்பிட்டு முடிக்கும் போது சாந்தமாகிவிடுவான். அவனை அமைதியாக்கும் அளவிற்கு சாப்பாடு அத்தனை பிரமாதமாக இருக்கும். சித்திக்கை இன்னொரு டென்ஷனாக்கும் வைபவமும் சாப்பாட்டில் உண்டு- அது சித்திக்கிற்கு மட்டும் ‘ப்ளாஸ்டிக்’ டம்ளர். இத்தனையையும் தாங்கிக் கொண்டு எதற்காக ராமகிருஷ்ணன் வீட்டிற்கு போய்வருகிறான் என்று சித்திக்கின் நண்பர்களுக்கு புரிந்ததேயில்லை.

சித்திக் அவனது அறைத்தோழனான ரவீந்திரனை ஒரு சனிக்கிழமை அழைத்துக் கொண்டு ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றிருக்கிறான். அன்று மதியம் இரண்டு பேருக்குமே அங்கு விருந்து என்று ராமகிருஷ்ணன் சொல்லிவிட்டாராம். காலையில் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ஏதோ ஒரு கடைக்குச் சென்றுவிட்டு மதிய நேரத்தில் வந்திருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் பொரியெல்லாம் இலையில் வைத்து சோறு போட்டிருக்கிறார்கள். ரவீந்திரன் உணவை முடித்தவுடனேயே அறைக்கு கிளம்ப வேண்டும் என்றிருக்கிறான். சித்திக்கும் உடன் கிளம்பிவிட்டான்.

வரும் போது “மச்சி, அவங்க எதுக்கு வாராவாரம் சனிக்கிழமை உனக்கு சோறு போடுறாங்க?” என்றிருக்கிறான் ரவீந்திரன்.

“அவங்க எனக்கு சொந்த்காரங்க மாதிரி” என்று சித்திக் பெருமையுடன் அடித்துவிட்டான்.

"ம்க்கும். செத்துப்போன பெரியவங்களுக்கு சாமி கும்பிட்டுவிட்டு சனிக்கிழமையன்னிக்கு அநாதைக்கு சோறு போடுறது அவங்க வழக்கம்” என்ற போது சித்திக் ஒரு கணம் அமைதியாகிவிட்டான். 

வயிறு புரட்டிக் கொண்டிருந்தது. தன்னை அநாதை என்று இன்னொருவன் முடிவு செய்ததை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீட்டில் இருப்பவர்களின் முகம் ஒவ்வொன்றாய் ஞாபகத்திற்கு வந்து போனது.  வண்டியை விட்டு இறங்கியபோது அத்தனை புரட்டலும் சேர்ந்து வாந்தியானது. எக்கி எக்கி துப்பினான். வாயைக் கொப்புளித்த போது தான் உண்ட அத்தனை சனிக்கிழமையின் உணவும் கழுவப்பட்டதாகத் தோன்றியது. மிகுந்த சப்தத்துடன் உமிழ்ந்தான். ராமகிருஷ்ணன் வீட்டில் தன் முகத்தை துடைத்திருக்கக்கூடும் என்று சொல்லிவிட்டு சிரித்தான். அது தனது அவமானத்தை மறைத்துக் கொள்ளும் சிரிப்பு.

நான் கிளம்புவதாகச் சொன்னேன். எங்கேயிருந்தாலும் நம்மவர்கள் நம்மவர்கள்தான் என்றான். நான் தலையாட்டிக் கொண்டேன்.

3 எதிர் சப்தங்கள்:

Sathik said...

இப்படி கூட ஆட்கள் இருப்பாங்கலா? நம்பவே முடியல!!

Anonymous said...

http://mukundamma.blogspot.in/2012/11/blog-post.html

**
எங்களை போன்ற சில குடும்பங்களுக்கு அமெரிக்கர்கள் உட்பட வேறு சாப்பாடு வைத்து இருந்தனர். அதில் ஒரு அமெரிக்க அம்மா..அது என்ன சாப்பாடு என்று கேட்க..அதற்கு அந்த பர்த்டே பார்ட்டி அம்மா, ”அது கடவுளுக்கு படைத்தது..வேறு மக்கள் சாப்பிட கூடாது” என்று கூறினார்.

அட..இது நல்லா இருக்கே..அப்படி கடவுளுக்கு படைத்த சாப்பாட்டை வேறு சாதி மக்கள் சாப்பிட கூடாது என்று சொல்பவர்கள்..எதற்கு மற்ற மக்களை பார்ட்டி என்று அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை..
**

Anonymous said...

Some people will never change. In one of the temples in Phoenix, US, priests will throw the prasadam in non-brahmins hands after the pooja.