பெங்களூரின் குளு குளு ஏ.சி தியேட்டர் களை கட்டியிருக்கிறது. பார்த்த பக்கமெல்லாம் சூர்யாவும் காஜல் அகர்வாலும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். மாற்றான் ரிலீஸ் பெங்களூர் தியேட்டர்களையும் பதம் பார்த்திருக்கிறது. தமிழில் வெளியிட தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம். கன்னட பதிப்புக்கே இத்தனை அலப்பறையும்.
கதை சிம்பிள். ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் அதிரடி சரவெடிதான் படம் முழுவதும். எம்.ஜி.ஆர் மச்சம் வைத்து தோற்றத்தை மாற்றி 'டபுள் ஆக்ட்' தருவது போல ஹேர்ஸ்டைலில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் சூர்யா. இரண்டு சூர்யாக்களின் படத்தை அருகருகே போடும் போஸ்டர்களிலாவது புருவத்தில் வித்தியாசம் காட்டியிருக்கலாம். சண்டைக்காட்சிகளில் சூர்யா அடித்து நொறுக்குகிறார். படம் பார்ப்பவர்களுக்கும் முறுக்கேறுகிறது. ரொமான்ஸ் காட்சிகளில் அமுல்பேபியாகியிருக்கிறார். இரட்டையர்களில் ஒருவரான அகி தான் டாப் ஸ்கோரர்.
காஜல் அகர்வால்- பெயரில் மட்டும் ஸ்வீட் கடை இல்லை. ஆளே ஸ்வீட்தான். அந்தக் கண்களும், சிரிப்பும்...அவருக்காகவே இந்தப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் போலிருக்கிறது. ஆனால் அவருக்கு நடிப்பதற்கான ஸ்கோப் மற்ற அனேக தமிழ்ப்படங்களைப் போலவே 'துக்கினியூண்டு'தான். கிடைத்த வாய்ப்பில் சிரித்து கொஞ்சம் டூயட் பாடி போயிருக்கிறார்.
இயக்குனர் கே.வி.ஆனந்த் ஏமாற்றவில்லை. அயன், கோ- இதையெல்லாம் கலந்து அடித்திருக்கிறார். இந்தப் படங்களை நான் முன்பு பார்த்ததில்லை. மாற்றான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் இரண்டு நாட்களாக டிவிடியில் பார்த்திருந்தேன். தனது முந்தைய படங்களின் பாடல்காட்சிகளில் தான் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கும் கே.வி.ஆனந்த் இந்தப் படத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். நாணி கோணி பாடல் காட்சி நார்வேயில் படமாக்கப்பட்டிருக்கிறது. அத்தனை குளுமை. அத்தனை அழகு.
இந்தப்பாடல் மட்டுமில்லை எல்லாப்பாடல்களுமே ஹாரிஸ் ஜெயராஜின் வழக்கமான துள்ளலுடன் அட்டகாசம். தாமரையின் 'யாரோ யாரோ' பாடல்வரிகள் அக்மார்க் தாமரை ரகம். நா.முத்துக்குமார், விவேகாவும் பின்னியிருக்கிறார்கள். ஹாரிஸ் சார், நீங்க பேக்ரவுண்ட் மியூஸிக்கில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். அப்பப்போ கோட்டை விட்டிருக்கீங்க.
ஒளிப்பதிவாளர் சுந்தர்ராஜூக்கு ஒரு சல்யூட். சூர்யாவின் அறிமுகக் காட்சியில் காமிராவை இன்னும் பதினோரு டிகிரி கீழே இருந்து கோணலாக வைத்திருக்கலாம். மற்றபடி படம் முழுவதும் அப்படியே கண்ணுக்குள் பதிகிறது.
கல்பாத்தி எஸ்.அகோரத்திற்கு தமிழ் சினிமாவில் தொட்டதெல்லாம் பொன் ஆகிறது. இப்பொழுது மாற்றான் மூலம் இன்னுமொரு ஹிட் அடித்திருக்கிறார். வாழ்த்துக்கள்.
[நான் இன்னும் 'மாற்றான்' பார்க்கவில்லை. பார்க்கும் எண்ணமும் இல்லை. படம் பார்க்காமல் 'ப்லாக்'கில் விமர்சனம் எழுதுவது எப்படி என்ற முயற்சியின் தொடக்கம் இது. ரிலீஸே ஆகாத படத்துக்கு விமர்சனம் எழுதுவது குறித்து 'துப்பாக்கி'யை வைத்து முயற்சி நடக்கிறது]
6 எதிர் சப்தங்கள்:
ஹி.ஹி.ஹி
ஐயோ சரியான மொக்கை வாங்கிட்டேன்..முடியல...
//கன்னட பதிப்புக்கே இத்தனை அலப்பறையும். // இந்த ஒரு தகவல் பிழையைத் தவிர விமர்சனம் மிக மிக அருமை. கன்னடத்தில் மொழிமாற்றுப்படங்களுக்கு அனுமதியில்லை. :))))))))))))
நன்றி சுடர்விழி, வினையூக்கி.
வினையூக்கி,
நான் பெங்களூர் முழுவதும் பார்த்தது தெலுங்கு போஸ்டர்கள். கன்னட போஸ்டர்கள் என்று நினைத்துவிட்டேன். Language Problem :)) நன்றி :))
:-) Nice
ஹ ஹா இப்படி கூட எழுதலாமா ?முயற்சி பண்ணி பாக்கேன்
நன்றி ஆனந்த், பிரேம்குமார்.
Post a Comment