Aug 25, 2006

சாகத் தவறிய மறுநாள்!!!

மரணமும் அது குறித்தான செய்திகளும் கொண்டிருக்கும் புதிர்கள் எப்பொழுதுமே அவிழ்க்க முடியாதவையாக இருந்திருக்கின்றன. சாவு பற்றி பேசும் போது எனக்குள் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அதன் குரூரமோ பயமுறுத்தலோ பெரிதாக பாதித்ததில்லை.

மூன்றாம் வகுப்பு படிக்கும் போது என் தாத்தா இறந்தார். தீபாவளி மூன்று நாளில் வரப் போகிறது. ஆட்டோவில் மிகுந்த உற்சாகத்துடன் வந்து கொண்டிருந்த சமயம் கண்ணமத்தை "உங்க தாத்தன் செத்துப் போச்சு" என சாவாதானமாகச் சொன்னார். அது எனக்குத் தெரிந்த முதல் மரணம். வீட்டிற்கு சென்ற போது தலைவிரி கோலமாக ஆயா அழுது கொண்டிருந்தார். இறந்தவரைக் காட்டிலும், இறப்பின் பாதிப்புத் தாக்கியவரை எதிர்கொள்வது பயங்கரமானதாக இருக்கிறது.

நேற்று சாலையில் தலை நசுங்கி செத்துக் கிடந்தவனைக் காட்டிலும் அவனருகில் அழுது கொண்டிருந்த பெண் பயமூட்டுபவளாக இருந்தாள்.

மரணம் குறித்தான கவிதைகள் அதிர்வூட்டுவது இயல்பானதாகவே இருக்கிறது. ஒவ்வொருவரும் ஏதாவதொரு சமயத்தில் சாவினை சந்தித்திருப்போம்.

*******************************************

சாகத்தவறிய மறுநாள்

சாவதும் ஒரு கலை- எல்லாவற்றையும் போல
-ஸில்வியா பிளாத்

கடைசி மாத்திரையை விழுங்கியதும்
மனம் அலைகளடங்கி அமைதியானது
இறப்பு கருணையுடன் நெருங்கியது

இனி
விழிப்பின் அவலங்கள் இல்லை
கண்ணீரோ
ஓயாமல் கசியும் காயங்களோ
அலைக் கழிதலோ இல்லை
பொய்யின் கசப்போ
அழுகிய புன்னகைகளின் துர்நாற்றமோ
நொந்து கொள்வதோ இல்லை

பயமோ
நிரந்தரமாய் கவிந்த வெறுமையோ
நேசமற்ற கணங்களோ இல்லை
காலம் வெளிபெயர்கள் இல்லை
மேலாக வாழ்வின் குமட்டல் இல்லை

மனம் அலைகளடங்கி அமைதியானது
நினைவில் புதைந்த இசை
வெளிப்பட்டுத் ததும்பியது
மனம் அலைகளடங்கி அமைதியானது

காலையில்
ஒளி வந்து அழைக்க எழுந்து
என் கிளிக்குப்
பழங்கள் பொறுக்கக்ப் போனேன் வழக்கம் போல
சந்தோஷம்
துக்கம் என்னும் சலனங்களற்று
சிறு நீர் அடங்கிய அடிவயிறாய்க்
கனத்தது மனம்


சுகுமாரன்


இந்தக் கவிதையில் மரணிக்கப் போகுபவனின் நிம்மதியையும், அம்முயற்சி தோல்வியுறும் போது எழும் உணர்வு சந்தோஷமா அல்லது துக்கமா என்னும் பிரிக்கத் தெரியாததாக மட்டுமில்லாது, உலக வாழ்வின் போலித்தனங்களும், அது நமக்கு தரும் வலிகளும் கவிதையில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

**********************************
எங்கிருந்தோ ஓடிவந்து
சட்டெனக் கையைப் பற்றிக்கொண்டது
அந்தக் கெட்ட செய்தி

செய்திக்குரியவன்
நானாகவே இருந்திருந்தால்
நிம்மதியாய்ப் போயிருக்கும்

கொடுமதியின் காலம்
இன்றென்னைத் தேர்வு செய்தது
கெட்ட செய்தி கொண்டுபோகிறவனாக

அந்த வீட்டின் குழந்தைகள்
இப்போதுதான் தூங்கப்போயிருப்பார்கள்

அந்த வீட்டின் பெண்
நாளின் இறுதிக் கடமையையும்
பூர்த்தி செய்து
உடலைத் தளர்த்திக்கொண்டிருப்பாள்

அந்த வீட்டின் மனிதன்
நாளைக்கான
ஒரு அர்த்தமற்ற வரைபடத்தை
எழுதிக்கொண்டிருப்பான்

அந்த வீட்டின் விருந்தாளி
தனது இடத்தை
இன்னொரு முறை
சரிபார்த்துக்கொள்வாள்

சற்றைக்கு முன்
அரிந்தெடுத்த
மாமிசத்தின் சூட்டுடன்
சித்திரமாக உறையப் போகும்
நாளொன்றை
அவர்களுக்காகக் கொண்டுபோகிறேன்

முதலில் கதவு திறக்கப் போகும்
துரதிர்ஷ்டசாலிக்காக
என் கண்கள்
ஒரு வஞ்சகமுள்ள மிருகத்தின்
கண்களாகின்றன

எனது முதல் வாக்கியம்
சுவர்களை
இடம் மாற்றி வைத்துவிடும்

இரண்டாம் வாக்கியம்
தலைக்கு மேலுள்ள
கூரையை அகற்றிவிடும்

மூன்றாம் வாக்கியத்தை
யாரும் கேட்கமாட்டார்கள்

பிறகு
அவர்கள் ஒரு நாளும் மறக்க இயலாது
எனது இன்றைய முகத்தை
எனது இன்றைய குரலை
எனது இன்றைய ஆடைகளை

அழுகும் புண்ணொன்றின்
அருவெருப்பான புழுவாகி
நிரந்தரமாகத் தங்கிவிடுவேன்

புதைநிலங்களின் பாதையில்
என் கால்கள்
முடிவில்லாமல் செல்கின்றன

உருவாக்க வேண்டிய
வாக்கியத்தின் பதிலியாய்
முற்றிலும்
வேறொன்று உருவாகலாம்

தெய்வங்கள் இரங்கினால்
எனக்கு முன்
யாரேனும் சென்றிருக்கக்கூடும்

மனுஷ்ய புத்திரன்

சாவுச் செய்தியை, அந்தச் சாவிற்கு சம்பந்தம் உள்ளவர்களுக்கு முதலில் தெரிவிப்பவனின் மனநிலையை வெளிப்படுத்தும் இக்கவிதை, அதிர்வூட்டிய கவிதை.

என் பெரியப்பா இறந்ததாக தகவல் வந்த போது உறவினர்கள் பதட்டத்தில் செய்வதறியாமல் கதறியழுததும், தகவல் கொண்டு வந்தவரும் வெடித்து அழுததை நினைக்க முடிகிறது. அப்பொழுது அவர் எந்தக் காரணத்திற்கு அழுதிருப்பார் என இப்பொழுது யோசிக்கிறேன்.

***************************

அலுவலகத்தில் என் அறை மேல்தளத்தில் இருக்கிறது. சுற்றிலும் காடு. முந்தின நாள் பிணம் ஒன்று கிடப்பதனைப் பார்த்தேன். அநேகமாக நான் மட்டும்தான் பார்த்திருக்கக் கூடும். முதலில் விலங்கென நினைத்தேன். மூன்று ஆடு மேய்ப்பவர்கள் அருகில் நின்று பார்த்தார்கள். ஏதோ பேசிக் கொண்டு சென்றதால் விலங்காக இருக்கும் என உறுதிப் படுத்திக் கொண்டேன். அடுத்த நாள் வந்த போது சுற்றிலும் மக்கள் நின்றார்கள். அது மனிதன் என்பதனை தெரிந்த போது வேதனையாக இருந்தது.

இந்த இரண்டு கவிஞர்களின் கவிதைகளோடு என் கவிதையையும் இணைக்க மனம் வரவில்லை. என்றாலும் சற்று சம்பந்தம் உள்ள கவிதையாக இருப்பதால் இணைக்கிறேன்.

பிணங்களின் உலகம் வேறுபட்டது.

என் ஜன்னலைத் திறந்தால்
சகதியப்பிய முகத்துடன்
பெயர் தொலைத்துவிட்ட பிணம்
கிடக்கிறது.

அதன் அமைதி குலைக்கும் துருத்திய பற்களை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பிணத்தைப் பார்ப்பது பயமாக இருக்கிறது.
தெரிந்த முகங்களை தன் முகத்தில் பொருத்தி
நடுக்கமூட்டுகிறது.

சற்று விறைக்காமல் இருப்பின்
என்னைப் பார்த்து நகைக்கும் அல்லது
கூட்டிச் செல்லச் சொல்லும்.

தூர நின்று பார்த்துவிட்டு
நகரும் மூன்று மனிதர்கள்
பயந்து நெருங்கும் சில நாய்கள்
தாவித் தாவி நகரும் காக்கைகள்.

தவிர
வேறுயாரும் வருவதாக இல்லை.

இரவில் மழை நனைக்கலாம்
நாளை நான் வராமலிருக்கும் சமயத்தில்
வெய்யில் முகத்தைச் சுடலாம்.
கண்களை மட்டும் அந்தக் காக்கைகள்
எடுக்க
குடல் நாய்க்கென்று இருக்கக்கூடும்.

பரிமாணம் புரியாத
அநாதைப் பிணங்களின் உலகம் வேறுபட்டது.

எது குறித்தும் யோசிக்காமல்
நகர்ந்து விட வேண்டும்.


வா.மணிகண்டன்

**************************

7 எதிர் சப்தங்கள்:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

செத்தவீடு தொடர்பான தேவதச்சனின் கவிதையொன்றைச் சமீபத்தில் படித்தேன். என்னுடைய பதிவில் பகிர்ந்துகொள்ள முனைகிறேன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள மனுஷ்ய புத்திரனின் கவிதையை சித்தார்த், தன்னுடைய இடுகையொன்றிலும் குறிப்பிட்டிருந்தார்.

http://angumingum.wordpress.com/2006/07/12/azhivin_thoodhu

http://angumingum.wordpress.com/2006/07/12/rendezvous_with_death

வீரமணியின் இடுகையொன்றும் நினைவுக்கு வருகிறது.

http://kilukiluppai.blogspot.com/2006/05/blog-post_26.html

மஞ்சூர் ராசா said...

அன்பு மணி,
மூன்று கவிதைகளும் மூன்று வெவ்வேறு சூழ்நிலைகளில் எழுதப்பட்டிருந்தாலும் கரு ஒன்றே என்னும் போது அவை நம்மை சோகத்தில் ஆழ்த்துவது என்னவோ நிஜம்.

மனுஸ்ய புத்திரனின் கவிதையில் சோகம் அதிகம்.

உங்களின் கவிதையில் வார்த்தைகளை கொஞ்சம் குறைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

புதுமை விரும்பி said...

மிக நல்ல பதிவு. தொடர்ந்து, இது மாதிரியான பதிவுகளைக் கொடுங்கள்.

உங்கள் கவிதை மிக நன்றாக இருந்தது. குறிப்பாக இந்த வரிகள் ...

//பரிமாணம் புரியாத
அநாதைப் பிணங்களின் உலகம் வேறுபட்டது.

எது குறித்தும் யோசிக்காமல்
நகர்ந்து விட வேண்டும்.//

Suresh said...

நல்ல பதிவு... நல்ல கவிதை...வாழ்த்துக்கள்..

Chandravathanaa said...

என் தம்பி இறந்த செய்தியை, கர்ப்பமாக இருந்த எனது தங்கையைத் தொலைபேசியில் அழைத்துச் சொல்லி விட்டு அவள் கேவியதை நினைத்து நினைத்து சில மணி நேரங்கள் தனியாக இருந்து அழுதேன். அதன் பின் அதற்காக அவள் எழுதிய இந்தக் கவிதையைப் படித்து இன்னும் ஒருமுறை அழுதேன். இன்று உங்கள் பதிவைப் படித்த போது ஏதேதோ நினைவுகள் தாக்க மீண்டும் கண்கள் பனித்தன.

துளசி கோபால் said...

மரணம் சம்பந்தபட்ட விஷயங்கள் எப்பவும் ஒரு புதிர்தான்.

சுவாரஸியம் நிறைந்த ஒரு புதிர்.

குழலி / Kuzhali said...

வாழ்நாளில் மறக்கவே முடியாத சில நாட்களில் மரணசேதியை எதிர்கொண்ட நாட்களும் தான்... நல்ல பதிவு