Aug 7, 2025

அப்படித்தான் வேலையில் சேர்ந்தேன்

அப்பாவின் மறைவுக்குப் பிறகு அம்மாவுக்கு கடும் மன உளைச்சல். அவரது டிப்ரெஷனை புரிந்து கொள்ளாமல் முதிர்ச்சியே இல்லாமல் கோபத்தைக் காட்டுவேன். என்ன செய்வதென்றே தெரியாமல்  அவர் பொங்கிப் பொங்கி அழுவார். அப்படியான ஒரு சமயத்தில்தான் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் பேசியிருந்தேன். அவர் என் நலம் விரும்பி. முந்தாநாள் கிளம்பி சென்னைக்கு வந்த மல்லாங்கிணறு பெண் போலவேதான் இப்பொழுதும் பேசிக் கொண்டிருக்கிறார்.

நடந்து முடிந்திருந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.வி.சரவணனுக்கு கடுமையாக பணியாற்றி தோற்றிருந்தோம். அப்பொழுது சரவணனால் எதிர்தரப்பு வேட்பாளருக்கு நிகராக தேர்தலில் செலவு செய்ய முடியவில்லை. செலவு என்றால் வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம். தோற்றுவிட்டார்.

தமிழ்நாடு முழுக்கவும் பல தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க, திமுக கூட்டணி தோற்று, அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்திருந்தது.

‘மேடம், இதெல்லாம் செஞ்சிருக்கலாமே?’ என்று மனதுக்குள் தேர்தல் வியூக வகுப்பாளனைப் போல பிரஸ்தாபித்துக் கொண்டு சில தரவுகளைக் காட்டி தமிழச்சியிடம் கேட்டிருந்தேன்.

‘என்கிட்ட சொல்லி என்ன பண்ண? மாப்பிள்ளை கிட்ட பேசறீங்களா?’ என்றார். அப்பொழுது ஐ.டி நிறுவனத்தில் பணியில் இருந்தாலும் ஒவ்வொரு வார இறுதியிலும் அறக்கட்டளைப் பணிகள், சினிமா விவாதங்கள் என்று பெங்களூரில் தங்காமல் அலைந்து கொண்டிருந்தேன். அப்படியான ஒரு வார இறுதி நாளில் சென்னைக்கு வரவழைத்திருந்தார் தமிழச்சி தங்கபாண்டியன்.

ஆழ்வார்பேட்டையில் ஒரு காபி ஷாப்பில் காத்திருந்த என்னை சித்தரஞ்சன் சாலைக்கு அழைத்துச் சென்றார். முதலமைச்சரின் – அப்போதைய எதிர்கட்சித் தலைவரின் வீட்டுக்கு பக்கத்து வீடு. சிறு வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம். நாங்கள் காத்திருந்த சில நிமிடங்களில் சபரீசன் அவர்கள் வந்தார்.

ஐடி நிறுவனத்தில் பணியாற்றி, கூடவே கவிதை எழுதி, கதை எழுதி, நாவல் எழுதி, சினிமாவுக்கு திரைக்கதையில் பணியாற்றி எதையுமே நிரந்தரமாகச் செய்யாதது போல செய்து கொண்டிருந்த எனக்கு அது ஒரு வகையில் திருப்புமுனையான நாள். ஆனால் பதற்றமில்லாமல்தான் இருந்தேன்.

கையில் சில தாள்களை வைத்திருந்தேன். தமிழச்சி அவர்கள் ‘நம்பலாம்’ என்று சொல்லித்தான் என்னைப் பற்றி சிறு அறிமுகத்தைத் தந்தார். கையில் வைத்திருந்த தாள்களில் இருந்தவற்றை விவரித்தேன். அவருக்கு அநேகமாக என்னை பிடித்துவிட்டது.

‘Office Of MKS என்று ஒரு டீம் இருக்கிறது; திமுக ஐடி விங் இருக்கிறது…எதில் இணைய விருப்பம்’ என்று கேட்டார். ஆபிஸ் ஆஃப் எம்.கே.எஸ் நிர்வாகத்துக்கு சுனில் கனுகோலு பொறுப்பேற்றிருந்தார். ஐடி விங் பி.டி.ஆர் தியாகராஜன் வசமிருந்தது.

பெங்களூருவில் ஏரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் எனக்கு வருடம் 24 லட்சம் சம்பளம். உண்மையில் இங்கு வேலைக்கு சேர வேண்டும் என்ற எண்ணத்தில் நான் வந்திருக்கவில்லை. ஆனால் அவர் கேட்டவுடன் மனம் யோசிக்கத் தொடங்கிவிட்டது.

2016 தேர்தலில் ஓ.எம்.ஜி என்ற நிறுவனம் திமுகவுக்கு தேர்தல் வீயுகம் அமைக்கும் பணியைச் செய்தது. சுனில்தான் வியூக வகுப்பாளர். ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்திக்கும் ‘நமக்கு நாமே’ பரப்புரை உள்ளிட்டவற்றை அந்நிறுவனம்தான் திட்டமிட்டு செயல்படுத்தியது. தேர்தலில் திமுக தோல்வியடைந்த பிறகு அந்த அமைப்பைக் கலைத்திருந்தார்கள்.

சபரீசன் எப்பொழுதுமே கார்போரேட் ஸ்டைல். அடுத்தடுத்து வரும் தேர்தல்களை மனதில் வைத்து மீண்டும் அதே போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என Office Of MKS குழு உருவாக்கப்பட்டிருந்தது.

அரசியல் சார்ந்த நிறுவனத்தில் பணியில் சேரப் போகிறேன் என்று சொன்னால் அம்மா நிச்சயம் மறுப்பார் என்று தெரியும்.

‘வீட்டில் பேசிவிட்டு அடுத்த வாரம் வந்து சொல்கிறேன் சார்’ என்றேன். சிரித்தார். அப்பொழுதே சுனிலை அழைத்து அறிமுகம் செய்து வைத்தார். அடுத்த வாரம் வரும் போது பி.டி.ஆரையும் அழைத்து அறிமுகம் செய்வதாகச் சொன்னார். எனக்கு அதெல்லாம் ஆச்சரியமாக இருந்தது.

தமிழச்சிக்கு மிகுந்த சந்தோஷம். ‘நல்லா பேசுனீங்க…அடுத்த வாரம் வந்து சரின்னு சொல்லிடுங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

நான் பெங்களூரு செல்ல வேண்டும். தேனாம்பேட்டை சிக்னல் அருகில் ஒரு கட்டிடத்திற்கு முன்பாக நின்று எனக்கு நெருக்கமானவர்களையெல்லாம் அலைபேசியில் அழைத்து சந்திப்பு குறித்துச் சொன்னேன்.

சித்தி பையன் ஒருவர் திமுக இளைஞரணியில் இருந்தார். எனக்கு மூத்தவர். அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

‘தலைவர் வீட்டுக்கா போன?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டார். அடுத்தடுத்து நான் பேசிய ஒவ்வொருவருமே ஏதோவொரு வகையில் ஆச்சரியத்தைக் காட்டினார்கள். அதே எண்ண அலைகளுடனேயே கோயம்பேடு வந்து சேர்ந்திருந்தேன். 

பேருந்து நிலையத்தில் பெங்களூரு செல்லக் காத்திருந்த பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தேன். சென்னை வெக்கை முகம் முழுக்க அப்பியிருந்தது. எப்படியும் பணியில் சேர்ந்துவிடுவோம் என்றுதான் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

Jun 17, 2023

அப்படியே..அதன் போக்கில்

சென்னையில் இருக்கிறேன். 

ஏன் எழுதவில்லை என்றால் வேலை அந்த மாதிரி அமைந்துவிட்டது. சரி, அமைதியாக இருப்போம் என்று எழுதவில்லை.


தொடர்ச்சியாக எழுதுவது என்பது உண்மையிலேயே ஒரு தவம். எல்லாவற்றையும் மனத்தடை இல்லாமல் கொட்டிவிட ஒரு சுதந்திரமான மனநிலை அமைந்திருக்க வேண்டும். அஜெண்டா எதுவுமில்லாமல் நாம் பார்க்கும் மனிதர்கள், பேசியது, ரசித்தது, வாசித்தது என எல்லாவற்றையும் எழுதுவது உண்மையிலேயே சந்தோஷமானதுதான். பெங்களூரில் இருக்கும் வரை அப்படித்தான் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது. 


காலையில் பைக் எடுத்தால் அலுவலகம் செல்வதற்குள் ஒரு சம்பவமோ, கதையோ கிடைத்துவிடும். அப்படியே காலையில் கிடைக்கவில்லை என்றாலும் கூட வீடு திரும்புவதற்குள் கிடைத்துவிடும். கபகபகபவென்று எழுதிவிட்டு படிக்கும் போது ஏதோ பெரிய ஆசுவாசம் கிடைக்கும். மனமும் இளகிக் கிடக்கும். 


கடந்த சில வருடங்களில், சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட பிறகு  அனைவருமே அரசியல்வயமாகிவிட்டோமோ என்கிற எண்ணம் இருக்கிறது. அரசியல் நிலைப்பாடுகள் தாண்டி மனிதர்களை நேசிப்பது சாத்தியமா என்று தெரியவில்லை. எதைச் சொன்னாலும் எழுதினாலும் அதில் ஒரு வரி அல்லது சொல்லைக் கொண்டு விமர்சனம் செய்ய ஆட்கள் உண்டு. எதுக்கு வம்பு என்று அமைதியாகிவிடுவது உத்தமம். 


யாவரும் பதிப்பாளர் ஜீவகரிகாலன் நாவல் எழுதச் சொன்னார். கடந்த ஆண்டு எம்..பி.வைஷ்ணவா கல்லூரியில் பாடத்திட்டத்தில் மூன்றாம் நதி நாவலை வைப்பதாகச் சொல்லி தகவல் அனுப்பியிருந்தார்கள். இந்த ஆண்டும் தொடர்கிறதா என்று தெரியவில்லை. சிலர் எப்பொழுதாவதுஏன் எழுதவில்லைஎன்று கேட்கும் போதெல்லாம் எழுதிவிடலாம் என்றுதான் தோன்றும். கரிகாலனுடன் பேசிய பிறகு ஒரு நாவல் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.


நிசப்தம்.காம் என்ற டொமைன் காலாவதியாகிவிட்டது. ஒரு உந்துதலில் வாமணிகண்டன்.காம் என்ற டொமைன் பதிவு செய்துவிட்டேன்.


அரசியல் கலக்காமல், புத்தகங்கள், மனிதர்கள் பற்றி மட்டுமே எழுதலாம்தான். ஆனால் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று உண்மையிலேயே தெரியவில்லை.


கி..திலீபன் என்ற இளைஞரை உங்களுக்குத் தெரிந்திருக்கும். எங்கள் ஊர்ப்பக்கம்தான். தூக்கநாய்க்கன்பாளையம். சில நாட்கள் எங்கேயாவது வேலையில் இருக்கிறார். பிறகு வடமாநிலங்களிலோ அல்லது வடகிழக்கு மாநிலங்களிலோ சுற்றிக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு குட்டி லாட்ஜில் அறை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஊரின் வாழ்க்கை முறை, உணவு என்று பதிவு செய்து கொண்டிருக்கிறார். தெரியாதவர்கள் ஃபேஸ்புக்கில் தேடிப் பார்க்கலாம். இதையெல்லாம் பார்த்தால் வாழ்ந்தால் திலீபன் மாதிரி வாழ வேண்டும் என நினைத்துக் கொள்வேன்.


இன்னொருவரைப் பார்த்து ஆசைப்படுவதும் தவறுதான். 


சில நாட்களுக்கு முன்பாக ஒரு ஆட்டோக்காரர் சண்டைக்கு வந்தார். ‘ஒரு நாளைக்கு எத்தனை பேரைப் பார்க்கிறோம் தெரியுமா? இந்த வெயில்ல, இந்த ட்ராபிக்ல வண்டி ஓட்டிப் பாருங்க தெரியும்….இவன் குறுக்க வருவானா, அவன் ப்ரேக் போடுவானான்னு கணிச்சு கணிச்சே ப்ரஷர் ஏறுதுஎன்றார்.


சரியா போச்சு என நினைத்துக் கொண்டேன். அவரவருக்கு அவரவர் பிரச்சனை. 


எதையுமே பெரிதாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டியதில்லை. வாழ்க்கை அதுபாட்டுக்கு ஓடட்டும்.